முழுமையான தானிய வகையை சேர்ந்த ஓட்ஸில், பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன என பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
வைட்டமின் இ, துத்தநாகம், நார்ச்சத்து, செலினியம், காப்பர், இரும்புச்சத்து, மாங்கனீஸ், புரதம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.
இதனால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், பருமன் போன்ற நோய்களை கட்டுப்படுத்திக் குறைக்க முடியும் என்பதும் ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஓட்ஸில் ‘ஓல்டு ஃபேஷண்டு ரோல்டு’ மற்றும் ‘ஸ்டீல் கட்’ (ஐரீஷ் அல்லது ஸ்காட்டிஷ் ஓட்ஸ் என்றும் சொல்வார்கள்) என இரண்டு வகைகள் உள்ளன.
இந்த இரண்டும்தான் ஆரோக்கியமானவை. ‘ஓட்ஸ் நல்லது’ என்பதற்காக அளவுக்கு மீறி சாப்பிடக்கூடாது.
இதிலுள்ள லோ கிளைசெமிக் இண்டெக்ஸ் (அதனால்தான் நீரிழிவுக்காரர்களும் ஓட்ஸ் எடுத்துக்கொள்ளலாம்) காரணமாகவும் பசி கட்டுப்படுத்தும் தன்மையினாலும் எடை குறைக்க விரும்புவோருக்கு அறிவுறுத்தப்படுகிறது.
ஓட்ஸ் என்பது கார்போஹைட்ரேட்டும் நார்ச்சத்தும் கலந்தது என்பதால், இதை எடுத்துக்கொள்ளும் அளவு மிக முக்கியம்.
இதில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன, இவைகள் கொழுப்பு சத்து மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்க உதவுகிறது.
ஓட்ஸ் என்றாலே கஞ்சியாகத்தான் சாப்பிட வேண்டும் என்று இல்லை. ஓட்ஸ் பக்கோடா, ஓட்ஸ் புட்டு, ஓட்ஸ் அல்வா என்று வெரைட்டியாகவும் செய்து சாப்பிடலாம்.
ஓட்ஸ் குழந்தைகளுக்கு வரும் ஆஸ்துமாவுக்கான வாய்ப்புகளை குறைப்பதாகவும், மாவுச்சத்து அல்லாத உணவுப்பொருட்களோடு ஓட்ஸை சேர்த்துக் கொள்ளும்போது வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அதிக அளவில் கிடைக்கிறது என்றும் மற்றொரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனவே தினசரி ஒரு கப் ஓட்ஸ் உணவை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது என்று அறிவுறுத்தப்படுகிறது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக