தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 22 ஏப்ரல், 2017

சங்க இலக்கியத்தில் ஒரு சமூக அறம்!-இரா. சம்பந்தன்

அலைகள் நடக்க அலை நடுவே மீன் நடக்க கொலைகள் புரிகின்ற கொக்கெல்லாம் அதில் நடக்க இயற்கைக் கலைகள் நடந்து கதை பேசும் கடற்கரையில்! வண்ண நிலவும் வார்த்தெடுத்த அதன் ஒளியும் கண்ணைப் பறிக்கின்ற கனிவான தாரகையும் திண்ணைக் கரி போல தெரிகின்ற மேகங்களும் என்று பண்டைத் தமிழ் நிலத்துப் பழையதொரு இராப் போதில்!
காதல் வலை வீசும் காதலனின் மடி மீது வீடும் உறங்க வீட்டகத்து ஊர் உறங்க நாடு முழுவதுமே நன்றாகத் தானுறங்க தேனுறங்கும் மலரொன்று தெய்வத்தின் திருவடியில் தானுறங்கி மகிழ்வது போல் மகிழ்ந்திருந்தாள் அப் பாவை!
கரை தடவும் அலை போலக் கைகள் விளையாட அரை தடவும் ஆடைகளாம் அவையும் நெகிழ்ந்திருக்கத் தன் நிரை தடவும் பல்காட்டி நிலாவைப் பழித்தங்கு சரை அவிழ்ந்த சக்கரையாய்த் தன் மடியில் கிடந்தாளைத் தரை திரியும் எறும்பான காதலனும் தான் கேட்டான்!
அன்பே! தேன் மிதக்கும் பலாப்பழமும் தென்னைக் குருத்தணைத்த வான் மிதக்கும் இளநீரும் வலையில் உயிர் துறந்த மீன் மிதக்கும் கறிக்குழம்பும் மேலும் பசியாற கூன் மிதக்கும் பிறைபோலக் குழைந்த தயிர்ச் சோறும் நான் விரும்பும் வேளையெலாம் நயந்து தருபவளே!
கைமலரைத் தொட்டாலும் கண்மலரைத் தொட்டாலும் மெய்மலரின் இதழெல்லாம் சிலிர்த்துக் கிடப்பவளே! வேலியற்ற வெள்ளாமை விழையும் காதலெனும் கூலியற்ற சுகமெனக்குக் கொடுக்கப் பிறந்தவளே! மூடிவைத்து நான் பார்க்கும் முத்தின் முழுவடிவே! உன்னை ஒன்று கேட்கின்றேன்!
கோயில் புறச்சுவரில் முட்டவைத்துத் தொட்டாலும் வாயில் கதவருகில் வாயிதழைத் தொட்டாலும் பாயில் படுத்திருந்து பார்த்து இரசித்தாலும் தாயே நீயென்னைத் தப்பாய் நினைத்ததில்லை! ஆனாலும் அந்தப் புன்னை மரம் நிற்கும் புகலிடத்தில் அன்பாக என்ன கதைத்தாலும் ஏனோ தயங்குகிறாய்! புன்னை மரம் கண்டு போதுமெனப் போகின்றாய்!
புன்னை மர நிழலில் போயிருக்கும் வேளையெல்லாம் என்னை விலக்கிவிட்டு ஏனெழுந்து ஓடுகின்றாய்? தென்னை மரவடியில் தின்பண்டம் ஆனவள் நீ! புன்னை மரவடியில் புளி போலக் கசக்கின்றாய்! என்ன நடக்குதங்கு? ஏன் பயந்து சாகின்றாய்? எரியாத விறகாக என்மனத்தில் இருப்பவளே! புரியாத புதிராக நடக்கின்றாய் ஏனென்றான்!
காதலனின் கைமலரை எடுத்துத்தன் கரமலரில் பூமலரின் மாலையென இறுக இணைகோர்த்து நெய்மலரில் எரிகின்ற நெடுவிளக்குப் போன்றாளும் கண்மலரில் நீர் ததும்பக் கதையொன்று சொல்லிடுவாள்!
சிறுவயதில் நானும் சேர்ந்திருந்த தோழிகளும் குறுகுறுத்த புன்னைவிதை கொண்டு மணல் புதைத்து அதைப் பின்னர் தேடி எடுக்கும் ஒரு விளையாட்டை ஆடிடுவோம்! ஆடி ஒருநாள் அதிலொன்றை எடுக்காமல் தோழி எனை வாடி என அழைக்க வந்தவழி போய்விட்டேன்! கூடி மணல் புதைத்த விளையாட்டும் மறந்திட்டேன்!
மண் மறைந்த விதையது தான் மரமாக துளிர் விடுக்க கண் மறைந்து போகாமல் கனகாலம் நீர் விட்டேன்! திண்ணை மறைவிருந்து திருக்கூத்தைப் பார்த்த எந்தன் அன்னை வந்து சொன்னாள் அவள் மனத்துச் செய்தியொன்றை!
வேரூட்டி எம்வீட்டில் எழுந்த இக் கன்றை நீருட்டி நீ வளர்த்தாய் நினைவில் வைத்துக் கொள்! உன் உயிர்க்குப் பின்னாலே உயிராய்த் தோன்றியதால் உனக்குப் பின் பிறந்த தங்கையெனப் பெண்ணே உன் மனதில் நினைத்துக் கொள்!
மரம் என்று எண்ணி மாறான செய்யாமல் தரம் உணர்ந்து பழகிக் கொள் தங்கை உறவொன்றை! அன்னை சொன்னதொரு அறச் செய்தி இதுவாகும்!
அன்றுமுதல் இன்றுவரை அந்தப் புன்னையை நான் என்றும் எனது தங்கையெனும் நினைவோடு இருக்கின்றேன்! தங்கையவள் முன்னாலே தவறான கதை பேச சிந்தை தயங்குதையோ! சிறியேனும் என்செய்வேன்? தங்கை அருகிருக்கத் தன்னவனைத் தான் தொடுதல் எங்கள் தமிழ் வழக்கம் அல்லவன்றோ அதனாலே புன்னை மரம் கண்டால் போதுமென்று ஓடுகிறேன்!
புன்னை மரம் காணாப் பொழுதெல்லாம் உன்னடியில் என்னை வரம் கொடுக்க என்றேனும் மறுத்தேனா? சின்னக் கரும்பென்னை சிறகடிக்கும் வண்டாகித் தின்னப் பிறந்தவனே செந்தமிழர் ஒழுக்கத்தை என்னைக் கரம் கரம்பிடிக்க என்றைக்கும் விட்டுவிடு!
என்றழுதாள் அப்பாவை நற்றிணைச் செய்யுள் ஒன்றில்!
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க நீ நல்கின்
இறைபடு நீழல் பிறவுமார் உளவே
Written by இரா. சம்பந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக