தீபாவளி என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது வெடியும், பலகாரமும் தான். புத்தாடை உடுத்தி இனிப்புகள் வழங்கி உறவினர்களுடன் தீபாவளியை கொண்டாடுவதே ஒரு தனி சிறப்பு.
பெரும்பாலானோர் இனிப்புகள் செய்வது என்றாலே கடினம் என நினைத்து கடைகளில் இனிப்புகளை வாங்கி சாப்பிடுகின்றனர்.
ஆனால் இனிப்புகளிலும் சிலவற்றை எளிதாக நாம் செய்து விட முடியும். அப்படி செய்யக்கூடிய சில பலகாரங்களை பற்றி இப்போது பார்ப்போம்.
1. முள்ளு முறுக்கு
தேவையான பொருட்கள் பச்சரிசி - 3 கப், கடலைப் பருப்பு - 1 கப், பயத்தம் பருப்பு - 1/4 கப், எள் தேய்த்து காய்ந்தது - 1/2 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், கட்டி பெருங்காயம் - சிறிதளவு, வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - பொரிப்பதற்கு.
செய்முறை
சுத்தம் செய்து கழுவி காய வைத்த அரிசி, கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு மூன்றையும் மெஷினில் மாவாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவில் உப்பு, பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
பிறகு வெண்ணெய், எள், சீரகம், தேவையான தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்கு பிசையவும். முள் முறுக்கு அச்சில் தேவையான மாவைப் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழியவும். பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
2. மைசூர் பாகு
தேவையான பொருட்கள்கடலை மாவு - 1 கப், சர்க்கரை - 2 கப், நெய் - 3 கப், தண்ணீர் - 1 கப்.
செய்முறை கடலை மாவை லேசாக நெய் ஊற்றி வாசனை போக வறுத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்துப் பாகு காய்ச்சவும். ஒற்றைக் கம்பிப் பதத்துக்கு வந்ததும் (ஒரு நூல் கம்பி பதம்) கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறவும்.
அதே நேரத்தில், இன்னொரு அடுப்பில் நெய்யைச் சூடாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும். மாவும் பாகும் நுரைத்துப் பொங்கி வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டவும். தட்டை ஆட்டக்கூடாது. அப்படியே செட்டாக விட வேண்டும். அப்போதுதான் சூடான ட்ரெடிஷனல் மைசூர் பாகாக வரும். சிறிது சூடாக இருக்கும்போதே கத்தியால் துண்டுகள் போடவும்.
3. அதிரசம்
தேவையான பொருட்கள்பச்சரிசி மாவு - 2 கப், வெல்லம் - 2 கப், தண்ணீர் - 1 கப், எண்ணெய் - தேவைக்கு, ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்.
செய்முறை
வெல்லத்தைப் பொடித்து, தண்ணீரில் கரைத்து, கல், மண் போக வடிகட்டி, ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி பாகு காய்ச்சவும். முற்றின கம்பிப் பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
உடனே அரிசி மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக பாகில் கொட்டி கை விடாமல் கிளறவும். ஏலக்காய் தூள் சேர்த்து, கிளறிய மாவை சுத்தமான வெள்ளைத் துணி போட்டு வாயை மூடி கட்டி தட்டாமல் வைக்கவும். மறுநாள் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வாழை இலையில் எண்ணெய் தடவி வட்டமாக தட்டவும்.
தட்டியவற்றை எண்ணெயில் போட்டு நன்கு சிவந்தவுடன் எடுத்து வடித்து வைத்துக் கொள்ளவும்.(பச்சை அரிசியை ஊற வைத்து வடித்து, நிழலில் உலர்த்தி, மெஷினில் அரைத்து அதிரசம் செய்தால் மிருதுவாக இருக்கும். அதிரசத்துக்குப் பாகுதான் முக்கியம். ஒரு தட்டில் தண்ணீர் விட்டு 1/4 டீஸ்பூன் பாகை விட்டால் கரையாமல் இருக்க வேண்டும். இதுதான் சரியான பதம்.
4.ரவா லட்டு
தேவையான பொருட்கள்பாம்பே ரவை - 1/2 கிலோ, சர்க்கரை - 1/2 கிலோ, ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன், முந்திரி, திராட்சை - தலா 50 கிராம், நெய் - 1/4 கிலோ அல்லது தேவைக்கு.
செய்முறை
ரவையை வெறும் கடாயில் நிறம் மாறாமல் வறுக்கவும். சர்க்கரையை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். வறுத்து உடைத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூளுடன் கலக்கவும்.
இப்போது வறுத்த ரவை, பொடித்த சர்க்கரை, ஏலக்காய் தூள், உடைத்த முந்திரி, திராட்சை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். நெய்யைக் காய்ச்சி அதில் சிறிது, சிறிதாக ஊற்றி உருண்டை உருட்டும் பதத்துக்கு வந்ததும் நெய் ஊற்றுவதை நிறுத்தி விடவும். சூடாக இருக்கும் போதே உருண்டைகளாகப் பிடிக்கவும்.
(ரவையை பொடித்தும் ரவா லாடு செய்யலாம். இத்துடன் சிலர் 1/2 கப் வறுத்துப் பொடித்த பாசிப் பருப்பு தூள் சேர்த்தும் செய்கிறார்கள். சிலர் வறுத்த தேங்காய் சேர்த்தும் செய்வார்கள். ஆனால், உருண்டை பிடிக்க நெய் சூடாக இருக்க வேண்டும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக