ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூரின் வரலாற்றில் பல சுவாரஸ்யங்கள் உண்டு.
ஜெய்ப்பூர் அரண்மனையின் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. அந்த வகையில் ஜெய்ப்பூரின் ஆச்சரியம் மற்றும் அதிசயங்களில் ஒன்றாக ஜந்தர்மந்திர் என்றழைக்கப்படும் வானியல் கோளரங்கமும் திகழ்ந்து வருகிறது.
ஜெய்ப்பூரின் பளிச்சிடும் சுற்றுலா இடங்கள்
ஜெய்ப்பூர் நகர அரண்மனை
உலகம் முழுவதுமிருந்து சுற்றுலா பயணிகள் இந்த அரண்மனைக்கு வந்து போகிறார்கள்.
1729 ஆம் ஆண்டு தொடங்கி 1732 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்த அரண்மனை பல்வேறு கட்டிடங்களை கொண்டு ஜொலிக்கிறது. மொகலாய, ராஜஸ்தானி கட்டிட கலையின் அடிப்படையில் கட்டப்பட்ட அரண்மனை இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜந்தர்மந்தர்
ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரின் இன்னொரு ஆச்சரியம் 'ஜந்தர்மந்தர்' என்னும் பாரம்பரிய வானியல் கோளரங்கம். ஜெய்ப்பூர் அரண்மனையையொட்டி அமைந்துள்ளது.
இது கி.பி1727-1734ஆம் ஆண்டுகளுக்கு இடையே இரண்டாம் ஜெய்சிங் மகாராஜா என்ற மன்னரால் அமைக்கப்பட்டது.
வானவியல் கருவிகள் இங்குள்ளன. ஜந்தர் மந்தரின் உண்மையான பெயர் 'யந்த்ரா மந்த்ரா'. இதில் 'யந்த்ரா' என்றால் கருவிகள், 'மந்ந்ரா' என்றால் சூத்திரம். அதாவது கருவிகளின் துணையுடன் வானவியல் கணக்கீடுகளை அறிந்து கொள்ளுதல் என்பது இதன் பொருளாகும்.
இதே போல ஜந்தர்மந்தர்கள் டெல்லி, காசி, உஜ்ஜைனி, மதுரா போன்ற இடங்களில் இருந்தாலும் ஜெய்ப்பூர் ஜந்தர்மந்தரே மிகப்பெரியது.
இங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களும் கருவிகளும் நேரத்தை அறிந்து கொள்ளவும்,கிரகணங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளவும், கோள்களின் சாய்மானங்களை அறியவும் என வானவியல் தொடர்பான கணக்கீடுகளுக்கு பயன்பட்டு வந்துள்ளன.
யுனெஸ்கோவின் உலக பண்பாட்டுச் சின்னங்களின் பட்டியலில் 2010ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளது.
கல்டா கோவில்
ஜெய்ப்பூரில் அமைந்துள்ள இந்த கல்டா கோவில் ஒரு வைணவத் தளமாகும். கல்வா என்னும் துறவி இங்கு பல ஆண்டுகளாக தியானத்தில் ஈடுபட்டு வந்தார். ராஜஸ்தானின் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோவில் புரதான சின்னங்களுள் ஒன்றாகவே காட்சி அளிக்கிறது.
ஆமர் கோட்டை
ஜெய்ப்பூரிலிருந்து 11 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஆமர் கோட்டை மிகவும் பிரம்மாண்டமாக காட்சி தருகிறது. ராஜபுத்திர கட்டிடக் கலையின் சான்றாக விளங்குகிறது.
பளபளக்கும் சிவப்பு கற்களின் உதிவியோடு, பளிங்கு கற்களை சேர்த்து நேர்த்தியாக அமைந்துள்ள இந்த கோட்டை ஐந்து அடுக்கு பாதுகாப்பு முறையினுள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோட்டையை ஒட்டியே அமைந்துள்ள அரண்மனையும் சிறப்பு மிக்கதாக திகழ்கிறது. ஜெய்ப்பூர் அரண்மனைக்கு முன்னர் இந்த இடத்தில் தான் மன்னர்கள் வசித்து வந்தனர்.
நஹர்கர் கோட்டை
இதுவும் ஒரு வித்தியாசமான கோட்டை. 1734 ல் கட்டப்பட்ட இந்த கோட்டை ஜெய்ப்பூரின் அரணாக விளங்கியது. இன்று ஜெய்ப்பூரின் அடையாள சின்னமாக விளங்குகிறது.
மாலை நேர சூரிய அஸ்தமனத்தையும், ஜெயப்பூரின் அழகிய காட்சியையும் காண மக்கள் வெள்ளம் இங்கு கூடுகிறது. மேலும் கண்களின் பார்வைக்கு வித்தியாசத்தையும், செவிக்கு வரலாற்றையும் இது தரும் என்பதில் மாற்றமில்லை.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக