ஒரு நாணயத்தை தண்ணீரில் போட்டால் மூழ்கிவிடுகிறது. ஆனால், ஒரு பிரம்மாண்டமான கப்பல் தண்ணீரில் மிதக்கிறதே.
மீனவர்கள் பயன்படுத்தும் படகு, மரம் போன்ற மிதக்கும் பொருள்களால் செய்யப்பட்டாலும், மிகப் பெரிய கப்பல்கள் இரும்பு போன்ற உலோகத்தால் செய்யப்படுகின்றன.
அப்படியானால் அந்தக் கப்பல்கள் மூழ்கிவிட வேண்டுமே, எப்படி மிதக்கின்றன?
கப்பல் தண்ணீரில் இருக்கும்போது, அதன் உடற்பகுதி ஓரளவு தண்ணீரில் அமிழ்ந்திருப்பதை பார்த்திருப்பீர்கள்.
அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும். எனவே கப்பலின் குறிப்பிட்ட அளவு அடிப்பகுதி கடலில் அமிழ்ந்திருக்கும்.
1000 டன் எடையுள்ள கப்பலின் உடற்பகுதி, அதே அளவு எடையுள்ள தண்ணீரை இடம்பெயரச் செய்யும். இதை, ஒரு கப்பலின் வெளியேற்றும் திறன் என்று குறிப்பிடுவார்கள்.
தண்ணீரில் அமிழ்ந்துள்ள கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் தண்ணீர் அழுத்துகிறது. தண்ணீரில் இயற்கையாகவே உள்ள அழுத்தம் கப்பலின் உடற்பகுதி மீது செலுத்தப்படுகிறது. அதேநேரம் கப்பலின் எடையும் தண்ணீரை அழுத்துகிறது.
இந்த இரண்டு அழுத்தங்களும் சமநிலையை ஏற்படுத்தும் வகையில் கப்பல்கள் வடிவமைக்கப்படுகின்றன. செங்குத்தான நிலையில் உள்ள அழுத்தங்களின் சக்தியே, கப்பலின் எடையை சமநிலைக்குக் கொண்டு வருகிறது.
மேலும், கப்பலின் உட்பகுதியில் குறிப்பிட்ட அளவு காற்று இருக்கிறது. காற்றுக்கு வடிவமில்லாததால், நாம் அதை கணக்கில் எடுக்கத் தவறுகிறோம். கப்பலில் உள்ள பொருட்களை வெறுமனே திரட்டி தண்ணீரில் போட்டால் அது மூழ்கிவிடும்.
அடர்த்தி குறைவாக இருக்கும் வகையில் கப்பல் வடிவமைக்கப்படுவதும் கப்பல் மிதப்பதற்கு முக்கிய காரணம்.ஒவ்வொரு கப்பலிலும், படகிலும் அதற்கான கொள்ளளவு உண்டு, அதை மீறினால் அது மூழ்கிவிடும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக