தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 2 அக்டோபர், 2014

இந்தியாவின் தேசப்பிதா “காந்தியடிகள்”- ஓர் சிறப்பு பார்வை !


உலக வரலாற்றில் வேறு எவரும் பயன்படுத்தாத இரண்டு ஆயுதங்களான அகிம்சை, வாய்மை என்ற இரண்டு உன்னத பண்புகளை வாழ்ந்து காட்டியவர் தான் இந்தியாவின் தேசப்பிதா காந்தியடிகள்.
மஹாத்மா என்ற பட்டத்தால் கவுரவிக்கப்பட்ட ஒரே சரித்திர நாயகர்.
1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதி இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் எனும் மீனவ கிராமத்தில் , மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மற்றும் புத்திலிபாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
சிறுவயதில் இருந்தே, உண்மைமை பேச வேண்டும், உண்மையாக வாழ வேண்டும் என்ற கொள்கையோடு இருந்த காந்திக்கு தன்னுடைய 13 வயதிலேயே கஸ்தூரிபாய் என்ற பெண்ணை மணந்தார்.
கல்லூரிக் கல்வி வரை இந்தியாவிலேயே முடித்த காந்தி சட்டத்துறையில் பட்டம்பெற இங்கிலாந்து சென்ற அவர் 1891ம் ஆண்டு சட்டத்துறையில் பட்டம் பெற்றார்.
வழக்கறிஞர் தொழில் செய்ய வேண்டும் என்பதுதான் காந்தியின் விருப்பமாக இருந்தது. ஆனால் அது நிறைவேறாமல் போனது.
ஒரு வழக்குக் காரணமாக தென்னாப்பிரிக்கா சென்றார் காந்தி, அந்தப் பயணம்தான் காந்தியின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
ஆம்..தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் அவமானப்படுத்தப் படுவதையும், கொடுமைப்படுத்தப் படுவதையும் கண்டு திடுக்கிட்டுப்போன காந்தி அந்த அநீதிகளைக் கண்டு மனம் கலங்கினார்,
21 ஆண்டுகள் தென்னாப்பிரிக்கா வாழ்க்கையை முடித்துக்கொண்டு 1915ம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பிய காந்தியை இந்திய அரசியலில் ஈடுபடுத்தினார் கோபால கிருஷ்ண கோகலே என்ற தலைவர்.
முதலாம் உலக்போரின்போது இந்தியாவில் செயல்பட்டு வந்த பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு ராணுவத்திற்கு வீரர்களை சேர்க்க உதவினார் காந்தி.
அதற்குக் காரணம், போர் முடிந்த பிறகு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியர்களின் சுதந்திர தாகத்தைத் தீர்த்து வைக்கும் என்று அவர் நம்பியதுதான்.
ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கமோ நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது, இதனால் வெகுண்டெழுந்த காந்தி, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை வெளியேற்ற நாடு முழுவதும் ஒத்துழையாமை இயக்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.
வரி செலுத்த மறுக்குமாறு வற்புறுத்தினார். பல உயிர்களை பலி வாங்கினாலும் ஒத்துழையாமை இயக்கம் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
1929ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி பூர்னஸ்வரஜ் அதாவது முழுச்சுதந்திரம் என்ற தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியது.
அதற்கு அடுத்த ஆண்டு சத்தியாகிரகத்தின் மாபெரும் சக்தியை உலகுக்கு உணர்த்தினார் காந்தி.
அப்போது உப்புக்குகூட வரிவிதித்தது பிரிட்டிஷ் ஆட்சி. வரி அதிகமில்லையென்றாலும் ஏழைகளை அது வெகுவாக பாதித்ததால், அந்த வரியை எதிர்த்து புகழ்பெற்ற 'தண்டியாத்திரை' மேற்கொண்டார்.
அகமதாபாத்திலிருந்து 78 தொண்டர்களுடன் புறப்பட்டு 24 நாட்களில் சுமார் 300 கிராமங்களை நடந்தே கடந்து தண்டி கடற்கரையை அடைந்தார்.
இந்த தண்டியாத்திரையில் ஈடுபட்டதற்காக, அவரை மட்டுமல்ல அவருக்கு ஆதரவாக திரண்டியிருந்த சுமார் 60000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அப்போது தாங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரங்களுக்கு எதிராக ஒரு விரலை கூட உயர்த்தாமல் அகிம்சை காத்தனர் பலர்.
பிரிட்டிஷ் ஆட்சியின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச்செய்த பல சம்பவங்களுள் அந்த உப்பு சத்தியாகிரகம் மிக முக்கியமானது.
பொருத்தது போதும் என்ற பொங்கியெழுந்த காந்தி 1942 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தைத் தொடங்கி உடனடியாக சுதந்திரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அன்றிரவே பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை கைது செய்தது. ஆனால் சுதந்திர வேட்கை நாடு முழுவதும் காட்டுத்தீப்போல் பரவியது.
பல போராட்டங்களுக்குப் பின் ஒரு வழியாக 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது.
டெல்லி செங்கொட்டையில் பீரங்கிகள் முழங்க பல தலைவர்களும், மக்களும் அணி திரண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 5 மாதங்களே ஆகியிருந்த 1948 ம் ஆண்டு ஜனவரி 30ம் திகதி புதுடெல்லியில் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்தார் காந்தியடிகள்.
அன்றைய தினம் காந்தியடிகளை குனிந்து வணங்குவதுபோல பாவனை செய்துவிட்டு நிமிர்ந்தான் அந்த மதவெறியன்.
அவனை வணங்குவதற்காக கைகளைக் கூப்பினார் காந்தியடிகள். சற்றும் சிந்திக்காமல் தன் கைத் துப்பாக்கியைக் கொண்டு கைக்கூப்பியிருந்த காந்தியடிகளை நோக்கிச் சுட்டான் அவன்.
மூன்று குண்டுகள் அன்னலின் மெலிந்த தேகத்தைப் பதம்பார்த்தன. கைகள் கூப்பிய நிலையிலேயே ஹேராம்...ஹேராம் என்ற வார்த்தைகளை உதிர்த்து சரிந்தார் காந்தியடிகள்.
தன் கடைசி மூச்சுவரை அகிம்சையைப் போதித்த அந்த மாமனிதனுக்கு அமைதியான மரணத்தை வழங்க முடியாத கலங்கத்தை இன்றுவரை சுமந்து நிற்கிறது இந்தியா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக