தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

நல்லதோர் வீணை செய்தே ......................

நல்லதோர் வீணை செய்தே - அதை.... நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ...” பாரதி புலம்பிய வரிகள் இவை. இப்போதைய தமிழ்ப் பயணத்தோடும் இதனை இணைக்க முடியும்.
நவீன உலகில் தமிழ்ப் பெருமைக் கூறும் ஓர் புதுப்புரட்சி நாகரீகத்தோடு இணைந்து செயற்பட்டுக் கொண்டு வருகின்றது. இதில் முக்கியமானது தொட்டது அனைத்திலும் தமிழைத் தேடுவது.
தமிழ்ப் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும் என்பது குற்றமாகாது. ஆனால் பெருமைப் படுத்துகின்றோம் எனக் கூறிக் கொண்டு அதன் சிறப்பை மழுங்கவைக்கும் செயலே செய்து கொண்டு வரப்படுகின்றது.
ஓர் கூட்டம் இருக்கின்றது இதனைச் செய்வதற்காகவே. “தமிழுக்காக உயிரை வேண்டுமானாலும் கொடுப்பேன்”, “தமிழ் என் உயிர்” என்பர். தமிழைப் பற்றி எவராவது ஏதாவது சொல்லி விட்டால் போதும், அதன் உண்மைத் தன்மைக் கூட ஆராய்ந்து பார்க்காமல், முகப்புத்தகம் இலத்திரனியல் புறாத்தூதாக மாறிப்போகும்.
“வாழ்க தமிழ், வளர்க தமிழ், தமிழை எவனாலும் அழிக்க முடியாது தமிழன் என்றால், பச்சைத் தமிழன் என்றால் இதனை “செயார்” செய்யுங்கள்” என்று அனல் பறக்கும் பதிவுகள் ஆங்கிலக் கலப்போடு பறக்கும்.
இவ்வாறான செயல்களினால் தமிழைக் காப்பதாக, அல்லது தமிழ் பெருமையைக் காப்பதாக அர்த்தமா என்பது மட்டும் தெளிவாக தெரியவில்லை.
ஒன்று மறந்து போனேன் இவ்வாறு பரப்பும் போது கூடவே “தமிழ் ஆதி மொழி, ஆங்கிலம் தமிழில் இருந்து பிரிந்தது, வானரங்கள் பேசியதும் தமிழ், வாழ்க்கையை செம்மைப்படுத்துவதும் தமிழ், செவ்வாயில் தமிழ் கவிதை.,
சந்திரனில் தமிழ் பொறிக்கப்பட்ட மர்மத்தளம், அவ்வளவு ஏன் குயிலின் கூவலும், காக்கையின் கரைதலும் கூட தமிழில் இருந்து பிரிந்து போனதே” என்று கூட கூறுவார்கள்.
இப்படி உண்மை எது பொய் எது என்று தெரியாத அளவு அனைத்திலும் தமிழ், தமிழ் என்று கூறி அதனை சமூக வலைத்தளங்களில் பதிய விடும் கூட்டம் இருக்கத்தான் செய்கின்றது.
நன்று இந்த தமிழ் ஆர்வம் ஒன்றும் தவறல்ல சிறப்பாக தொடரட்டும். ஆனால் இதன் மூலம் கிடைக்கும் பதில் என்ன?
உண்மை எது பொய் எது? அணுவைக் கண்டு பிடித்தது தமிழன் என்பது தமிழ் ஆய்வாளர்களின் கருத்து. ஆனால் இப்படியான செயல்களினால் உண்மைகளும் கூடப் பொய்ச்சாயத்தினைப் பூசிக் கொள்ளும் நிலை மட்டுமே உருவாகும் என்பதை ஏன் அறியவில்லை?.
சரி உண்மையில் இப்போது தமிழ்ப் பாரம்பரியத்தின் உண்மை நிலை என்ன? என்பதை சற்று ஆராய்ந்தால் அடுத்து செய்யப்பட வேண்டியது எதுவெனத் தெரிந்து போகும்.,
உண்மையில் தமிழ் அப்படியே தான் இருந்து வருகின்றதா? தமிழ்ப் பாரம்பரியங்கள் மாற்றம் பெற்றுப் போக வில்லையா? இந்த கேள்விக்கு பதிலை உதாரணங்களுடன் மட்டுமே கூறலாம்.
திருமணத்தின் போது தாலி கட்டுவது என்பது தமிழர்களில் இந்துக்களிடம் காணப்படும் ஓர் வழக்கம். இதன் ஆரம்பம் எது?

“தாலி பெண்ணிற்கு வேலி மட்டுமல்ல, புருஷனுக்கும் வேலி” என்று நகைச்சுவை திரிவோடு தொடர்ந்து வருகின்றது நவீன காலத்து தாலிப் பெருமை. ஆனால் இந்த தாலி கட்டும் வழக்கம் 10ஆம் நூற்றாண்டுக்கு பிறகே தமிழரிடம் வந்துள்ளது.
10ஆம் நூற்றாண்டுவரை தாலி வழக்கம் தமிழரிடம் காணப்பட்டதாக சான்றுகள் இல்லை என்பது ஆய்வாளர்களின் வாதம்.
கண்ணகி புகழ் பாடும், கற்பின் அருமையை கூறும் சிலப்பதிகாரத்திலும் தாலி பற்றி எதுவும் சித்தரிக்கப்படவில்லை.
அதே போல் ஆண்டாள் புராணம் 7ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டது. இதில் காதல், திருமணம் பற்றி அழகுப் பாசுரங்கள் பாடப்பட்டுள்ளது. ஆனால் இதிலும் கூட தாலி வழக்கம் பற்றி கூறப்பட வில்லை என்பதே உண்மை.
தொன்மை தேடல் அகழ்வாராய்ச்சிகளிலும் தாலிகள் பற்றி எதுவும் இதுவரைக் கண்டு பிடிக்க வில்லை என்பதே உண்மை. ஆக 10ஆம் நூற்றாண்டுக்கு பிறகே தாலி கட்டும் கலாச்சாரம் தோன்றியதாக கூறப்படுகின்றது.
இவ்வாறான பல்வேறுபட்ட விடயங்கள் தமிழ்க் கலாச்சாரத்திற்குள் புகுத்தப்பட்டதாக இருக்கும், அதே சமயம் மேலும் பலவகையானவை தமிழில் இருந்து மறைந்து போயின என்பதும் கூட ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மையே.
இப்படி பழைமைத்தமிழரின் பண்பாடுகள் முதல், இப்போது கொண்டாடும் பண்டிகைகள் வரை பின்பற்றும் மதம் என பலவற்றில் தமிழ் பண்பாட்டை நாம் தொலைத்தே இருக்கின்றோம்.
இவை எவற்றையுமே அறிந்து கொள்ளாமல், எது உண்மை எது பொய் என்பதும் அறிந்துகொள்ள முடியாத போதும், கானலுக்கும், காட்சிக்கும் இடையே வேறுபாடு அறியாமல் வெட்டிப்பேச்சிப் பேசும் நபர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
அதேபோன்று இப்போது தமிழ் நடைபோகும் பாதையில் ஒரு வித்தியாசமான பார்வை அதிகமானோருக்கு உள்ளது அதாவது, பார்க்கும் அனைத்திற்கும் தமிழ்ப் பெயர் வேண்டும்.
அனைத்துச் சொற்களுக்கும் தமிழில் பெயர் வேண்டும் எனும் இவர்களையும் கூட மேற்குறிப்பிட்ட கூட்டத்தோடு சேர்க்கலாம்.
ஒரு வகையில் இது தவறு என்று கூற முடியாது. திருத்தம் சட்டென்று யார் இவன் தமிழ் விரோதி, முட்டாள் என திட்டுதல் வேண்டாம் இங்கு நான் கூற வந்தது வேறு. அனைத்திலும் தமிழைத் தேடுவது சரியே.
ஆனால் தனியுரிமம் பெற்ற இன்னொருவர் சொத்துக்கு தமிழில் பெயர் வைத்து அழகு பார்ப்பது எந்த வகையில் பொருத்தம் என்பது தான் குழப்பமாக இருக்கின்றது.
பேஸ்புக் என்பது தனியுரிமம் பெற்றது. இதற்கு பேஸ் என்றால் முகம், புக் என்றால் புத்தகம் என பெயர் வைத்திருப்பது சரியா? என்பது என் சிற்றறிவுக்கு எட்டவில்லை.
மார்க் (பேஸ் புக் நிறுவுனர்) இதனை ஒத்துக்கொள்வாரா என்பதனை அவரைக் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். அது போல ஆங்கிலேயன் வைத்த அனைத்திற்கும் தமிழில் பெயர் வேண்டும் என வாதிடுவது பொருத்தமா?
நமக்கென்று ஒன்றை உருவாக்காமல் அடுத்தவரின் சொத்திற்கு உரிமைக் கொண்டாடுவது போல் ஓர் உணர்வு (என்னுள்) ஏற்படுகின்றது.

உதாரணமாக ஆங்கில பெயர்களுக்கு தமிழில் பெயர் வேண்டும். அதனையே உபயோகிக்க வேண்டும், என்பது பலரது வாதம் ஆனால்,
“என் பெயரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதனையே பாவனைப்படுத்த வேண்டும் என்பது ஆங்கிலேயனுக்கு எத்தனை நகைப்பிற்கு உரியதோ, அதே போன்றே பிற மொழிச் சொற்கள் (தனியுரிம சொற்கள்) அனைத்திலும் தமிழைத் தேடுவதும் நகைப்பிற்குரியதே என்பது ஒரு வாதம்.
இவ்வாறான செயல்களினால் தமிழ் தனக்குரிய இலகு, எளிமைத்தன்மையை தொலைத்துவிடும் என்பதும் ஏற்றுக் கொள்ள முடியும் தானே? இதனால் தெளிவாக தமிழ் பேசுபவன் கூட திக்கித் திணறி பேச வேண்டிய நிலை உண்டாகிப் போகும்.
ஒரு மொழி கொண்டுள்ள இலகு தன்மையே அந்த மொழியை தொடர்ந்து பேசுவதற்கான சாத்தியத்தன்மையை தீர்மானிக்கிறது. அதே மொழி கடினத்தன்மையாக மாறும் போது அந்த கடினத்தன்மை மொழியை சிதைவடைய செய்துவிடும் என்பதே உண்மை.
பெயர் மாற்றம் என்பதும் கூட மிக முக்கியமானது தான். ஆனால் அது எத்தகைய சொற்களுக்கு என்பதை வைத்தே ஒரு மொழியின் நீடிப்பையும், அம்மொழிக்கான அழகையும் உருவாக்குகிறது.
தமிழ் ஏன் செம்மொழியானது என்பது குறித்து அறியாதவர்களும் கூட, செம்மொழி என் தமிழ் மொழி என்று புகழ்பாடும் நிலையில் தான் இன்று பயணிக்கின்றோம் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று.
உண்மையில் தமிழ் தோன்றிய காலம் முதல் பல்வேறு பட்ட திரிபுகளை, மாற்றங்களை சந்தித்து வந்து கொண்டே தான் இருக்கின்றது. பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்திற்கு காலம் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது.
வரலாற்றில் அழிந்து போன மொழிகள் பல உள. ஆனால் இன்றுவரை தமிழ் நிலைத்து நிற்க முக்கியமான காரணம் தன்நிலையறிந்து தமிழ் தனக்குத்தானே புதுப் புது பரிமாணம் எடுத்து தன்னைத் தானே வளர்த்துக் கொண்டதால் என்பதை மறுக்க முடியாது.
இப்போது இருக்கும் தமிழ் பழந்தமிழ் அல்ல என்றபோதும், அந்த பழந்தமிழ் இலக்கியத் தமிழ் முற்றாக அழிந்து போக வில்லை. இப்போது பழந்தமிழ் அப்போது அது புதுமைத்தமிழ் அந்த வகையிலேயே.,
தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல், எட்டுத்தொகை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு
பத்துப்பாட்டு, திருமுருகாற்றுப்படை, பெருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நான்மணிக்கடிகை.,
இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, பழமொழி, சிறுபஞ்சமூலம், திருக்குறள், திருகடுகம், ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி எனத் தொடரலாம்”
இவை உட்பட பலவகையானவை பழமையில் புதுமை படைத்த இலக்கியங்கள். அவை இன்றும் புதுமைப் படைத்து அழியாது இருக்கின்றன. ஆனாலும் கூட தமிழ் என்ற ரீதியில் ஓர் புதுப் பரிமாணமானது, தமிழ் நிலைத்து நிற்க அவசியமானது.
அதன் படி பரிமாணங்களுக்கு உட்பட்டு வளர்ச்சியடைந்து தன்னிகர் அற்ற நிலையில் தனியாக நிற்கின்றது தமிழ். ஆனாலும் பழந்தமிழ் இலக்கியங்களில் பல மதம் என்ற கோட்பாட்டிற்குள் உள்ளடக்கப்பட்டு எடுபடாமல் உள்ளன.
உதாரணமாக தேவாரங்களை எடுத்துக் கொள்ளும் போது, அவை தமிழ் சுவைச் சொட்டும் பாடல்கள், கவிகள் ஆயினும் கூட மதம், கடவுள் என்ற வரையறைக்குள் சிக்கிப் போனதால் அதிகமான தமிழர்கள் அறியப்படாதவையாக மாறிப்போய் விட்டது என்பது வேதனை.
இன்னொரு பக்கம் இப்போதைய தமிழர்கள் நாம், உண்மையில் பழங்கால சிறப்புக்களையே திரும்பத் திரும்ப பேசிக் கொண்டு இருக்கின்றோமே தவிர புதிய படைப்புகள் உருவாக்கப்படுவது மட்டும் மிக மிகக் குறைவு.
தாடிப் பொய்யாமொழிப் புலவர் உலகுக்கே எடுத்துக்காட்டு, அகத்திய முனி அணுவைப் பற்றி அப்போதே கூறியவர், ராஜ ராஜ சோழன் புகழ் உட்பட சங்கம், சங்கமருவிய காலங்கள் அனைத்திலும் அப்போதைய புகழைப் பாடுகின்றோம்.
ஆனால் இப்போது என்ன செய்து கொண்டிருக்கின்றோம். பழைய புராணங்களை, இலக்கியங்களை பாதுகாக்கின்றோம் என்று பெயருக்கு சொல்கின்றோம் ஆயினும் உண்மையில்.,
வாய்ச் சொல் வீரர்களாக மாறி பயணித்துக் கொண்டிருக்கின்றோம். சொல்வது போல் பழந்தமிழை பாதுகாப்பதையும் முறையாக செய்வது இல்லை, புதுமைகளை படைப்பதையும் சரியாகச் செய்கின்றோமா என்பது அவரவர்க்கு மட்டும் தெரியும்.
ஆனால் இவை எவை பற்றியும் தெரியாமல் சமூக வலைத்தளங்கள் ஊடாக மட்டும், தமிழ் வாழ்க, வளர்க என பகிர்ந்து கொண்டு இருந்தால், தமிழ் வளர்க்கப்படும், அல்லது தமிழ்ப் பெருமை பாராட்டி சீராட்டப்படும் என நம்பிக் கொண்டிருப்பதும் ஒரு வகை வாய்ச் சொல் வீரமே.
அப்படி செய்யும் போதும் உண்மைகளை மட்டுமாவது, நம்பகத் தன்மையோடு கூடிய நிரூபிக்கப்பட்டவற்றினை மட்டும் பகிர்ந்தால் வரவேற்கத்தக்கதே.
மாறாக நாகரீகத்திற்காக தமிழை வளர்க்கும் கூட்டம் இருக்கும் வரை தமிழ் தன் தனித் தன்மையை மறைத்துக் கொள்ளும் என்பதே தெளிவு.
அப்படியே போகட்டும் ஆனால், இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழனின் அப்போதைய பெருமை பற்றியே சொல்லிக் கொண்டு இருக்கப்போகின்றோம்.
அடிப்படையில் அப்போதைய தமிழன் பெருமைக்குள், எம் பழந்தமிழ் தமிழர் படைப்புக்குள் நாம் ஒழிந்து கொண்டு நம்மை நாம் மறைத்துக் கொண்டு இருக்கின்றோம் என்பதே உண்மை.
இங்கு ஏற்கனவே எண்ணில் அடங்காத தமிழ் இலக்கியங்கள் அழிக்கப்பட்டு போயின, அல்லது அழிந்து போயின என்பது அனைவரும் அறிவோம்.
வரலாறுகள் கூட அவரவர்க்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்டு கொண்டு வந்தன. இப்போதும் கூட அது தொடர்ந்து வருகின்றது என்பதும் தமிழர் நன்றாக அறிவர்.
காரணம் தமிழர் இந்த உலகையே ஆண்டவர்கள் அவர்கள் சிறப்பை மழுங்க வைப்பதன் மூலம் தமிழர்கள் மீண்டும் அந்த இடத்தை அடைவது தடுக்கப்பட வேண்டும்.
என்பதில் மட்டும் உடும்புப் பிடி கொண்டவர்கள் தமிழர்களை அடக்க நினைப்பதோடு அதற்காக கட்டம் கட்டமாக நகர்ந்து வருகின்றனர் என்பதை இப்போதைய சூழல் தெள்ளத் தெளிவாக காட்டுகின்றது.
எப்படியோ பழந்தமிழை காப்பதோடு, புதுப்படைப்புகளையும் தமிழுக்காக படைத்து புதுமைத் தமிழையும் வளர்க்க வேண்டும் என்பது நாளைய தேவை இல்லாவிடின்..,
தமிழைப் பொருத்த மட்டில் “நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ...” என வருங்காலத்தில் புலம்ப நேரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக