இதற்கான காரணம் இந்தியத் தமிழர்களோ அல்லது மற்றைய நாடுகளில் வாழும் தமிழர்களோ தரம் குறைந்தவர்கள் என்ற பொருள் அல்ல. ஏரும் போரும் வீரத்தமிழனின் குலத்தொழில் என்று பெருமைப்பட்டுக் கொள்கின்றது தமிழர் வரலாறு.
அதை மீண்டும் உலகிற்கு காட்டியது ஈழத்தமிழினம். வேதனைகள் கண்டு வெதும்பிப்போகாது சாதனைகள் பல சாதித்துக்காட்டியது ஈழத்தமிழினம். இது எவராலுமே முடியாது என்ற செயல்களை எல்லாம் எங்களால் மட்டும் முடியும் என்று கூறியது தமிழன் சேனை.
ஓசியின் பின்னே எகிப்தில் இருந்து புறப்பட்ட இஸ்ரேலியர்கள் செங்கடலை பிளந்து சென்றதாக வரலாறு சொல்கின்றது. ஆம் உண்மையில் இலட்சியத்தில் ஒன்றுபட்ட ஒரு சமூகத்தை எந்த சக்திகளும் தடுத்துவிடப் போவதில்லை என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்திக்காட்டு.
இலங்கைத் தீவுக்குள் சிங்களப் பேரினவாதத்தின் இனவெறித் தாண்டவத்துக்கு இரையாக பல்லாயிரம் உயிர்களைப் பறிகொடுத்து காற்றடிக்கும் திசைகளில் பறக்கின்ற கடதாசிகளாக உலகத்தில் எங்கெல்லாம் அடைக்கலம் கிடைக்குமோ, அங்கெல்லாம் ஏதிலிகளாய் சென்று வாழ்ந்த போதிலும் தமிழன் என்ற சொல்லின் தனித்துவத்தை அங்கும் அடையாளப்படுத்தி வாழ்கின்றார்கள் ஈழத்தமிழர்கள்.
ஒரு பனம் விதையினை எந்த மண்ணில் போட்டால் என்ன அது பப்பாசியாக இனம் மாறுமா என்ன? காற்றில் பறந்த காகிதங்கள் எல்லாம் காற்றினை எதிர்த்து காற்றாடிகளாய் இன்றி எல்லோருமே வானத்தில் நிமிர்ந்து பார்க்கும் உயரத்தில் பறந்து கொண்டிருக்கின்றனர். இதுதான் தமிழனின் தனித்துவம்.
உலகத்தில் அடிமைப்பட்டும் அடக்குமுறைக்குள்ளும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த எத்தனையோ இனங்கள் நல்ல மனிதர்களின் வரவினால் எழுச்சி பெற்றதும், விடுதலை அடைந்ததும் வரலாற்றில் வரையப்பட்ட ஒன்று.
அது அகிம்சாவாதியாக இருந்தாலும் சரி, ஆயுதப் போராளியாக இருந்தாலும் சரி, நல்ல தலைவர்களினால் மட்டும் தான் ஒரு சமூகத்தை கட்டியெழுப்பி சுயமரியாதையுடனும் கௌரவத்துடனும் வாழவைக்க முடியும்.
உலகத்தில் இன்று பன்னிரண்டு கோடிக்கும் மேலான தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போது தமிழர்கள் என்று கூறும்போது முதலில் அடையாளம் காணப்படுபவர்கள் ஈழத்தமிழர்கள்.
இதற்கான காரணம் பிரபாகரன் என்ற ஒரு தலைமையின் கீழே தமிழர்கள் ஒன்றுபட்டு நின்றமையே ஆகும் இதை ஏறுக்கொள்ள முடியாது என்று சிலர் மறுத்தாலும் உண்மை இதுவே.
பிரபாகரன் என்றால் பயங்கரவாதி என்று அண்மை நாடு இந்தியா உட்பட உலக நாடுகளெங்கும் அறிவித்திருந்தாலும், தமிழர்களைப் பொறுத்தவரை பிரபாகரன் என்பவர் ஒரு சிறந்த பாதுகாவலனாகவும் ஒரு மிகச்சிறந்த அரசியல் போராளியாகவும் பலமிக்க ஒரு போர் வீரனாகவும் ஆசானாகவும் அநாதை பிள்ளைக்கொல்லாம் தாய் தந்தையாகவும் மட்டுமே அடையாளம் காணப்பட்டார்.
அவர் முள்தரித்த மரமாய் ஈழத்தீவிலே நின்றது தமிழர்களை காயப்படுத்த அல்ல முதுகெலும்பற்றவர்களாய் தவிக்கும் முல்லைகொடிகளான தமிழர்களுக்கு முதுகெலும்பாகவே. அவரது ஆட்சிக்காலத்திலே ஒழுக்கம் பண்பாடு, கலாசாரம் என்று தமிழர்களின் தனித்துவம் பேணப்பட்டது.
சாதாரண திரைப்படங்களில் வரும் முதலிரவு போன்ற அத்துமீறிய காட்சிகள் காமலீலைகள் போன்றன தணிக்கை செய்யப்பட்ட பின்னர்தான் மக்கள் பார்வையிடுவதற்கும் கடைகளில் வியாபாரம் செய்வதற்கும் அனுமதிக்கப்பட்டது.
இதற்காகவே (திரைப்பட வெளியீட்டுப்பிரிவு தமிழீழம்) என்ற ஒரு பிரிவு உருவாக்கப்பட்டது. கரும் கற்களாய் இருக்கும் தமிழர்களை எல்லாம் செதுக்கி காவியங்களாய் மாற்றியவர் பிரபாகரன் என்ற ஒரு மனிதன். ஆனால் 2009 தமிழீழ அரசு என்ற அந்த அங்கீகரிக்கப்படாத அரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இன்றுரைக்கும் நடைபெற்றுக் கொண்டிருப்பது என்ன?
சுதந்திரதாகம் கொண்ட இளையவர்கள் எல்லாம் மதுவுக்கும் மாதுவுக்கும் அடிமைகளாக்கப்படுகின்றனர் இதற்காக (சாராயக்கடைகள், மஜாஸ் நிலையங்கள்) ஏன் விபசார விடுதிகள்கூட திறக்கப்பட்டுள்ளது. இதை வடமாகண முதலமைச்சரே சில மாதங்கள் முன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்து சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையுடனும் வாழப்பழகிக் கொள்ளவேண்டிய இளையவர்கள் சிறு சிறு விடயத்துக்கொல்லாம் அடிதடி என்று தமக்குள்ளே மோதிக்கொண்டாலும் அதை தடுக்க வேண்டிய தேவை காவல்துறைக்கோ, சிறீலங்காவின் ஆட்சிபீடத்துக்கோ தேவையில்லை. உதாரணம் ( வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்ற மோதல்)
கலாசாரம், பண்பாடு உற்பட ஒரு மனிதனுக்கு அவசியமான அத்தனை பண்புகளும் கல்லூரிகளிலேயே கற்பிக்கப்படுகின்றது ஆனால் இன்று அத்தகைய கல்லூரிகளே அதை சீரழிக்கும் நிலையிலும் மொழிக்கும் இனத்துக்கும் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தினை மறந்ததாகவும் மாறியுள்ளமை வேதனையான விடயம்.
உதாரணம் (வடமாகாணத்தில் அதிகமான பாடசாலைகளின் பிரதான வாசலிலே ஆங்கிலத்தில் பெயர்கள் உள்ளமை. கல்லூரி உடைகளே இன்று கவர்ச்சியுடையாக மாறியமை. ஒரு சில கல்லூரிகளில் நடைபெறும் கலை நிகழ்வுகள், விருந்தினர் வரவேற்பு, போன்றவற்றின்போது தமிழர்களின் தனித்துவம் மறந்து செயற்படல்) இன்று ஆங்கிலம் பேசினால் அறிவாளி என்று ஆங்கில மோகத்துக்குள் மாணவர்களை தள்ளி தமிழ் மொழியின் அழிவுக்கு சில கல்லூரிகளே புதைகுழிகள் தேண்டிக் கொண்டிருக்கின்றன.
ஆளும்கட்சி அமைச்சர்கள் அல்லது வெளிநாட்டின் பிரதிநிதிகள் பாடசாலைக்கு வருகின்றபோது அவர்களை வரவேற்கும் மாணவர்கள் தென்னிலங்கை மக்களின் கலாசார உடைகளை அணிவதும் அவர்களைப் போன்றே உபசரிப்பதும் சில பாடசாலைகளிலே இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இது தவறு என்று கூறிவிட முடியாது ஆனால் எமது வீட்டிற்கு வரும் விருந்தினர்களை எமது பண்பாட்டிற்கமைய வரவேற்பதுதான் எமக்கு சிறப்பு.
ஆடைக் குறைப்பு என்பதே இன்று நாகரீகமாகிவிட்டது சில கல்லூரி உடைகளே கவர்ச்சியுடைகளாக இன்று மாறிவிட்டது. பல பிரபல பாடசாலைகளின் பென் பிள்ளைகள் முழங்காளுக்கு மேல் ஆடை அணிவதை உன்மையிலே வேதனையான விடயம் என்றே கூறலாம்.
இதைவிட ஒட்டுமொத்த தமிழினமும் வெடகப்பட வேண்டிய ஒரு விடயம் சில பாடசாலைகளின் பென் பிள்ளைகள் விளையாட்டுப் போட்டிகளின்போதும் பயிற்சிகளின்போதும் தொடைக்கும் மேலாக சினிமா நடிகைகள் கூட அணியாத அளவு மிகவும் குட்டையான பாவாடையினை அணியும் வழக்கத்தினை இன்று சாதாரணமாக கொண்டுள்ளமை.
வீடுகளிலேகூட தமது சகோதரர்கள் முன்னே அணியாத அந்த அளவு கேவலமான உடையினை அணிந்து வீதியோரமாய் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க எந்தவித கவலையும் இன்றி உள்ளாடைகள் தெரிய விளையாடிக் கொண்டிருப்பதினை பார்த்து கைகொட்டி வேடிக்கை பார்க்கும் அதிபர், ஆசிரியர்களை என்ன செய்வது?
இதற்கு அனுமதியளித்த கல்லூரி நிர்வாகத்தினை என்ன செய்வது? காரணம் கல்லூரிகளிலேயே இவ்வாறு ஆடைகள் அணியும் பெண்கள் நாளைய சமூகத்தில் எவ்வாறான ஆடைகளை அணிவார்கள்?
தமிழிச்சிகள் என்ற தனித்துவத்தினை எவ்வாறு காப்பாற்றுவார்கள்?
வடமாகாணத்தைனைப் பொறுத்தவரை அதிகமான பாடசாலைகள் தமிழ்ப் பாடசாலைகளே. எனவே தமிழ்ப் பாடசாலைகளே தம்மை தமிழில் அடையாளப்படுத்த மறந்தால் தமிழ் மொழிக்குரிய முக்கியத்துவத்தினை கொடுக்க மறுத்தால் அந்த பாடசாலையின் மாணவர்கள் எவ்வாறு தமிழ் மொழியின் சிறப்பினை அறிவார்கள்.பாதுகாப்பார்கள்.
எனவே கல்லூரிகள் இனியேனும் இதனை கவனத்திற் கொள்ள வேண்டும். இன்று தலைதூக்கியுள்ள கலாசார சீர்கேடு, பாலியல் துஸ்பிரயோகம் எல்லாம் நிச்சயமாக ஒரு சில தீயசக்திகளின் பின்னணி என்பது வெளிப்படையான ஒன்று.
அன்று திரைப்படங்களிலே வரும் முத்தக்காட்சிகளைகூட தணிக்கை செய்த ஈழத்தமிழர்களின் பிள்ளைகளுக்கு பரிசாக ஆடைகளற்ற ஆபாசப்படங்களை கல்வி நிலையங்களுக்கு முன்பாகவே விற்பனை செய்ய வேண்டிய அவசியம் ஒரு சிலருக்கு இன்று அவசியமாகிவிட்டது.
பனைகளாக வளர்க்கப்பட வேண்டிய வடலிகளை பச்சோந்திகளாய் வளர்க்க வேண்டிய தேவை சில கொடிய சக்திகளுக்கு இன்று அவசியம். விடுதலை கேட்காதே என விபச்சார விடுதி திறக்கப்பட்டது. அதிகம் சிந்திக்காதே சாராயக்கடையும் போதை மருந்து வியாபாரமும் ஊக்குவிக்கப்பட்டது.
எனவே நாளைய சந்ததியை நாம் யார் என்ற ஒரு நிலைக்கு மாற்றும் தேவை சிலரின் லட்சியம் என்றே கூறலாம், இதில் இருந்து மீட்டு தமிழினத்தையும் தமிழன் விழுமியங்களையும் நிலைநாட்டும் கடமை கல்லூரிகளுக்கு மட்டுமே அதிகமாக உள்ளது.
எனவே இதனை கருத்தில் கொண்டு கல்லூரிகள் செயற்பட வேண்டும். பாடப்புத்தகத்திலேயே எழுத்துப் பிழைகள் தேவையற்ற பாடங்கள் அறிவியலுக்கோ,ஆன்மீகத்திற்கோ ஒவ்வாத கதைகள் என பாடபுத்தகத்திலேயோ சில சீர்கோடுகள் இதை எல்லாம் கல்லூரிகள் கவனத்திற் கொள்ள வேண்டும்.
எழுத்துப் பிழைகளுடன் வரும் புத்தகங்களை மாணவர்களின் கைகளிலே கொடுக்கக்கூடாது. சம்பளம் போதாது, நியமனம் வேண்டும் என்றெல்லாம் போராட்டம், வேலைநிறுத்தம் செய்யும் அமைப்புக்கள் ஆசிரியர்கள், பாடசாலை நூல்களுக்கெதிராக அதன் மொழிக்கொலைகளுக்கெதிராக போர்க்கொடி தூக்க வேண்டும்.
மாணவர்களுக்கு கலை, கலாசாரம், பண்பாடு என்பவற்றையெல்லாம் அள்ளித்தர வேண்டும்.நல்லதோர் சமூகத்தினை உருவாக்கி தமிழன்னையின் கண்ணீரையும் கவலையினையும் துடைக்க வேண்டும்.
உரமும் நீரும் கொடுத்து மரத்தை வளர்ப்பதைப்போல் நல்ல உணர்வுகளையும் சிறந்த கல்வியினையும் கொடுத்து உலகம்போற்றும் தலைவர்களாய் மாற்ற வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக