தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

தமிழர் கணக்கு!

தமிழர்களுக்குள் நுணுக்கமான கணக்கிடும் திறன் நிரம்பி வழிந்தது. இன்றைக்கு ஒன்றிற்குள் முக்கால், அரை, கால்.. கடந்தாலே அதனினும் குறைந்த அளவீடுகளுக்கு தமிழ் பெயர் தெரியாது தவித்து விடுவோம். ஆனால் அன்றைக்கு ஒரு குக்கிராமத் தமிழரும் அற்புதமாக கணக்கிடுதலுடன், அதற்கான தமிழ் வார்த்தையும் அறிந்து வைத்திருந்தார்.
மூன்றின் கீழ் நான்கு முக்கால், ஒன்றின் கீழ் இரண்டு அரை, ஒன்றின் கீழ் நான்கு கால் வரை தெரிந்திருக்கிற நமக்கு ஒன்றின் கீழ் ஐந்து (1/5) ‘நாலுமா’ என்றால் வியப்பு பிறக்கிறது. இதேபோல் 3/16 மூன்று வீசம், 3/20 மூன்றுமா, 1/8 அரைக்கால், 1/10 இருமா, 1/16 மாகாணி (வீசம்), 1/20 ஒருமா, 3/64 முக்கால் வீசம், 3/80 முக்காணி, 1/32 அரை வீசம், 1/40 அரைமா, 1/64 கால்வீசம், 1/80 காணி, 3/320 அரைக்காணி முந்திரி, 1/160 அரைக்காணி, 1/320 முந்திரி  என்று மிக நுணுக்கமாய் வகுக்கப்பட்ட அளவீடுகள் மக்களின் அன்றாட வாழ்க்கை பயன்பாட்டில் அன்று இருந்தன.
இதுபோலவே, நம்மவர்கள் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்பதாக கணக்கிடுதலை நால்வகைப் படுத்தியதுடன், அளத்தல் முறைகளையும் வகுத்திருந்தனர். பொருட்களின் தன்மைக்கேற்ப இந்த அளத்தலை எண்ணல், நிறுத்தல், முகத்தல், பெய்தல், நீட்டல், தெரித்தல், சார்த்தல் என வகைப்படுத்தினர். பொருட்களை 1, 2, 3 என எண்ணி அளவிடுதல் ‘எண்ணல்’ ஆகும்.
பொருளின் எடையை நிறுத்து அறிவது ‘நிறுத்தல்’ என்றும், நெய், பால் போன்றவற்றை முகர்ந்து அளப்பதால் அது ‘முகத்தல்’ ஆனது. தானியங்களை படி, பக்கா போன்றவற்றில் பெய்து அளத்தல் ‘பெய்தல்’ எனவும், அளவு, நீள, அகலங்களை அளப்பது ‘நீட்டல்’ எனவும் அழைத்தனர். வினாடி, நாழிகை, நாள், வாரம், ஆண்டு உள்ளிட்ட கால நேரத்தை அளத்தலை ‘தெரித்தல்’ என்றும், ஒலி, நிறம், உரு முதலியவற்றை ஒப்பிட்டு அளக்கும் முறையை ‘சார்த்தல்’ என்றும் பிரித்து வைத்திருந்தனர்.
360 நெல் ஒரு செவிடு, 5செவிடு ஒரு ஆழாக்கு, 2ஆழாக்கு 1 உழக்கு, 2 உழக்கு 1 உரி, 3 உழக்கு மூவுழக்கு, 1 உரி ஒரு நாழி, 8நாழி(படி), ஒரு குறுணி(மரக்கால்), 2 குறுணி ஒரு பதக்கு, 3 குறுணி ஒரு முக்குறுணி, 2 பதக்கு(4குறுணி) ஒரு தூணி, 2 தூணி 8குறுணி, 3 தூணி ஒரு கலம், 5மரக்கால் ஒரு பறை, 80பறை அல்லது 400மரக்கால் ஒரு கரிசை என்ற அளவைகள் நம்மவர்களிடம் இருந்தன. இதுபோலவே அணு 8கொண்டது பன்னுனி, 8 பன்னுனி கொண்டது ஒரு நுண்மணல், 8 நுண்மணல் ஒரு எள்ளு, 8எள்ளுகள் ஒரு நெல்லு என்ற நுண்ணிய அளவைகளும் பயன்பாட்டில் இருந்தன.
http://thuliyam.com/?p=64540

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக