காரியம் ஆக வேண்டுமென்றால், எந்த எல்லைக்கும் போவோம். அதன்பின், பிரச்னை வந்தால், சாக்கு போக்கு சொல்லி, சமாளிக்கப் பார்ப்போம்; அப்படியும் சமாளிக்க முடியவில்லை என்றால், மாற்று வழி தேடுவோம். இது உலக வழக்கம். இந்த வழக்கத்திலிருந்து சத்தியசீலன் என்று சிறப்பிக்கப்படும் அரிச்சந்திரன் கூட தப்பவில்லை என்பதை, அவன் வாழ்க்கை வரலாறு விளக்குகிறது. மனிதர்களாய் பிறந்தவர்கள் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் சிறு பொய்யாவது பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடும். ஆனால், அரிச்சந்திரன் மட்டும் சத்தியம் தவறாதவராக, பொய் சொல்லாதவராக திகழ்ந்ததற்கான காரணத்தை, ஸ்ரீதேவி பாகவதம் சொல்கிறது. அரிச்சந்திரனுக்கு குழந்தை இல்லை. அதனால், குல குருவான வசிஷ்டரின் ஆலோசனைப்படி, வருணனை நோக்கி, தவம் செய்தார். அவன் தவத்தில் மகிழ்ந்த வருண பகவான், உனக்கு குழந்தை பேற்றை தருகிறேன். ஆனால், அந்த குழந்தையை, யாகத்திற்கு பலியாக தருவாயா... எனக் கேட்டார். பகவானே... மலடன் என்கிற பெயர் நீங்கினால் போதும். நீங்கள் சொன்னபடியே செய்கிறேன்... என்றார் அரிச்சந்திரன்.
வருண பகவான் அருளால், அரிச்சந்திரனுக்கு, ஒரு ஆண் குழந்தை பிறந்தது. உடனே, வருண பகவான் வந்து விட்டார். அரிச்சந்திரா... நீ சொன்னபடி, உன் பிள்ளையை யாகம் செய்து, பலி கொடு... என்றார். அரிச்சந்திரன் திகைத்துப் போனார். பிள்ளையை இழக்க, யாருக்கு தான் மனம் வரும்! அதனால், சுவாமி... தீட்டு கழிய ஒரு மாதம் ஆகும். தீட்டோடு யாகம் நடத்தக் கூடாது. ஆகையால், ஒரு மாதம் கழித்து வாருங்கள்... என்றார். அதன்பின், குழந்தைக்கு பல் முளைக்கட்டும்; கர்ப்ப கேசம் களைய (முடி இறக்க) வேண்டும்; உபநயனம் (பூணூல்) ஆக வேண்டும் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி, மகனுக்கு பதினோறு வயது ஆகும் வரை, அரிச்சந்திரன் யாகமே செய்யவில்லை. ஓரளவிற்கு வளர்ந்து விட்ட அந்தப் பிள்ளை விவரமறிந்து, தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள, காட்டிற்குள் ஓடி விட்டான். வருண பகவான் வந்து நின்றார். உண்மையை சொல்லி, மன்னிப்பு கேட்டார் அரிச்சந்திரன். கொடுத்த வாக்கை அரிச்சந்திரன் காப்பாற்றததால், வருண பகவான் சாபம் கொடுத்து விட்டார். பின்பு வசிஷ்டரின் ஆலோசனைபடி, அரிச்சந்திரன் சாபத்திலிருந்து விடுதலையானான். சாபத்தில் இருந்து விடுபட்ட அரிச்சந்திரன், இனிமேல், உயிரே போனாலும், சத்தியம் தவற மாட்டேன்... என்று, சத்தியம் செய்தான். அதன்பின் நடந்த கதை தான், உங்களுக்கு தெரியுமே! தீய பழக்க, வழக்கங்களை விட்டு விலகி நிற்பது கடினம்; நல்லவைகளை கடைபிடிப்பதில் உறுதியாகவும், தீவிரமாகவும் இருப்பது மிக மிகக் கடினம். அவ்வாறு கடைபிடித்தால், நிலைத்த புகழை அடையலாம் என்பது, அரிச்சந்திரன் வரலாறு விளக்கும் உண்மை.
அனைவருக்கும் என் இனிய வணக்கம் இந்த நாளும் இனிய நாளாக எல்லாம் வல்லவனை இத்தருணத்தில் வேண்டுகிறேன் ~ சாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக