தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 12 ஏப்ரல், 2014

இன்று விபுலானந்தர் அடிகளின் பிறந்ததினம்!!


ஈழம் தந்த அரிய தமிழ் மணிகளில் ஒருவர். இலங்கை, மட்டக்களப்புக்குத் தெற்கே அமைந்துள்ள காரைத்தீவில் சாமித்தம்பி - கண்ணம்மை தம்பதிக்கு 1892, மார்ச் 27ம் தேதி பிறந்தார். அவருக்கு தமிழ்க் கடவுள் முருகனின் திருநாமங்களில் ஒன்றான ‘மயில்வாகனன்’ என்ற பெயரிட்டு வளர்த்தனர்.அவர் தொடக்கக் கல்வியை குஞ்சுத்தம்பி என்ற ஆசிரியரிடமும், தமிழையும், வடமொழியையும் புலோலி வைத்தியலிங்கத் தேசிகரிடமும் கற்றார். குறிப்பாக, நன்னூல், சூளாமணி நிகண்டு உள்ளிட்டவற்றையும் குறளையும் ஆழ்ந்து கற்றார்.

கேம்பிரிட்ஜ் தேர்வில் முதல் வகுப்பில் வென்ற அவர், பின்னர் இலங்கைத் தலைநகர் கொழும்பு சென்று அங்கு ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றார். தொடர்ந்து அறிவியல் கல்வியும் கற்று அதில் பட்டப்படிப்பு ஒன்றையும் முடித்தார். பின்னர் லண்டன் பல்கலைக் கழகத்தின் படிப்பான இளம் அறிவியல் பட்டப் படிப்பிலும் வென்றார். 28வது வயதிலேயே கல்லூரி ஒன்றின் முதல்வர் பதவி அவரைத் தேடி வந்தது.

1924ம் ஆண்டு இவரது வாழ்வில் முக்கியத் திருப்பம் நேர்ந்தது. மயில்வாகனனாக இருந்த இவருக்கு சிவானந்த சுவாமிகள் என்ற துறவி, காவி உடை அளித்து சுவாமி விபுலானந்தராக்கி ராமகிருஷ்ண மடத்தின் துறவிகளில் ஒருவராக்கினார். தமிழில் அறிவியல் இல்லை என்ற அவச் சொல்லைத் தீர்க்கும் முயற்சியில் 1934ல் உருவான "சொல்லாக்கக் கழக"த்தின் தலைமையை ஏற்றுச் செயல்பட்டவர் அடிகள்.

யாழ் நூல் தவிர, மதங்க சூளாமணி, நடராஜ வடிவம் போன்ற அரிய நூல்களை எழுதி, இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பெரும்புலவர் வரிசையில் தன் சுவடுகளைப் பதித்தவர். இவரது புகழ் பெற்ற ‘யாழ் நூல்’ கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழ் நாட்டின் திருக்கொள்ளாம்புதூர் கோவிலில் 1947ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி அரங்கேறியது. இந்த மகத்தான சாதனையைச் செய்து முடித்த அடுத்த மாதமே விபுலானந்தர் (19.07.1947) காலமானார். வெறும் 55 ஆண்டுகளே வாழ்ந்து தமிழுக்கு இணையற்ற நூலை உருவாக்கிய அவர் பெயர் தமிழ் இலக்கிய வரலாற்றில் நிரந்தரமாக நிலைத்திருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக