"காகமே, காகமே நீ ஏன் கருப்பாக இருக்கிறாய்?" என்று கேட்டான் கருப்பன்.
"ஒரு காலத்தில் நான்தான் உலகிலேயே அழகான பறவையாக இருந்தேன் என்று சொன்னால் நீ நம்புவாயா?" என்று கேட்டது காகம்.
"எப்படி நம்ப முடியும்?" என்று ஆச்சரியப்பட்டான் கருப்பன்.
"நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் அதுதான் உண்மை. வண்ண வண்ண சிறகுகள், அழகான தோகை, இனிய குரலுடன் அவ்வளவு வசீகரமாக இருந்தேன் நான்"
"பின் எப்படி நீ இப்படியானாய்?"
"என் இரக்க குணத்தால்"
"அந்த கதையை கொஞ்சம் சொல்லேன்"
"என் அழகான தோற்றத்தைக் கண்டு பொறாமைக் கொண்ட மற்ற பறவைகள் என் இரக்கக் குணத்தை பயன்படுத்தி பலன் அடைய நினைத்தன”
'உன் பச்சை நிறத்தை எனக்கு கொடேன்' என்று கேட்டு வாங்கிக் கொண்டது பச்சைக்கிளி.
'எனக்கு நீல நிறம் என்று வாங்கிக் கொண்டது. மீன்கொத்தி.
'வெண்மை எனக்கு' என்று எடுத்துக் கொண்டது புறா.
இப்படியாக ஒவ்வொரு நிறமும் போக என்னிடம் மிஞ்சியிருந்தது என் கம்பீரமான கொண்டையும் அழகான தோகையும்தான். பின் சேவல் கொண்டையையும் மயில் தோகையையும் வாங்கிக் கொண்டன.
அவை போன பிறகு என்னிடம் மெல்ல வந்தது குயில்.
'காகமே, காகமே நீயும் கருப்பு நானும் கருப்பு. எனவே எனக்கு உன் நிறமெல்லாம் வேண்டாம். உன் குரலை மட்டும் கொடு போதும்' என்றது.
அதையும் நான் மகிழ்ச்சியோடு தந்து விட்டேன்" என்று சொல்லி முடித்தது காகம்.
இதைக் கேட்ட கருப்பன், "என்ன காகமே, இவ்வளவு இளித்தவயாக இருந்திருக்கிறாய" என்று செல்லமாக கடிந்து கொண்டான்.
அதற்கு காகம் "நானே கொடுத்தாலும் யாரும் வாங்கிக் கொள்ளாத ஓர் உயர்ந்த குணம் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. எனக்கு அதுவே போதும்" என்றது.
"அது என்ன குணம்?" என்று கேட்டான் கருப்பன்.
"ஒற்றுமை"
கருப்பன் யோசித்தான்.
காகம் சொன்னது உண்மைதானே?
அதன் ஒற்றுமை குணம் பற்றி நமக்கே தெரியும். அதனால்தான் எல்லா பறவைகளையும் கூண்டில் அடைத்து வைத்து வளர்க்கும் நாம் காகங்களை மட்டும் சுதந்திரமாக விட்டு வைத்திருக்கிறோம்...
அது மட்டுமா?
"கா... கா..." என உரிமையோடு நாம் சாப்பிட அழைக்கும் ஒரே பறவையும் அதுதானே?
கருப்பனுக்கு ஒன்று தெளிவாக புரிந்தது...
##### மனசுக்கு ஏது நிறம் ?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக