தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, April 5, 2017

அகத்திய முனிவரும் அடுத்த பக்கமும்!

தமிழர் தகவல் 5.4.2017 இதழுக்கான எனது கட்டுரை
அகத்திய முனிவரும் அடுத்த பக்கமும்!
தமிழ் மக்களாலும் இந்து மதத்தினராலும் பயபக்தியோடு போற்றப்படுபவர் அகத்திய முனிவர். இந்திரன் எழுதிய ஐந்திரம் என்ற இலக்கண நூலைக் கற்றுத் தொல்காப்பியத்துக்கு முன்னரே தமிழுக்கு அகத்தியம் என்ற இலக்கண நூலைச் செய்து தந்தவர் அகத்தியர் என்பர் தமிழ் முன்னோடிகள்.
முருகக் கடவுளோடு நேரடித் தொடர்புள்ளவர். அவரின் கமண்டலத்தைப் பிள்ளையார் காக வடிவில் சென்று கவிழ்த்ததால் உருவானதே காவிரி என்று இந்து மக்களும் அகத்தியரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்.
இத்தகைய தவ வலிமையும் கொண்ட அகத்தியரின் முதல் தவறு வில்லவன் வாதாபிச் சகோதரர்கள் கதையில் தொடங்குகின்றது.
தேவர்களுக்குச் சாதகமாக நடப்பவர்கள் என்ற காரணத்துக்காக முனிவர்களையும் பிராமணர்களையும் கொன்றொழிக்கும் நோக்கோடு பிரம்மாவிடம் வில்லவன் வாதாவி என்கின்ற அசுர சகோதர்கள் விசித்திரமான வரத்தைக் கேட்டார்கள்.
நான் விரும்பும் உருவத்தை எடுக்க வேண்டும் என்று தம்பி வாதாபியும் என் தம்பி இறந்தால் தம்பி வா என்று நான் அழைத்தால் அவன் எங்கிருந்தாலும் உயிர் பெற்று என்முன் வரவேண்டும் என்று வில்லவனும் வரம் பெற்றுக் கொண்டார்கள்.
முனிவர்களைக் கண்டதும் வாதாபி ஆட்டுக் கடா உருவம் எடுத்துப் புல் மேய வில்லவன் முனிவர்களை தன் ஆச்சிரமத்துக்கு அழைத்து தம்பியாகிய ஆட்டுக் கடாவைக் கொன்று சமைத்து உணவு கொடுப்பான்.அவர்கள் உண்டதும் தம்பி வா என்பான். வாதாபியும் உண்ட முனிவர்களின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வர முனிக் கொலை தாராளமாக நடந்தது.
இந்த நிலை ஒருமுறை அகத்தியருக்கும் வந்து வாதாபியை வெளியே வரவிடாமல் செமிக்கச் செய்தார் அவர் என்பது புராணக் கதை. இதன் உண்மை பொய் ஒருபுறம் இருக்க துறவறம் பூண்ட அகத்தியன் தன் தவத்தின் அருளுக்கு ஒவ்வாத மாமிசத்தை உண்டிருக்கின்றான். அதை உண்டு கொண்டுதான் முருகப் பெருமானோடு தொடர்பு வைத்திருந்தான் என்றால் முருகனும் இங்கே குற்றவாளி ஆகின்றான்.
தனக்கு வரும் துன்பத்தைத் தாங்கிக் கொள்வதும் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் வாழ்வதும் தான் தவம். இது வள்ளுவர் சொன்ன தவத்தின் வடிவம்;
.
உற்ற நோய் நோற்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்தின் உரு
( திருக்குறள் - தவம் - குறள் 261 )
அகத்தியர் முந்தியவர் குறள் பிந்தியது என்ற வாதத்துக் கெல்லாம் இங்கே இடமில்லை. காரணம் அறத்திலே முந்திய அறம் பிந்திய அறம் என்று ஒன்று இல்லை. அதனால் தான் கம்பன் திறம்பு காலத்து யாவையும் சிதையினும் சிதையா அறம் என்று அடைமொழி கொடுத்துப் பாடினான்.
இந்த உணவுக் குற்றத்தைச் செய்த அகத்தியன் தன் முன்னோரான பிதிர்க்கள் தங்களுக்குப் பிண்டம் கொடுக்கப் பிள்ளையைப் பெற்றுக் கொள் என்று சொன்னார்கள் என்று சொல்லிக் கொண்டு விதர்ப்ப நாட்டு மன்னனிடம் போய் உனக்குப் பிறக்கும் பெண் குழந்தையை எனக்கக் கல்யாணம் கட்டி வை என்றான். முனிவனின் செல்வாக்குக்குப் பயந்து மன்னனும் வாக்குக் கொடுக்க உலோப முத்திரை என்ற அந்தப் பெண் குழந்தை பிறக்க ஒருநாள் வந்து குழந்தைத் திருமணத்துக்கு நின்றான் அகத்தியன்.
மன்னனுக்கு வறிய துறவிக்கு மகளைக் கொடுக்க விருப்பம் இல்லை. ஆனால் உலோப முத்திரை அப்பா நீ வாக்குக் கொடுத்து விட்டு மறுக்காதே. முனிவனுக்கு பயந்து எந்த ராஜ குமாரனும் என்னை மணக்க முன்வர மாட்டான். இது தேவையா உனக்கு. என்னை முனிவனுக்குக் கட்டி வை என்றாள்.
திருமணம் நடந்தது. ஆபரணங்களையும் உடைகளையும் கழற்றிக் கொடுத்து விட்டு மரவுரி தரித்து வா என்றான் முனிவன். உலோப முத்திரை அப்படியே செய்தாள். அரண்மனையை விட்டுக் காட்டிலே கங்கா துவாரத்தில் ஆச்சிரமத்தில் வாழ்ந்தாள்.
முதியவனான அகத்தியன் இளமை நலம் மிக்க உலோப முத்திரையை ஒருநாள் குழந்தையை பெற அழைத்தான். அதுக்கொன்றும் தடையில்லை. ஆனால் என் அப்பா வீடு போல வசதியான இடத்தில் நாம் கூட வேண்டும் என்று சமயோசிதமாக மறுத்தாள் அவள்.
பரதேசியான நான் பணத்துக்கு எங்கே போவேன்? என் தவ வலிமையைக் கொண்டு அனைத்தையும் உருவாக்கினால் என் தவம் அழிந்து போகும் உனக்கு அது விருப்பமா என்றான் முனிவன்.
நான் அப்படிச் சொல்லவில்லை. தவத்தைச் செலவு செய்யாமல் போதிய தனத்தைத் தேடிக் கொண்டு வாருங்கள் பிறகு கூடுவோம் என்று தப்பித்தாள் உலோப முத்திரை தற்காலிகமாக. முனிவன் எப்படி உழைத்துப் பணம் சேர்ப்பான் என்ற எண்ணம் அப்பாவியான அந்தப் பெண்ணுக்கு.
முனிவனும் விடவில்லை. ஊர் ஊராக பொருள் தேடி அலைந்ததான். அந்தக் காலத்திலே தான் வாதாபியைக் கொன்றான். உழைக்காமல் அரசர்களிடம் இரந்து பொருள் பெற்று வந்து உலோப முத்திரையோடு கூடி ஒரு மகனைப் பெற்றுக் கொண்டான்.
மதத்தின் செல்வாக்கும் சமூக அந்தஸ்தும் சேர்ந்து முதியவன் ஒருவனுக்கு இளம் பெண்ணைப் பரிசு வழங்கிப் பாழ்படுத்தி மகிழ்ந்த செய்தி இன்று போல அன்றும் அகத்திய முனிவனின் மறுபக்கத்திலும் உண்டு. அகத்தியா! இங்கே வாப்பா! பாவம் அந்தக் குழந்தையை விட்டுவிடு என்று முருகன் கூடச் சொல்லவில்லை. ஓ! வள்ளியும் குழந்தை தானே!
இரா.சம்பந்தன்
-

Image may contain: 2 people, people sitting and outdoor

Rasiah Gnana

அப்படியானால் அகோரிகள் மாமிசம் உண்ணுகிறார்கள்,கேட்டால் ஆசையை துறந்து பசிக்கு மட்டுமே உண்பதால் அதில் இச்சைக்கு இடமில்லை,கிடைத்ததை உண்டு பசி காக்கிறோம் என்கிறார்கள்!இதைத்தான் உண்பேன் என்பது,இதைத்தான் உடுப்பேன் என்பது,இப்படித்தான் வாழ்வேன் என்பதும் ஆசைதானே!அப்படிப்பார்க்கையில் சந்ததிக்காக மணம் முடிப்பதும் பசிக்கு உண்பதும் கடமையை மட்டும் செய்வதும் தவறல்லவே!ஆசையில்லை என்றானபின் குமரி,கிழவி பேதமெல்லாம் வருமா?பழத்தில் பழசுதானே சிறந்தது,கோழியில் குஞ்சை சத்து என்று ரசித்து உண்கிறோம் !ஆசையை துறந்தால் சைவம்,அசைவம்,இளசு பழசு என்ற பேதம் இல்லையே!

No comments:

Post a Comment