2014ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆல்ஃபிரட் நோபெல் என்ற வேதியியலாளரால் 1895ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இந்த பரிசு, நோபல் என்ற அவரின் பெயரிலேயே 1901ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
நோபல் பரிசு ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும், பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்களை கண்டுபிடித்தவருக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதார அறிவியல் மற்றும் அமைதி ஆகிய பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பரிசுகளை வருடந்தோறும் நோபல் அவர்களின் நினைவு தினமான டிசம்பர் மாதம் பத்தாம் நாள் அன்று வழங்குகின்றனர்.
நோபல் உயில் எழுதும் சமயத்தில் நோர்வேயும், சுவீடனும் ஒரே கூட்டுப்பிரதேசமாக இருந்ததால், நோர்வேயில் அமைதிக்கான பரிசும், சுவீடனில் மற்ற பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் 2014-ம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு
ஜப்பானைச் சேர்ந்த இசாமு அகசாகி(Isamu Akasaki), ஹிரோஷி அமானு(Hiroshi Amano) , ஷுஜி நகமுரா(Shuji Nakamura) என்ற மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்படுகிறது.
LIGHT EMITTING DIODE(LED) எனப்படும் குறைந்த மின்சாரத்தைக் கொண்டு அதிக ஒளியைத் தரும் விளக்குகளில் நீல நிற LED-யை கண்டுபிடித்ததற்காக இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.
வேதியியலுக்கான நோபல் பரிசு:
அமெரிக்காவைச் சேர்ந்த ரிக் பெட்ஜிக்(Eric Betzig) , வில்லியம் மோர்னர்(William E. Moerner) மற்றும் ஜேர்மனியைச் சேர்ந்த ஸ்டெஃபான் ஹெல்(Stefan W. Hell) என்ற மூன்று விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்படுகிறது.
Fluorescence Microscopy எனப்படும் ஒளி நுணுக்குக்காட்டியை வடிவமைத்தற்காக இவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.
மருத்துவ துறைக்கான நோபல் பரிசு:
அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜான் ஓ'கீஃபே(John O'Keefe) மற்றும் நார்வே நாட்டைச் சேர்ந்த மருத்துவ தம்பதியரான மே-பிரிட் மோசர்(May-Britt Moser) , எட்வர்ட் ஐ. மோசர்(Edvard I. Moser) ஆகியோருக்கு நோபல் பரிசு பகிர்ந்து வழங்கபடுகிறது.
மூளையில் செயல்படும் அணு எது என்றும் அது எப்படி செயல்படுகிறது என்பதை பற்றியும், மூளையில் உள்ள இடமறியும் உயிரணுக்கள் நாம் சென்று வரும் இடங்களுக்கான வரைபடத்தை மூளையில் எவ்வாறு உருவாக்குகிறது போன்றவற்றை கண்டுபிடித்ததற்காக இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு:
பிரான்ஸை சேர்ந்த பேட்ரிக் மோடியானோ(Patrick Modiano) என்ற நாவலாசிரியருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு:
இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்திக்கும்(Kailash Satyarthi) , பாகிஸ்தானை சேர்ந்த மலாலாவுக்கும்(Malala Yousafzai) அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
குழந்தைகள் உரிமைக்காக குரல் கொடுத்து வருவதற்காக கைலாஷ் சத்யார்த்திக்கும், பெண் கல்விக்காக குரல் எழுப்பி வருவதற்காக பாகிஸ்தானை சேர்ந்த மலாலாவுக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு:
பிரான்ஸை சேர்ந்த ஜீன் டிரோல்(Jean Tirole) என்ற பொருளாதார நிபுணருக்கு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
சக்திவாய்ந்த நிறுவனங்கள் கோலோச்சும் இன்றைய பொருளாதாரக் காலக்கட்டத்தில் தொழிற்துறையை ஒழுங்கமைத்தல் பற்றிய இவரது ஆய்வுப் பங்களிப்பிற்காக இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக