"இறந்த பிறகும் நீங்கள் மறக்கப்படாமல் இருக்க வேண்டுமெனில், ஒன்று சிறந்த படைப்புகளை எழுதுங்கள் அல்லது பிறர் உங்களைப் பற்றி எழுதும் அளவுக்கு ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழுங்கள்"
மேற்கூறிய தத்துவத்தை உதிர்த்ததோடு மட்டுமல்லாமல் அதன்படியே வாழ்ந்துகாட்டியவர் பெஞ்சமின் பிராங்க்ளின்.
அவர் ஓர் அரசியல் தலைவர் மட்டுமல்ல, எழுத்தாளர், அறிவியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் என்ற பன்முகதன்மை கொண்ட மாமேதை.
இளமைக்காலம்
இவர் அமெரிக்காவில் உள்ள போஸ்டன் நகரில் 1706ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் திகதி ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார்.
இளம்வயதில் சுறுசுறுப்பும், குறும்புத்தனமும் கொண்டவராக விளங்கிய பெஞ்சமின் கணிதத்தில் சிறந்து விளங்கியதோடு ஸ்பானிஷ், இத்தாலி மற்றும் லத்தீன் மொழியையும் ஆர்வத்தோடு கற்றுக் கொண்டார்.
தனது சகோதரர் ஜேம்ஸுடன் ஏற்பட்ட சிறு தகராறில், கப்பலேறி நியூயார்க்கிற்கு பயணப்பட்ட போது அவருக்கு வயது 17.
எழுத்தும் அச்சுத்தொழிலும்
நியூயார்க்கிலிருந்து பிலெடெல்பியாவிற்கு சென்ற பெஞ்சமின், தனது 21வயதில் புகழ்பெற்ற ’ஏழை ரிச்சர்டின் பஞ்சாங்கம்’ (Poor Richard's Almanack) எனும் பல மொழிகளை உள்ளடக்கிய இதழை வெளியிட்டார்.
மிகவும் மாறுபட்ட பாணியில் வெளிவந்த அந்த இதழ் பெரும் வெற்றியையும், செல்வத்தையும் பெற்று தந்ததால் அச்சுத்தொழிலில் இறங்கிய பெஞ்சமின் தனது காதலி டெபோரா றீடையும் மணந்தார்.
அறிவியல் துறையும் கண்டுபிடிப்புகளும்
இதன் பிறகு அறிவியல் ஆராய்ச்சிகளிலும், பொது வாழ்விலும் பங்கு கொள்ள தொடங்கிய அவர் குளிரை போக்கும் ஸ்டவ் அடுப்பு, ஆர்மோனிகா எனும் இசைக்கருவி, இடிதாங்கி போன்ற பல அரிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்கினார்.
பல அறிவியல் சாதனங்களை கண்டுபிடித்துள்ள அவர், எந்த கண்டுபிடிப்பிற்கும் காப்புரிமை வாங்க மறுத்துவிட்டார்.
மற்றவர்களின் கண்டுபிடிப்புகளால் நாம் பயன்பெறும்போது நமது கண்டுபிடிப்பால் பிறர் பயன்பெறுவதை நாம் நற்பேறாகக் கருத வேண்டும் என எண்ணினார்.
தபால் துறை
மேலும், தபால் துறையில் பல சீர்சிருத்தங்களை மேற்கொண்ட அவரின் நினைவாக சுதந்திரம் அடைந்த பிறகு அவருடைய உருவம் பதித்த ‘5 செண்ட்’ தபால் தலையை அமெரிக்க அரசு வெளியிட்டு மரியாதை செய்துள்ளது.
அரசியல் வாழ்க்கை
பிலடெல்பியா நகர மக்களின் மனதை கவர்ந்த பெஞ்சமின் அந்த மக்களின் விருப்பத்தின் பேரில் அந்நகரத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
பின்னர் 1751ம் ஆண்டு பென்ஸில்வேனியா நகர மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அரசாங்கத்தால் லண்டனுக்கு சமரச தூதுவராக அனுப்பிவைக்கபட்டார்.
ஐந்தாண்டுகளில் தனது பணியை முடித்துவிட்டு நாடு திரும்பிய அவரை சட்டசபையில் இருந்து மறுபடியும் ஐரோப்பாவிற்கு அனுப்பினார்கள்.
உரிமைப்போர் தொடங்கவுள்ளது என்பதையும் அந்த போர் தொடங்கினால் நீண்ட நாட்களுக்கு நடக்கும் என்பதையும் உணர்ந்த அவர், குடியேற்ற நாடுகள் இரண்டிற்கும் சமாதானமே சிறந்தது என்று 10ஆண்டுகளாக போராடி வந்தார்.
தனக்கு வயதாகிவிட்ட நிலையிலும் அமெரிக்காவிற்காக போரை தடுப்பதற்கு பல முறைகளிலும் முயன்று கொண்டிருந்தார்.
அவரது சமரச தூது தோல்வியில் முடிந்தாலும், அமெரிக்கப் புரட்சியில் பெஞ்சமின் துப்பாக்கி மட்டும்தான் ஏந்தவில்லையே தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்துவந்தார்.
16ம் லூயியின் நட்பும், பாரிஸ் மக்களின் அன்பும்
பின்னர், அமெரிக்க குடியேற்ற நாடுகளின் கமிஷ்னராக பொறுப்பேற்ற போது, அமெரிக்காவை விட பிரான்ஸில் அதிக புகழ் பெற்றார்.
போருக்காக உதவிகேட்டு பிரான்ஸிற்கு சென்ற போது, பாரிஸ் நகரில் அவர் போகும் திசையெல்லாம் மக்கள் அவரை மொய்த்துக் கொண்டு, அவரைத் தொட்டு தங்கள் கண்ணில் ஒற்றிக்கொண்டனர். அவர்களின் அளவுகடந்த அன்பையும், மகிழ்ச்சியைக் கண்டு பெஞ்சமின் வியந்து போனார்.
பிரான்ஸில், 1778ம் ஆண்டு யூலை மாதம் 4ம் திகதி, அமெரிக்க சுதந்திர தினத்தை 50 பிரமுகர்களுடன் விருந்து வைத்துக் கொண்டாடினார்.
பிரான்ஸில் சிலகாலம் தங்கி தூதராக பணிபுரிந்த அவர், அமெரிக்கா திரும்ப பிரெஞ்சு மன்னர் 16ம் லூயியிடம் விடைபெற்று ஊர் திரும்பிய போது, பல்லக்கில் ஊர்வலமாக அரச மரியாதையுடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
அமெரிக்க அரசியல் சாசனக் குழு
தாயகம் திரும்பிய பின்னர், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியல் சாசனத்தைத் தயாரிக்க நியமிக்கப்பட்ட குழுவில் அவரும் ஒரு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். அவரது மேற்பார்வையில் உருவான அரசியல் சட்டம்தான் இன்றும் அமெரிக்காவை வழிநடத்துகிறது.
மறைவு
”எங்கு சுதந்திரம் வாழ்கிறதோ, அங்கேதான் என் நாடு இருக்கிறது” என்று கூறிய பெஞ்சமின் முதுமையும் நோயும் வாட்ட கடுமையான காய்ச்சலுக்கு ஆட்பட்டு 1790ம் ஆண்டு ஏப்ரல் 17ம் திகதி உயிர் நீத்தார்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக