நம்மை ஆட்டிப்படைப்பது நம் மனமே. உருவமற்ற இந்த மனம் பெரிய உருவம் படைத்த நம்மை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். மனதுடன் நடத்தும் போராட்டம் என்றும் ஓய்வதில்லை. விழிப்பு நிலையில் மட்டுமல்ல, உறக்க நிலையிலும் கூட மனதின் போராட்டம் நம்மை விட்டு ஒருபோதும் நீங்குவதில்லை.
அனைத்து சாஸ்திரங்களும், வேதநூல்களும் மனதை அடக்கும் வழிமுறைகளையே நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. மனதை அடக்கும் தியை ஆண்டவனிடம் கேட்டுப் பெற வேண்டும்.
உடலுக்கு கிடைக்கும் இன்பத்தை எவ்வளவு தான் அனுபவித்தாலும் ஒருவனுக்கு நிரந்தரமான திருப்தி கிடைக்கப் போவதில்லை. இருந்தாலும், மனம் அந்தஆசையை விட்டு விட இடம் தருவதில்லை.
காய்ந்த எலும்புத் துண்டைக் கடித்த நாய், தன் வாயிலிருந்து வழிந்த ரத்தத்தை எலும்பிலிருந்து வருவதாக எண்ணி மேலும் அழுத்தமாகக் கடித்து துன்பத்தை அடையும். அதுபோல் மனிதனும் ஆசைகளைப் பெருக்கிக் கொண்டு துன்பத்தை அனுபவிக்கிறான்.
பாலைவனத்தில் தூரத்தில் தெரியும் கானல்நீர் அருகில் சென்றதும் மறைவது போல, மனதில் வாழ்வில் உண்டாகும் இன்பங்களும் நம்மை ஏமாற்றக்கூடியவையே. அவை நிரந்தரமானதல்ல.
பக்திவேறு, கர்மம் வேறு அல்ல; கர்மம் வேறு, ஞானம் வேறு அல்ல. அனைத்தும் ஒரே குறிக்கோளான இறைவனை அடைவதற்கான வழிகளே ஆகும். அவரவர் தன்மைக்கு ஏற்ப எந்த வழியைப் பின்பற்றினாலும் இறுதியில் அடையவேண்டிய லட்சியம் எல்லோருக்கும் ஒன்றுதான்.
வாழ்வில் நாம் படும் துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் அடிப்படை காரணம் நான் வேறு, நீ வேறு என்ற இரட்டை மனோபாவம் தான். மனதில் சுயநலம் இருக்கும் வரை துன்பத்திலிருந்து விலக முடியாது. சுயநலம் உள்ள இடத்தில் என்றும் அமைதி இருப்பதில்லை.
குரு ஒருவரைத் தேடு. அவரது திருவடித் தாமரைகளில் திடமான பக்தி கொண்டவனாகிப் பிறவித் துன்பத்திலிருந்து விரைவில் விடுபடு. குருவருளில் நம்பிக்கை கொண்டு மனதை அடக்கப் பழகினால், உள்ளத்தில் உறைந்திருக்கும் தெய்வத்தைக் காணலாம்.
செல்வத்தாலும், சுற்றத்தாலும், இளமையாலும் யாரும் கர்வம் கொள்ளாதீர்கள். என்றைக்காவது ஒருநாள் இவையெல்லாம் நம்மை விட்டு விலகிச் சென்று விடும். அதனால், வாழ்நாளுக்குள் கடவுளை அறிய முற்படுங்கள்.
குழந்தைகள் விளையாடிக் களிக்கிறார்கள். வாலிபர்கள் பெண்ணின்பத்தை நாடுகிறார்கள். வயோதிகர்கள் கவலையில் கழிக்கிறார்கள். ஆனால், கடவுளின் மீது பற்றுவைக்க மறந்து விடுகிறார்கள்.
https://www.facebook.com/photo.php?fbid=536926773082677&set=a.428155087293180.1073741825.100002960766553&type=1&theater

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக