தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 7 ஏப்ரல், 2017

பேசாப் பொருளைப் பேசுவனோ? இரா.சம்பந்தன்!

தங்கத் தீபம் பத்திரிகை ஆண்டு விழாவில் (7.4.2012) பேசாப் பொருளைப் பேசுவேனோ என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில் கலந்து கொண்டு பாடிய கவிதை
பேசாப் பொருளைப் பேசுவனோ?
அரங்கத் தலைமைக்கு அணிசெய்யும் அண்ணர்க்கும்
தரங்கொள் கவியுரைக்கும் தங்கை சுல்பிகா
விரும்பத் தகுதமிழை விருந்தாயப் படைக்க வந்த
கரும்பு சிவாஅண்ணர் மற்றும் சபையோர்க்கும்
இரும்புப் பிடியாக இழுத்த விழாவினர்க்கும்
இறைவன் கருணைக்கும் இனிய வணக்கங்கள்!
துரும்பென்னைத் தூனாக்கும் நவமண்ணர் பாதத்தைத்
தொட்டுக் கவியுரைக்கத் தொடங்குகிறேன் நன்றியுடன்!

பேசாப் பொருளைப் பேசிடுவேன் அதனாலே
மாசாகிக் கிடக்கிற மனிதமனம் பெருமையுறும்!
காசாசை ஒன்றாலே கசங்கிப் போயின்று
தேசாதி தெசமெலாம் திரியும் தமிழ்க்குலமே
தொன்மை மொழியொன்றும் தோற்றம் தெரியாமல்
தன்னை வளர்த்தவினம் தமிழினமே என்கின்றோம்!
என்ன கொடுமையிது எழுதிவைக்க வில்லையென்ற
உண்மை தெரியாமல் உழைக்கின்றோம் தழிழுக்கு!
காக்கை வடையெடுத்த கதைசொல்லிக் கருவினிலே
கேட்டை வளர்த்ததமிழ்ப் பள்ளிகளில் படித்திட்டோம்!
ஆமைமுயல் கதையால் அழகாகச் சந்தேகத்
தீமை வளர்த்ததல்லால் தேடியது ஒன்றுமில்லை
மூதாட்டி களம்புகுந்து முலையறுக்க முயன்றகதை
பாராட்டும் புறநூலைப் புத்தகமாய்ப் படித்திட்டோம்!
எட்டாத பழங்களெலாம் எடுக்கவழி தெரியாமல்
முட்டாளாய்ச் சீச்சீ புளிக்கும் எனவிருந்தோம்!
தொட்டில் பழக்கமெலாம் சுடுகாடு வரையுமென்ற
பட்டுத் தெளிந்தமனம் படித்தோர்க்கும் வரவில்லை!
கையில் வில்லெடுத்துக் கணைதொடுக்கும் முன்னாலே
ஐயோ மணிமுடிக்காய் குழிபறித்த இனமிதடா
குறிவைக்கும் முன்னாலே கூட இருந்தோர்க்குப்
பொறிவைக்க முற்பட்டுப் பொருந்தாச் செயல்புரிந்தோம்!
தலைதெறிக்க ஓடிவந்து தங்கிவிட்ட கனடாவில்
நிலைதரிக்கும் இனமாக நிக்க முடியவில்லை!
சட்டத்தை மதிக்காத சாக்கடைகள் கூட்டத்தால்
கெட்டுக் கிடக்கிறது கேவலமாய்த் தமிழ்ச்சாதி!
களவெங்கே நடந்தாலும் கால்பங்கு தமிழரெனும்
அளவு கிடைக்கிறது அரசுக்கு எங்களினால்!
பேசரிய இலக்கியங்கள் பெரிதாய்ப் புகழ்ந்தவினம்
மோசடிக்கு பெயர்வாங்கி முடங்கிக் கிடக்கிறது!
அடிதடிகள் ஓய்தாலும் கடனட்டைக் கபப்புறுதிக்
கெடுபிடிகள் குற்றங்கள் குரல்கேட்கக் காண்கின்றோம்!
கன்னை பிரிந்தெதிலும் காலத்தைக் கடத்துகின்ற
தன்மை ஒன்றைத்தான் தமிழரிடம் பார்க்கின்றோம்
தொண்டுத் திலகமெனத் தேவைப்படும் பேருக்காய்
தண்டு வடம்மடியத் தாழ்பவரைக் காண்கின்றோம்
எழுத்து முனையாலே எத்தனையோ மனதுகளை
இழுத்துக் கிழிப்பதனை இங்குதான் காண்கின்றோம்!
வீட்டில் குறையிருக்க வெளிவீதி வலம்வந்து
பாட்டில் ஊர்திருத்தும் பாவலரைக் காண்கின்றோம்
குப்பை மேடுகளைக் கோபரங்கள் எனச்சொன்னால்
இப்ப புகழ்கிடைக்கும் இந்தக் கனடாவில்!
எண்ணெய்த் திரிவிளக்கை எரிமலையாக் காட்டிவிட
எத்தனையோ எழுத்தாளர் இங்கே இருக்கின்றார்.
நெல்லுக்கு இறைத்தநீர் நிலத்தில் எமக்குமென்னும்
புல்லுக்கும் இடமாகிப் போனதையோ இக்கனடா!
மாற்றானைப் போற்றும் மரியாதை தெரியவில்லை
போற்றாரைப் பொறுக்கும் பொறுமை எவர்க்குமில்லை!
நெருஞ்சிக்கு நாலுமுனை இருப்பதெல்லாம் நன்மையல்ல
தெருஞ்சுக்கோ தமிழினமே தொல்லை தொடராது!
மழைநனைத்த தலைதுடைக்க மானிடமே துணிகொடுப்பாய்
குடைகொடுக்க நினைக்காதே கொடுப்பதனால் பலனில்லை!
களிமண்ணில் தணல்போட்டு கைவலிக்க வீசுவதால்
ஒளிவெள்ளம் கிடைக்காது ஒற்றுமையாய் இருக்கப்பார்!
கடல்நீரைக் காலாலே கலக்கிச் சேறாக்க
உடல்நோக உழைத்தாலும் உன்னாலே முடியாது!
செய்தபிழை தெரிந்துவிட்டால் சேதம் தணித்திடலாம்
எய்தவனைக் காப்பாற்ற அம்புகளை எதிர்க்காதே!
கைதவறி பொருள்விழுந்தால் கைகளைநீ திட்டாதே
மெய்தவறிப் போனமனம் செய்தபிழை அதுவன்றோ?
சத்தியத்தை வேதமெனும் சந்ததியே தளை க்குமல்லால்
பத்தியத்தை பார்த்தாலும் பலனொன்றும் கிடைக்காது.!
ஒன்றுபட்டுப் பொங்குவதால் ஒன்றும் நடவாது
தொன்றுதொட்டு நின்றவறம் தோற்றதில்லை அவனியிலே!
அன்புத் துடைப்பத்தால் அகம்முழுக்கப் பெருக்கிவிட்டால்
என்றும் புகழ்நிலைக்கும் எல்லோர்க்கும் இந்நாட்டில்!
நானாக நின்றிடுவேன் நினைத்துக்கொள் தமிழக்குலமே
வீணாகிப் போனதெலாம் வேண்டுமென நினையாதே!
காந்தி பிறந்தவிடம் குஜராத்து என்பதனால்
குஜராத்துக் காரனெலாம் காந்தியென எண்ணாதே!
உண்மையும் சத்தியமும் ஊற்றெடுக்க மாட்டாத
எண்ணம் எதனாலும் ஏதமில்லைத் தமிழனுக்கு!
தோல்விகள் குற்றமல்ல தோல்வியை மறுத்துரைக்கும்
கேள்விதான் குற்றமமடா தம்பி தமிழனுக்கு!
வீழ்ந்தது குற்றமல்ல வீழவில்லை என்றுரைக்கும்
ஆழ்ந்த பொய்தானே அவனியிலே குற்றமடா!
பிழைசெய்தோம் எங்கேயோ பிழையைச் சரிசெய்து
முறைசெய்வோம் எண்ணிவிடு முன்னுக்கு வந்திடலாம்!
பேசாப் பொருள்பேசச் சொன்னதனால் இங்குவந்து
கூசாமல் பட்டதெல்லாம் கூறிப் பிரிகின்றேன்!
ஏசாமல் ஏற்று என்கவியை அவையோரே
வீசாமல் வாழ்த்துங்கள்! வாழுங்கள் பல்லாண்டே!
வணக்கம்

PDF Print E-mail
Written by இரா.சம்பந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக