தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

நிலமென்னும் நல்லாள் !!


சிறுகதைநிலம் என்னும் இல்லாள்வேளாண் நிலம்

காணி நிலம்னா சுமார் எத்தனை சதுர அடி இருக்கும் மிஸ்டர் ராம்நாத்?” என்றார் பரமேஸ்வரன். இப்படி ஒரு திடீர்க் கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத ராம்நாத் கொஞ்சம் தடுமாறித்தான் போனார்.

“”ஸா… தெரியலியே ஸார்; எதுக்குக் கேட்குறீங்க? நான் வேணும்னா நெட்ல தேடிப் பார்த்துச் சொல்லட்டுமா?” என்றார் பணிவுடன்.

“”நோ… நோ… பரவாயில்லை விடுங்க; சும்மாதான் கேட்டேன். நம்ம பாரதியார், பராசக்திகிட்ட காணிநிலந்தான் கேட்டார். கடைசி வரைக்கும் அவருக்கு அது கை கூடவே இல்ல. ஆனால் அந்த மகா கவிக்கு சாத்தியப்பாடதது, நாம இப்பத் தேடிப்போற மிஸ்டர் காளியப்பனுக்கு சாத்தியமாகி இருக்கு பார்த்தீங்களா? அதான் கேட்டேன்” என்றார் பரமேஸ்வரன்.

“”ஆமாம் ஸôர்..” என்று ஆமோதித்து சிரித்தார் ராம்நாத்.

பரமேஸ்வரன் டெல்லியைத் தலைமை இடமாகக் கொண்டு, சென்னை, கல்கத்தா, பெங்களூரூ, ஹைதராபாத் என்று அத்தனை மெட்ரோ நகரங்களிலும் கிளைபரப்பி விரித்திருக்கும் கே.ஜே.எம். என்னும் ரியல் எஸ்டேட் கம்பெனியின் நிர்வாக இயக்குனர். ராம்நாத் அதே நிறுவனத்தின் சென்னைக் கிளைக்கு ரீஜினல் மேனேஜர். பரமேஸ்வரன் டெல்லியிலிருந்து கிளம்பி வந்து காரியத்தையே மறந்து காளியப்பனின் தோப்பைப் பார்த்து மலைத்துப் போய் நின்றார்.

“”நல்ல விளைநிலங்களா இருக்கே எப்படி வித்தாங்க? இதெல்லாம் அசலான விவசாய நிலங்களா இருந்துருக்கும் போலருக்கே…” ஆச்சர்யமாய்க் கேட்டார் பரமேஸ்வரன்.

“”ரொம்ப காலத்துக்கு முன்னாலியே விவசாயம் நொடிச்சுப் போயிருச்சு ஸார்; அதான் நமக்கு வசதியாப் போயிருச்சு.. அரசியல்வாதிங்களையும், அரசாங்க அதிகாரிகளையும் சரிக்கட்டுறதுக்குதான் ரொம்ப செலவழிக்க வேண்டி இருந்துச்சு சார்…” என்றார் ராம்நாத்.

“”எல்லாம் சரிதான் ராம்நாத்.. இந்த நெலத்தையும் வாங்கிப் போட்டிருந்தீங்கன்னா நாம் இப்ப வந்திருக் வேண்டிய அவசியமே வந்திருக்காது…”என்றார்.

“”எவ்வளவோ பேசிப் பார்த்துட்டோம் ஸார்; இந்த நெலத்துக்காரன் எதுக்குமே மசிய மாட்டேங்குறான்…”

“”கவலைப்படாதீங்க… வாங்கிடலாம்; அதுக்குத்தான நான் வந்துருக்கேன்; மத்தவங்களுக்குக் குடுத்தத விட கொஞ்சம் காசை அதிகமாத் தூக்கி எறிஞ்சா சலாம் போட்டுக் குடுத்துடுவாங்க..” பரமேஸ்வரனின் குரலில் நம்பிக்கையும் பலரை இப்படி வீழ்த்திய அனுபவமும் வழிந்தது.

சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் நெடுஞ்சாலையில் கொஞ்சம் உள்ளடக்கி பரந்து விரிந்து கிடக்கிறது சுமார் முன்னூறு ஏக்கர் நிலம். சுற்றிலுமிருக்கிற நிலங்களையெல்லாம் கே.ஜே.எம். ஏற்கனவே காசு கொடுத்து கையகப்படுத்திவிட்டது. அடுக்குமாடி வீடுகளும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களுமாய் வானத்தை எட்டிப் பிடிப்பது மாதிரியான உயர உயரமான கட்டிடங்களாக நிர்மாணிக்க உத்தேசித்திருக்கிறார்கள். சிங்கப்பூரிலிருந்தும், லண்டனிலிருந்தும் பெரிய பெரிய ஆர்க்கிடெக்ட் ஜாம்பவான்கள் எல்லாம் வரப்போகிறார்கள். இந்தப் பகுதியின் முகமே மாறப்போகிறது. அதற்கு பெரிய முட்டுக்கட்டையாக இருப்பது காளியப்பன்தான். பரமேஸ்வரன் அவரைச் சமாதானப்படுத்தி நிலத்தை வாங்குவதற்காகத் தான் டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறார்.



வேப்ப மரத்துக் காற்று சிலுசிலுவென்றிருந்தது. பம்பு செட்டிலிருந்து தண்ணீர் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.காளியப்பன் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தபடி கீழே உட்கார்ந்திருந்த வயதான பெண்மணிக்கு வெற்றிலை இடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்தப் பெண்மணிக்கு தொண்ணூறுக்கு மேல் வயதிருக்கும். கூன்விழுந்து, உடம்பெல்லாம் சுருங்கி முகத்தில் ஏகப்பட்ட சுருக்கங்களுடன் சந்தோஷமாய்ச் சிரித்துக் கொண்டிருந்தார்.

பரமேஸ்வரனும் ராம்நாத்தும் அங்கே போகவும், காளியப்பன் கயிற்றுக் கட்டிலிலிருந்து எழும்பி, அவர்களை வரவேற்று கட்டிலில் உட்கார வைத்தார்.

“”உங்க நில விஷயமாப் பேசத்தான் வந்தோம்…” பரமேஸ்வரன் நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

“”அப்பவே நான் ஸார்ட்ட சொல்லிட்டனே, அதை எப்பவுமே நான் விக்கிறதா இல்லன்னு…” என்றார் காளியப்பன்.

“”நீங்க கொஞ்சம் உங்க முடிவ மறுபரிசீலனை பண்ணணும்; எல்லாருக்கும் சென்ட்டுக்கு முப்பதாயிரம்னு கொடுத்துத் தான் கெரயம் பண்ணுனோம்; உங்க நிலத்துக்கு அம்பது தர்ரோம்; வீடுகள் கட்டி முடித்ததும் உங்க குடும்பம் குடியிருக்க மூணு படுக்கை அறை வசதி கொண்ட பிளாட் ஒண்ணும் ஃப்ரியாவே தர்ரோம்.. இப்பல்லாம் விவசாயத்துல என்ன வருமானம் வருது? போட்ட முதலே திரும்புறதுல்ல; உங்க மொத்த நிலத்துக்கும் சுமார் ரெண்டரைக் கோடி ரூபாய் கெடைக்கும். அதை வச்சு நீங்க வேற ஏதாவது பிஸினஸ் பண்ணலாம்; ஷேர்ல இன்வெஸ்ட் பண்ணலாம்; பேங்க்ல கூட டெபாஸிட் பண்ணலாம்… எதுல போட்டாலும் விவசாயத்துல வர்றத விட கண்டிப்பா அதிகமா வருமானம் வரும்…”

“”இதப் பாருங்க ஸார்; விவசாயத்த லாப நஷ்டக் கணக்குப் பார்க்கிற தொழிலா நாங்க நடத்தல; அது ஒரு வாழ்க்கை முறை; அது இல்லாட்டா செத்துப் போயிருவம் சார்..” என்றார் காளியப்பன்.

“”கொஞ்சம் சென்டிமென்ட்ட எல்லாம் தள்ளி வச்சுட்டு யோசிங்க மிஸ்டர் காளியப்பன்; காலத்துக்குத் தக்கன மாற வேண்டாமா? எல்லாத்துக்குமே பயன்பாடுன்னு ஒண்ணு இருக்குல்ல..”

“”அப்படி வாழ்க்கையில எல்லாத்தையும் பயன்பாட்டை மட்டும் வச்சி பார்க்க முடியாது ஸார்.. இதோ இந்தக் கிழவி.. அதான் எங்கம்மாவுக்கு 93 வயசாகுது. இனிமே பயன்பாடுன்னு பார்த்தா ஒண்ணுமே இல்ல; என்ன பண்ணலாம்? வெளில வீசிடலாமா?… விவசாயம் பண்ண விடுங்க.. நெலத்த விலைக்குக் கேட்டுக்கிட்டு இனி ஒருமுறை தயவு பண்ணி இங்க வராதீங்க…” கை கூப்பி வழி அனுப்பி வைத்தார் காளியப்பன்.

பரமேஸ்வரன் தான் படு தோல்வி அடைந்து விட்டதாக உணர்ந்தார். எல்லா வழிகளும் அடைபட்டுப் போனது போலிருந்தது. அலுவலகத்தில் உட்கார்ந்து நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த போது பரமேஸ்வரனுக்கு அந்த ஆச்சரியம் கவனத்திற்கு வந்தது. வில்லங்கம், பட்டா, சிட்டா அடங்கல் என்று எல்லா ஆவணங்களிலும் நிலத்தின் உரிமையாளராக சேதுராம அய்யர் என்பவரின் பெயரே இருந்தது. 1930க்கப்புறம் நிலம் கை மாறவே இல்லை. அப்படியே கை மாறி இருந்தாலும் அது முறையாகப் பதிவு பண்ணப்படவில்லை. உற்சாகத்தில் துள்ளிக் குதித்து ராம்நாத்தை சத்தம் போட்டு அழைத்தார்.

“”டாக்குமெண்ட்படி காளியப்பனுக்கோ அவரோட வாரிசுகளுக்கோ நிலத்துல எந்த பாத்தியதையுமே இல்லையே! அப்புறம் ஏன் நாம அவரோட மல்லுக் கட்டிக்கிட்டிருக்கோம்… சேதுராம அய்யரோட வாரிசு யாரையாவது கண்டுபிடிச்சட்டமின்னா, அவங்க மூலம் நெலத்த நம்ம கம்பெனிக்கு எழுதி வாங்கிக்கலாம்… இனியும் காலந்தாழ்த்தாம அவரோட வாரிசத் தேடுங்க..” என்றார் பரமேஸ்வரன்.

ஊருக்குள் அலைந்து வயதான கிழவர்களிடம் ஒருவர் விடாமல் விசாரித்ததில் மின்மினி மாதிரி ஒரு புள்ளி வெளிச்சம் தெரிந்தது. தொடர்ந்து பிரயாணித்ததில் சேதுராம அய்யரின் கொள்ளுப்பேரன் ஒருவன் நடேஷன் என்ற பெயரில் இப்போது மும்பையில் வசிப்பதாகத் தகவல் கிடைத்தது. பரமேஸ்வரன் உடனே மும்பைக்குப் பயணமானார்.



நடேஷனுக்கு சுமார் முப்பத்தைந்து வயதிருக்கும். தாராவி பகுதியில் சிதிலமடைந்து கிடந்த ஒரு பழைய வீட்டில் தன்னுடைய தாய், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அன்றாட வயிற்றுப் பாட்டுக்கே அல்லாடுகிற வறிய நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தார். எக்ஸ்போர்ட் பிஸினெஸ் நொடித்து சுகமெல்லாம் இழந்து, இப்போது 75 லட்ச ரூபாய் கடனுடன் தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். பரமேஸ்வரன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களின் பூர்வீக நிலத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினார்.

நடேஷனின் அம்மா, “”அது எங்க பூர்வீக நிலந்தான்; ஆனால் இப்ப அங்க எங்களுக்கு யாருமில்ல.. ரொம்ப காலத்துக்கு முன்னாலேயே சொத்தெல்லாம் வித்தாச்சே…!” என்றார்.

“”இல்ல, இன்னும் விற்கப்படாம ஒரு நாலரை ஏக்கர் விவசாய நிலம் இருக்கு; ஆனால் அனாமத்தா ஒருத்தன் அனுபவிச்சுக்கிட்டு இருக்கான்…” தான் கையோடு கொண்டு போயிருந்த ஆவணங்களைக் காட்டி விளக்கமளித்தார் பரமேஸ்வரன்.

“”நீங்க சேதுராம அய்யரோட லீகல் வாரிசுங்குறதுக்கான ஆதாரங்களோட என்னோட கௌம்பி, சென்னை வந்து உங்க நிலத்த எங்க கம்பெனிக்கு எழுதிக் கொடுத்தீங்கன்னா, உங்களுக்கு ரெண்டு கோடி ரூபாய் கெடைக்கும்; அதை வச்சு நீங்க உங்க பிரச்னைகல் எல்லாத்தையும் தீர்த்துக்கலாம்…” பரமேஸ்வரன் சொல்லச் சொல்ல நடேஷனின் முகம் பிரகாசமானது.

அவர்கள் காளியப்பனின் வீட்டிற்குப் போனார்கள். சேதுராம ஐயரின் பேரன் வந்திருக்கிறார் என்றதும் குடும்பமே நடேஷனை சந்தோஷமாகப் பார்த்தது. தம் தாத்தாவின் மீது அந்தக் குடும்பத்தினருக்கு அப்படியென்ன பாசம் என்ற யோசனையின் ஆழ்ந்தார் நடேஷன்.

ஆகஸ்ட் 15, 1947. சேதுராம அய்யர் தன் பண்ணையாட்களையெல்லாம் அழைத்து தன் வீட்டில் சமைத்த பசு மெய்யொழுகும் சர்க்கரைப் பொங்கலை தொன்னை இலைத் துண்டங்களில் கரண்டி கொள்ளாமல் அள்ளி அள்ளிப் பரிமாறினார். அவர் முகத்தில் சந்தோஷம் கொப்பளித்தது.

“”என்ன சாமி விசேஷம்..?” என்றான் இருளாண்டிப் பகடை.

“”நம்ம தேசத்துக்கு சுதந்திரம் வந்துருச்சுடா; நம்மள அடிமையா வச்சு ஆண்டுக்கிட்டிருந்த வெள்ளைக்காரன் நம்ம நாட்டை விட்டு வெளியப் போப்போறாண்டா..”

“”அதனால நமக்கு என்ன சாமி?”

“”அட முட்டாப் பயலே, நம்ம நாட்ட நாமளே, ராஜாங்கம் பண்ணப் போறம்டா…”

“”நீங்க ராஜாங்கம் பண்ணுவீங்க; நாங்க என்ன பண்ணப் போறோம் சாமி?” காளியப்பனின் அப்பன் இருளாண்டி கேட்டான்.

இருளாண்டியின் கேள்வி சேதுராம அய்யருக்கு சுரீலென்றது. அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. இந்தியாவில் சாதிகளின் ஆதிக்கம் உதிரும் நாள்தான் உண்மையான விடுதலை; அது சிந்திக்க இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடக்கணுமோ? என்று எண்ணிக் கொண்டார்.

“”வியாக்கியானமெல்லாம் பண்ணாம நீங்களும் சந்தோஷமா கொண்டாடுங்கடா; காந்தி இருக்கார்; அவர் உங்களக் கைவிட மாட்டாருடா… போடா, போயி சர்க்கரைப் பொங்கல சந்தோஷமா வாங்கிச் சாப்புடுடா, கேள்வி எதுவும் கேட்டுக்கிட்டு நிக்காம…” என்று விரட்டினார்.

1950 வாக்கில் அய்யரின் ஒரே பையனுக்கு டெல்லியில் மத்திய சர்க்காரில் வேலை கிடைத்து அவன் அங்கு போகவும், பையனை விட்டுப் பிரிந்திருக்க முடியாத அய்யரும் அய்யரம்மாவும் கிராமத்திலிருந்த நிலபுலன்களையும் சொத்து சுகங்களையும் விற்றுக் காசாக்கிக் கொண்டு டெல்லிக்கே போய்விட முடிவு செய்து, ஒவ்வொன்றாக விற்கத் தொடங்கினார்கள். கடைசியில் இருளாண்டியின் குடும்பம் குடிசை போட்டுத் தங்கியிருந்த ஏரிக்கரைத் தோப்பு நிலம் மட்டும் மீதமிருந்தது. அய்யர் இருளாண்டியை வீட்டிற்கு அழைத்தார்.

“”எல்லாத்தையும் வித்திட்டீங்களே சாமி, இனிமே இந்தப் பக்கமே வரமாட்டீகளா” இருளாண்டியின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

“”வயதான காலத்துல அங்கிட்டும் இங்கிட்டும் அலைய முடியாதில்லடா, அதான்; கொஞ்ச நஞ்ச தூரமா என்ன? நீ இப்ப இருக்குற தோட்டத்தப் பத்தி ஒரு முடிவு எடுக்கத்தான் உன்னைக் கூப்பிட்டேன்.. உங்க பாட்டன் காலத்துலருந்து எங்கள அண்டியே பொழச்ச, உங்கள அப்படி நிர்க்கதியா விட்டுட்டுப் போக மனசு கேட்கலடா.. பேசாம அந்த நெலத்த நீயே எடுத்துக்கடா…”

“”அய்யோ சாமி, என்கிட்ட ஏது அவ்வளவு பணம்? அதோட பகடையெல்லாம் சொந்தமா நெலம் வச்சுப் பொழச்சா, சம்சாரிங்க பார்த்துட்டு சும்மா இருப்பாங்களா என்ன?”

“”நான் முடிவு பண்ணீட்டேன்டா; அந்த நெலம் உனக்குத்தான்; அதை உனக்கு நான் தானமாத் தர்றதா ஏற்கெனவே பத்தரம் எழுதியாச்சு.. இந்தா பத்தரம். பத்தரமா வச்சுக்க…” என்று மடியிலிருந்து ஒரு பத்திரத்தை எடுத்துத் தரவும், “சாமி’ என்றபடி அவரின் கால்களில் விழுந்தான்.

“”அடக் கோட்டிப் பயலே எழுந்திருடா… பதமா பொழச்சுக்கடா. இதை அப்படியே வச்சுக்காதேடா, தலையாரிட்டக் குடுத்து பத்தரப் பதிவு ஆபிசுல போயி பதிஞ்சு வச்சுக்கடா…” என்றும் ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்.

கதை போல நிலம் தங்கள் கைக்கு வந்து வரலாற்றைச் சொல்லி, காலத்தின் கசங்களும் பழுப்புமேறிக் கிடந்த சேதுராம அய்யர் தன் பாட்டனுக்கு எழுதிக் கொடுத்த பத்திரத்தை எடுத்து நடேஷனிடம் கொடுத்தார் காளியப்பன்.

“”இதெல்லாம் செல்லாது மிஸ்டர் நடேஷன். ரெஜிஸ்டர் ஆபிஸ்ல இந்தப் பத்திரம் பதிவு பண்ணப்படவே இல்ல…” அவசரமாய்ச் சொன்னார் பரமேஸ்வரன்.

நடேஷன் அந்தப் பத்திரத்தையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். சேதுராம அய்யரின் கையெழுத்தை கைகளால் மெதுவாய் வருடினான். அவனது கண்களிலிருந்து கண்ணீர் பொங்கி வழிந்தது. நடேஷன் நா தழுதழுக்கப் பேசத் தொடங்கினான்.

“”மன்னிக்கனும் மிஸ்டர் பரமேஸ்வரன்; இந்த நெலத்தை காளியப்பனே தொடர்ந்து அனுபவிக்கட்டும். தானமாத் தந்தத திருப்பி வாங்குறது முறை இல்ல. நீங்க உங்க பிளான்ல மாற்றம் பண்ணிக்குங்க… மிஸ்டர் காளியப்பன். நாளைக்கு நீங்க பத்திர பதிவு அலுவலகத்துக்கு வந்துடுங்க, இதை முறைப்படி உங்க பேருக்கே மாத்திக் குடுத்துடுறேன்… அப்பதான் உங்களுக்குப் பின்னாடி பிரச்னை வராது…” என்றான் நடேஷன்.
நன்றி வாணிஸ்ரீ.

**************************************************************************

அன்புடன்
Vickna Sai. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக