கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லார்ரி பேஜ்ஜிடமிருந்த முக்கியமான பொறுப்புகள் பலவும் ஆண்ட்ராய்ட் பிரிவை நிர்வகிக்கும் சுந்தர் பிச்சையிடம் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளன. இந்த பொறுப்பு அதிகரிப்பு என்பது, சென்னை மனிதரான சுந்தர் பிச்சையின் கேரியரில் முக்கியமான ஏற்றமாக பார்க்கப்படுகிறது.
சென்னையை சேர்ந்த பிச்சை சுந்தர்ராஜன் (42), சுந்தர் பிச்சை என்ற பெயரால் புகழடைந்தவர். ஐஐடி காரக்பூரில் பேச்சிலர் இன் டெக்னாலஜி படிப்பை முடித்த பிச்சை, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் படிப்பும், பென்சில்வேனியாவின் வார்டன் பள்ளியில் எம்.பி.ஏவும் படித்தவர்.
முன்னணி நிறுவனமான கூகுளில் இவர் 2004ம் ஆண்டுதான் பணிக்கு சேர்ந்த போதிலும், திறமை காரணமாக வெகு விரைவில் உயர் பதவிகளுக்கு வந்தார். கூகுளின் முக்கியமான தயாரிப்பான ஆண்ட்ராய்டு பிரிவை நிர்வகிக்கும் பொறுப்பு பிச்சையிடம் அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி குரோம், கூகுள் ஆப்ஸ் ஆகியவற்றையும் பிச்சைதான் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் முக்கிய முடிவு ஒன்றை கூகுள் சி.இ.ஓ லார்ரி பேஜ் எடுத்துள்ளார்.
அதன்படி, கூகுளின் மேப்ஸ், கூகுள் பிளஸ், ஆய்வு, விளம்பரம் மற்றும் கட்டமைப்பு ஆகிய பிரிவுகளையும் பிச்சையின் பொறுப்பிலேயே கொடுத்துள்ளார் லார்ரி பேஜ். சுந்தர் பிச்சையின் பதவியில் எந்த மாற்றமும் அளிக்கப்படவில்லை என்ற போதிலும், கூடுதலான பொறுப்புகள், பிச்சையின் முக்கியத்துவத்தை கூகுள் உணர்ந்துள்ளதன் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. புதிதாக தரப்பட்டுள்ள பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள், இனிமேல் சுந்தர் பிச்சையின் கட்டுப்பாட்டில் வருகிறார்கள்.
இப்பொறுப்புகளில் இருந்து விடுபட்டுள்ள லார்ரி பேஜ், கூகுளின் வர்த்தகம், செயல்பாடு, கூகுள் எக்ஸ், நிர்வாக மேம்பாடு, சட்டம், நிதி மற்றும் வர்த்தகம் போன்றவற்றில் மட்டும் கவனம் செலுத்த உள்ளார். கூகுளை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல லார்ரி பேஜ் முழு நேரத்தையும் செலவிட இந்த மாற்றங்கள் உதவும் என்கிறது கூகுள் தரப்பு. சுந்தர் பிச்சை, 2012ல் கூகுள் ஆப்ஸ் பிரிவுக்கும், 2013ல் ஆண்ட்ராய்டு பிரிவுக்கும் பொறுப்பாளராக பதவி உயர்வுகளை பெற்றார் என்பது நினைவிருக்கலாம்.
கூகுளில் இணையும் முன்பாக, அப்ளைய்ட் மெட்டீரியல்ஸ் மற்றும் மெக்கின்சே அன்ட் கோ ஆகிய நிறுவனங்களில் சுந்தர் பிச்சை பணியாற்றியுள்ளார். சென்னை மனிதரின் பெயர் இப்போது உலகின் ஜாம்பவான் நிறுவனங்களான டுவிட்டர், மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் முக்கிய பதவிகளுக்கான தேடுதல் பட்டியலில் இடம் பெற்றிருப்பது பெருமையே.Sundar-Google