தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 ஏப்ரல், 2014

பெண்கள் பார்வையில் திருமணம்!!


திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்ற கருத்து காலம் காலமாய் மக்களின் வாய் வார்த்தைகளாக வருவதுண்டு.
ஆனால் இதனை யார் சொன்னது, இது உண்மையா என்ற கேள்விக்கான பதில்கள் எவரிடமிருந்தும் வருவதில்லை.
அப்படி பார்க்கையில் சிலருக்கு சொர்க்கத்தில் நிச்சயித்த திருமணம் நரகமாய் அமைவதுண்டு, பலருக்கு சொர்க்கமாகவே அமைகிறது.
பொதுவாக இந்த திருமண பந்தத்தில் ஆண்களை விட பெண்களுக்கு கொஞ்சம் பயம் அதிகமாகவே இருக்கும், ஏனெனில் வேறு ஒரு குடும்பத்தில் இணையப்போகிறோம், திருமண உறவு பற்றி ஏராளமான எதிர்பார்ப்புகள் என்று இன்னும் பல கனவுகளோடு அடியெடுத்து வைப்பார்கள்.
ஆனால் ஆண்களுக்கு அந்தவாறு இல்லை, நல்ல வேலையுடன், சம்பாத்யமும் இருந்தால் திருமணத்துக்கு ரெடியாகி விடுவார்கள்.
இந்த சமூகத்தில் பெண்கள் பார்வையில் திருமணம்
குடும்ப சூழல்
சில பெண்கள் தங்களை பணம் செலவழித்து படிக்க வைத்த பெற்றோருக்கு சம்பாதித்து கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்தில் இருப்பர். இந்த லட்சியம் நிறைவேறிய பின்னரே திருமணம் பந்தத்தில் இணையலாம் என்று எண்ணுவர்.
ஒரு சில பெண்கள் தங்களுக்கென்று சொந்த லட்சியம் வைத்திருப்பர், எங்கே திருமணம் என்ற பந்தத்தால் தங்களின் லட்சியம் சிதைந்து சின்னாபின்னமாகிவிடுமோ என்பதால் திருமண உறவுக்குள் நுழைவதற்கு யோசிப்பார்கள்.
சொந்தச் சூழல்
ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் தனிப்பட்ட விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
யாரையாவது காதலிக்கலாம். அவருடைய வேண்டுகோளுக்கிணங்க காத்திருக்கலாம்.
சில காதல்கள் பிரச்சினையை கிளப்பும். அந்த பிரச்சினையை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும் வரை காத்திருக்க நேரிடலாம்.
திருமணக் காலம்
பெண்களின் வாழ்க்கையில் திருமணம் முக்கியமானது. குறிப்பிட்ட காலத்திற்குள் திருமணம் செய்துகொண்டால்தான் வாழ்க்கையை ரசிக்கவும், ருசிக்கவும் முடியும்.
காலம் தாழ்த்தி செய்யும் திருமணங்கள் வெறும் கடமையாக மட்டுமே இருக்கும்.
பெண்களின் திருமணத்தைப் பற்றி குறிப்பிட்ட காலம் வரைதான் அவரை சார்ந்தவர்கள் பேசுகிறார்கள்.
குறிப்பிட்ட காலம் வரைதான் மாப்பிள்ளை தேடுகிறார்கள். ஆண்களும், இளம் வயது பெண்களைத்தான் திருமணத்திற்காக தேர்ந்தெடுக்கிறார்கள்.
திருமணம் செய்துகொள்ள மற்றவர்கள் விரும்பும் காலத்தில் மவுனமாக இருந்துவிட்டு, அதன் பின்பு வரன் தேட ஆரம்பித்தால், ஒப்புக்கு சப்பான வரனே அமையும் நிலை ஏற்பட்டு விடும்.
தகுதியான மாப்பிள்ளை
உயர்ந்த பணியில் அமர்ந்துவிடும் பெண்கள், தங்களுக்கு தகுதியான மாப்பிள்ளை கிடைக்கவில்லை. அதனால் திருமணத்தை தள்ளி வைப்பதாக சொல்கிறார்கள்.
அவர்களைவிட அதிகம் படித்தவரை, அதிகம் சம்பாதிப்பவரை திருமணம் செய்தால்தான் தங்கள் தகுதி அதிகரிக்கும் என்று கருதுகிறார்கள்.
படிப்பிலோ, உத்தியோகத்திலோ தன்னைவிட குறைந்த ஆணை திருமணம் செய்ய மறுக்கிறார்கள்.
திருமண வாழ்க்கை வெற்றியடைய படிப்பு, பணம், அந்தஸ்து போன்றவை மட்டுமே காரணம் இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள அதிக காலம் அவசியப்படுகிறது.
எது எப்படியாயினும் ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற பழமொழிக்கேற்ப, பெண்கள் தங்களுக்கு கிடைக்கும் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் விதத்தில் தான் அவர்களின் வாழ்கை உள்ளது.
திருமணம் என்பது பெண்களின் வாழ்க்கையில் விழும் முற்றுப்புள்ளி அல்ல. அது அவர்களது திறமைக்கு கிடைக்கும் தொடக்க புள்ளியாகவும், வெற்றிப் புள்ளியாகவும் மாற வாய்ப்பிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக