சிவ சிவ
274.தேவாரம் பாடல் பெற்ற திருக்கோயில்:204.அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில்
ஊர்:குற்றாலம்
மாவட்டம்:திருநெல்வேலி
மூலவர்:குற்றாலநாதர்
அம்பாள்:குழல்வாய்மொழி, பராசக்தி (இரண்டு அம்மன் சன்னதிகள்)
பாடியவர்கள்:ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், பட்டினத்தார், அருணகிரிநாதர்
தேவாரப்பதிகம்:
திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து தேவிபாகம் பொருந்திப் பொருந்தாத வேடத்தால் காடுறைதல் புரிந்த செல்வர் இருந்த இடம்வினவில் ஏலங்கமழ் சோலையின வண்டுயாழ்செய் குருந்த மணநாறும் குன்றிடஞ்சூழ் தண்சாரல் குறும்பலாவே.
தேவாரப்பாடல் பெற்ற 274 திருக்கோயிலில் இது 204 வது தேவாரத்தலம் ஆகும்.
தல வரலாறு:
திருக்கயிலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடக்கிறது. இதை தரிசிக்க பிரம்மா, விஷ்ணு, முப்பத்துமுக்கோடி தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோர் வந்துள்ளனர். இதனால் பூமியின் வடதிசை தாழ்ந்து, தென் திசை உயர ஆரம்பிக்கிறது. இதை சமப்படுத்த சிவன் அகத்தியரை அழைத்து,""நீ ஒருவன் மட்டும் தென்திசை சென்றால் போதும், உலகம் சமநிலைக்கு வந்துவிடும். அத்துடன் இதுநாள் வரை குற்றாலத்தில் விஷ்ணுவாக அருள்பாலித்து வந்த என்னை, சிவலிங்கமாக்கி மகுடாகமப்படி பூஜை செய்தால் எங்களது திருமணத்தை இங்கிருந்தபடியே தரிசிக்கலாம்,''எனக்கூறி அனுப்பிவைக்கிறார்.சிவனின் கட்டளைப்படி அகத்தியர் குற்றாலம் வந்து, விஷ்ணு வடிவில் அருள்பாலிக்கும் சிவனை தரிசிக்க செல்கிறார். ஆனால் அங்கிருந்த துவாரபாலகர்கள் சைவ சமயத்தை சேர்ந்த அகத்தியரை கோயிலுக்குள் விடவில்லை. இதனால் வருத்தமடைந்த அவர் இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள இலஞ்சிக்குமாரர் கோயிலுக்குச் சென்றார். அங்கு வெண்மணலில் லிங்கம் பிடித்து, சிவனை வழிபட்டார்.தான் குற்றாலத்தில், சிவதரிசனம் செய்ய அருளும்படி வேண்டினார். அவருக்கு காட்சி தந்த முருகன், ""அகத்தியரே! தாங்கள் சிவக்கோலத்தை கலைத்துவிட்டு, வைணவக்கோலத்துடன் கோயிலுக்குள் சென்று பெருமாளை சிவலிங்கமாக்கி வழிபாடு செய்யுங்கள்,''என யோசனை கூறுகிறார்.முருகனின் யோசனைப்படி அகத்தியரும் நெற்றியில் திருமண் இட்டு, கழுத்தில் துளசி மாலை அணிந்து கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்கிறார். உடனே திருமாலின் கையில் சங்கு இருந்த இடத்தில் மான், துளசி இருந்த இடத்தில் சந்திரன், பொட்டு இருந்த இடத்தில் நெற்றிக்கண், ரத்தினம் இருந்த இடத்தில் பாம்பு என அனைத்தும் மாறியது.அத்துடன் உயரமாயிருந்த திருமாலின் தலையில் கைவைத்து, திருமேனி குறுக குறுக என சிவனை வேண்டி பிரார்த்தனை செய்ய, நெடிய திருமால் குறுகிய சிவனாக மாறி விடுகிறார். அந்த இடத்திலேயே அகத்தியருக்கு திருமண காட்சி கிடைக்கிறது. இன்றும் கூட இத்தலத்தில் பகலில் தேவர்களும், இரவில் அகத்தியரும் பூஜை செய்வதாக கூறப்படுகிறது. அகத்தியர் தன் கைவிரல்களால் சிவலிங்கத்தில் தலையில் வைத்து அழுத்தியதால் இன்றும் கூட லிங்கத்தின் மேல்பகுதியில் விரல்களின் தடம் இருப்பதை காணலாம்.இலஞ்சியில் அகத்தியர் பூஜித்த சிவன், "இருவாலுக நாயகர்' என்ற பெயரில் அருளுகிறார். குற்றாலநாதரை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள், முதலில் இந்த சிவனை தரிசித்துவிட்டு இங்கு வருவது விசேஷ பலனைத் தரும். இக்கோயில் திருமால் தலமாக இருந்தபோது, சங்கு வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. தற்போதும் இக்கோயில் சங்கின் வடிவில் இருப்பதைக் காணலாம். திருக்குற்றால மலையிலுள்ள செண்பகாதேவி, கோயிலுக்குச் செல்லும் வழியில், அருவியின் மேற்பரப்பில் இருந்து இந்த வடிவத்தை பார்க்கலாம்.மகாலட்சுமியின் அம்சமான சங்கு, ஆற்றலின் வடிவமாகும். இதன் ஒலி, சக்தியைத் தருவதாகும். எனவேதான், சிவபூஜையில் சங்கு ஒலிக்கும் வழக்கம் உண்டு. இதன் அடிப்படையிலும், இக்கோயில் சங்கின் அமைப்பில் அமைந்திருப்பதாகச் சொல்வர். இங்கு 8 கால பூஜையிலும், சிவன் சன்னதியில் சங்கு ஊதுகின்றனர்.நான்கு வேதங்கள் 4 வாயிலாகவும், இறைவனின் நடனம் காண பிலவேந்தன் வந்த வழி ஐந்தாவது வாயிலாகவும் அமைந்துள்ளது. இங்குள்ள துவாரபாலகர்களின் அமைப்பு மிகவும் சிறப்பானது. இக்கோயில் வைணவக்கோயிலாக இருந்த போது, அகத்தியர் நேற்று வந்தாரா? என ஒரு துவாரபாலகர் கேட்பதைப்போலவும், இன்னொரு துவார பாலகர் அவர் வரவில்லை என கூறுவதைப்போலவும் உள்ளது.நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் என பஞ்சபூத லிங்கங்களையும் இங்கு ஒன்றாக தரிசிக்கலாம். பஞ்ச சபைகளான பொற்சபை, வெள்ளி சபை, தாமிர சபை, ரத்ன சபை, சித்ர சபை என்ற 5 சபைகளில் குற்றால நாதர் கோயில் அருகே சித்ர சபை அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் நடராஜர் சித்திரமாக அருளுகிறார்.சிவனுக்கு, அபிஷேகம் செய்த தைலம் பிரசாதமாகவும் தருகின்றனர். இதுதவிர, தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, "கடுக்காய் கஷாய' நைவேத்யம் படைக்கின்றனர். அருவி விழும் இடத்தில் இருப்பதால் சிவனுக்கு ஜுரம், குளிர்காய்ச்சல் உண்டாகாமல் இருக்க இந்த கஷாயம் படைக்கின்றனர். சுக்கு, மிளகு, கடுக்காய் உள்ளிட்ட மூலிகைகள் சேர்த்து தயாரிக்கும் இதை, "குடுனி நைவேத்யம்' என்கிறார்கள். சக்தி பீடங்கள் 64ல் இது, "பராசக்தி பீடம்' ஆகும். இத்தல அம்பிகை, "குழல்வாய்மொழிநாயகி' என்றழைக்கப்படுகிறாள். ஐப்பசி பூரத்தன்று திருக்கல்யாண விழா நடக்கிறது.
தலவிருட்சம் பலா மரத்தைச் சுற்றி சிறிய சன்னதி எழுப்பப்பட்டிருக்கிறது. இம்மரத்தின் கீழ் "ஆதிகுறும்பலாநாதர்' பீட வடிவில் காட்சி தருகிறார். இந்த மரத்தில் வருடத்தின் அனைத்து நாட்களிலும், பலா காய்த்துக் கொண்டிருக்கும். இதை யாரும் பறிப்பதில்லை. இந்த பலாவில் உள்ள சுளைகள், "லிங்க'த்தின் வடிவில் இருப்பது கலியுக அதிசயம். இதை பழமையான நூலான குற்றாலக்குறவஞ்சி, ""சுளையெலாஞ் சிவலிங்கம்'' என்று குறிப்பிடுகிறது. விசேஷ காலங்களில் சிவனுக்கு, பலா சுளையை பிரதானமாக படைக்கின்றனர். இதுதவிர பல்லாண்டுகள் பழமையான பலா மரம் ஒன்று பிரகாரத்தில் உள்ளது. இதனை சிவனாகவே பாவித்து, நைவேத்யமும் படைத்து தீபாராதனை செய்கின்றனர்.: "கு' என்றால் பிறவிப்பிணி. "தாலம்' என்றால் தீர்ப்பது என்று பொருள். இத்தலத்தை வழிபட்டால் இம்மையிலும், மறுமையிலும் உள்ள பிறவிப்பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன.
பிரார்த்தனை;
த்தி சுவாதீனம் இல்லாதவர்களும், தோல் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களும் குற்றால அருவியில் நீராடி குற்றால நாதரை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும். தீராத தலைவலி உள்ளவர்கள் இங்கு சிவனை வழிபட்டு, தைல பிரசாதம் பெற்றுச் செல்கிறார்கள். இதை தேய்த்துக் கொண்டால் தலைவலி பிரச்னை நீங்குவதாக நம்பிக்கை.
இருப்பிடம் :
தென்காசியில் இருந்து 5 கி.மீ., தூரத்தில் குற்றாலம் கோயில் அமைந்துள்ளது.தமிழகத்தின் எந்த பகுதியிலிருந்தும் எளிதில் குற்றாலத்திற்குச் செல்லலாம். மதுரையிலிருந்தும் (155 கி.மீ) திருநெல்வேலியிலிருந்தும் (60 கி.மீ).திருச்சிற்றம்பலம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக