தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, April 30, 2014

குழந்தை பிறந்த பின் பெண்கள் குண்டாவது ஏன்?...


கர்ப்பக் காலத்தில் உடல் எடை அதிகரித்த எல்லோரும் உடனடியாக உடல் எடையைக் குறைத்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்களுக்கு நாங்கள் அளிக்கும் முதல் அட்வைஸ், 'பொறுமை' என்பதுதான். உங்கள் உடல் எடை ஓரிரு நாட்களில் அதிகரித்துவிடவில்லை. எடை அதிகரிக்க ஒன்பது மாதங்கள் ஆனது. அதனால், உடல் எடைக் குறைப்பு என்பது மிக வேகமாக நடந்துவிடாது.   

குழந்தைப் பேறு என்பது மனதளவில் ஒருவித இறுக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். இந்த நிலையில் நீங்கள் உணவுக் கட்டுப்பாட்டோடு இருந்தால், அது மேலும் மன இறுக்கம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே, உணவுக் கட்டுப்பாடோ அல்லது சாப்பிடாமல் இருப்பதோ வேண்டாம். 

பசிக்கும்போது சாப்பிடுங்கள். நொறுக்குத் தீனிக்குப் பதிலாக, பழங்கள், காரட், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளைச் சாப்பிடுங்கள். இவை உங்கள் கலோரி அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில், உங்கள் தினசரி உணவில் 300 கலோரி கூடுதலாகச் சேர்த்தால் போதும். 

நீங்கள் சாப்பிடும் உணவு ஊட்டச் சத்து நிறைந்ததாகவும் கொழுப்பு குறைந்ததாகவும் இருக்கட்டும். அதிக சர்க்கரை, க்ரீம், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள். உடலின் நீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்க, நாளன்றுக்கு இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடியுங்கள். 

இது உங்கள் தோல் ஆரோக்கியமாக இருக்கவும் உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டவும் உதவும். மூன்று முதல் நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறுநீர் போக வேண்டும். இது சிறுநீரகத் தொற்றைத் தவிர்க்கும். உடற்பயிற்சி செய்வது நல்லது. 

உடற்பயிற்சி என்பது உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், மன அழுத்தத்தை வெளியேற்றி நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். இதற்காக ஜிம்முக்குச் சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. 

தினமும் நடைப்பயிற்சி செய்தாலே போதும். யோகா செய்வதும் உடல் எடையைக் குறைக்க உதவும். தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் தீவிர உடற்பயிற்சி கூடாது. அது பாலில் லாக்டிக் அமிலத்தின் அளவை அதிகரித்துப் புளிப்புத் தன்மையைக் கூட்டிவிடும்.

இரவு நேரத்தில் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். இரவில் பசித்தால் காய்கறி மற்றும் பழங்கள் மட்டுமே சாப்பிடலாம். குழந்தை தூங்கி எழும் நேரத்தில் நீங்களும் எழுங்கள். சரியாகத் தூங்காமல் இருப்பதும் தேவைக்கு அதிக நேரம் தூங்குவதும் உடல் எடையை அதிகரித்துவிடும். 

தினமும் எட்டு மணி நேரம் தூங்குவது நல்லது. பெரும்பாலும் இரண்டாவது பிரசவத்துக்குப் பிறகுதான் பெண்களுக்கு எடை கூடுகிறது. வயது அதிகரிப்பது மற்றும் இரண்டு குழந்தைகளைப் பராமரிப்பதால் ஏற்படும் மன அழுத்தம் ஆகியவையே இதற்குக் காரணம். 

முன் எச்சரிக்கையுடன் இருந்தால், உடல் எடையைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வளவையும் மீறி உடல் எடை கூடினால், மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதே நலம்.

http://www.maalaimalar.com/2014/04/30123755/why-body-weight-increase-after.html

No comments:

Post a Comment