தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, April 25, 2014

கதை கேட்பதென்றால் எல்லோருக்கும் பிடிக்கும். அதனால் தான் நம் முன்னோர்கள் கோயில்களில், இதிகாச, புராணங்களை கதைகளாகவே சொல்லி வந்தனர். அந்தப் புராணக்கதைகளில் பெரும் தத்துவ விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன. அதில் ஒன்று முதல் கடவுளான விநாயகரின் கதை. எமனுடைய பிள்ளை அனலன். எப்போதும் கொதித்துக் கொண்டே இருக்கும் அசுரனான அவன், வரம் ஒன்று பெற்றிருந்தான். யாருடைய உடம்பிலும் அவர்களுக்குத் தெரியாமல் புகுந்து சக்தியை உறிஞ்சி விடுவது என்பதே அந்த வரம். அவனது தொல்லை தாங்காத தேவர்கள் விநாயகரிடம் சென்று, அனலனிடம் இருந்து தங்களை காப்பாற்றும்படி முறையிட்டனர். விநாயகர் அவனை அப்படியே விழுங்கி விட்டார். அதனால், விநாயகரின் மேனி கொதித்தது. அகில உலகமுமே சூடாகத் தொடங்கியது. செய்வதறியாத தேவர்கள் பால், தயிர், அமிர்தம் என அவரின் திருமேனியில் சாத்தி குளிர்விக்க முயன்றனர்.

சந்திரன் தன் குளிர்ந்த கிரணங்களை விநாயகர் மீது செலுத்தினார். ஆனாலும், சூடு கொஞ்சம் கூடத் தணியவே இல்லை. அப்போது அத்ரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கவுதமர், காஸ்யபர், ஆங்கிரஸர் என்னும் சப்த ரிஷிகளும் அங்கு வந்து, ஒரு சாண் அளவுள்ள 21 அருகம்புற்களை விநாயகர் மீது சாத்தினர். சூடு தணிந்து திருமேனி குளிர்ந்தது. உலகமும் அமைதி அடைந்தது. தேவர்களும், சப்தரிஷிகளும் விநாயகரிடம், ஆனைமுகக் கடவுளே! இதே போல அருகம்புல் சாத்தி உங்களை வழிபடுவோருக்கு எல்லா விதமான மங்களங்களையும் அருள வேண்டும், என வேண்டினர். அப்படியே ஆகட்டும் என்று விநாயகரும் அருள் புரிந்தார். அருகம் புல்லிற்கும், விநாயகருக்கும் உள்ள தொடர்பை விளக்கும் கதைகளில் இதுவும் ஒன்று. ஜபம், தவம், யோகம் போன்றவற்றில் ஈடுபடும் போது, குண்டலினி சக்தி தானாக மேலே எழும். உடலில் சூடு பரவி கொதிப்படையும். குளிர்ந்த நீரில் நீராடினால், சூடு தணியலாம். அதே சமயம், ஏறிய தவசக்தியும் இறங்கி விடும். பக்க விளைவு இல்லாமல் உடல் உஷ்ணத்தைத் தணிக்க என்ன வழி? அருகம்புல் தான்! அருகம்புல் கஷாயம், ஜூஸ் என்றெல்லாம் இப்போது பிரமாதப்படுகிறதே! அனலன் கதையைச் சொல்லி, அருகம்புல்லில் முடித்ததற்கு இதுவே காரணம்.

 வணக்கம்.இந்த நாளும் இனிய நாளாக வாழ்த்துக்கள் ~ சாம்

No comments:

Post a Comment