தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 27 நவம்பர், 2014

ரோகிணியின் மேல் கொண்ட ஆசை: சந்திரனுக்கு வந்த சாபம்!

மனித குலம் வளர, படைப்புத் தொழிலில் ஒரு முக்கியப் பங்காற்றப் படைக்கப்பட்டவர் தட்சப் பிரஜாபதி.
அவருக்குப் பல குழந்தைகள். அவற்றிலிருந்து 27 பெண் குழந்தைகளைச் சந்திரனுக்குத் திருமணம் செய்து வைத்தார்.
ஆனால் சந்திரனுக்கோ, அத்தனை மனைவியரிலும், ஒரே ஒரு மனைவி மேல் மட்டுமே கொள்ளைப் பிரியம். அவள்தான் ரோகிணி. சகோதரிகள் அனைவரிலும் ரோகிணியே மிகவும் அழகுடையவளாக இருந்தாள்.
எப்போது பார்த்தாலும் சந்திரன் ரோகிணியுடன் மட்டுமே நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்தான். மற்ற மனைவியரை ஏறிட்டும் பார்க்கவில்லை.
சந்திரனின் இந்தச் செயல் மற்ற சகோதரிகளுக்குக் கலக்கத்தைத் தந்தது. சில காலம் பொறுத்துப் பார்த்தார்கள். ஆனால், அவன் குணம் மாறாது என்று தெரிந்த பிறகு, அவர்கள் நேராகத் தங்கள் தந்தையான தட்சனிடம் சென்றார்கள்.
‘அப்பா! எங்கள் அனைவரையும் சந்திரன் சமமாகப் பார்ப்பதில்லை. எப்போது பார்த்தாலும் ரோகிணியுடனே நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறார்’ என்று முறையிட்டார்கள்.
தட்சனின் அறிவுரை
பெண்களின் குறையைக் கேட்ட தட்சன், சந்திரனிடம் சென்றார். சந்திரனே! ரோகிணியின் மேல் உனக்கு உள்ள அன்பைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். ஆனால் அதற்காக உன் மற்ற மனைவியரைக் கண்டு கொள்ளாமல் விடுவது சரியல்ல! எல்லோரையும் ஒன்று போல நடத்து என்று புத்திமதி சொன்னார்.
ஆனால், சந்திரனிடம் சொன்ன இந்த வார்த்தைகள், செவிடன் காதில் ஊதிய சங்காகப் போனது. சந்திரன் மாறின வழியாகத் தெரியவில்லை. வழக்கம் போல ரோகிணியிடம் மட்டும் அன்புடனும், மற்ற மனைவியரைக் கண்டுகொள்ளாமலும் இருந்தான்.
தட்சன் மீண்டும் மீண்டும் அறிவுரை சொல்லிப் பார்த்தார். சந்திரனோ கேட்பதாக இல்லை.
விரக்தியடைந்து போன மற்ற சகோதரிகள், தட்சனிடம் வந்தார்கள். ‘அப்பா! இனிமேல் நாங்கள் சந்திரனுடன் வசிக்க மாட்டோம். அன்பில்லாத ஒரு கணவனிடம் இருப்பதை விட, உங்கள் மகள்களாக உங்களுக்குப் பணிவிடை செய்துகொண்டு இங்கேயே இருந்து விடுகிறோம்’ என்று சொன்னார்கள்.
சாபத்தால் தேய்ந்தான்
தட்சன் பொறுமையிழந்தார். கடும் கோபத்துடன், உடனடியாகக் கிளம்பி சந்திரன் இருந்த இடத்தை வந்தடைந்தார்.
‘சந்திரனே! உனக்கு மீண்டும் மீண்டும் புத்திமதி சொல்லியும், இப்படிப் பாரபட்சமாக நடந்து கொள்கிறாயே! உன் இந்தத் தவறுக்கு நீ தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். இனி நீ சயரோகம் பிடித்து, கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து களையிழந்து போகக்கடவது’ என்று சபித்தார்.
சாபம் வேலை செய்ய ஆரம்பித்தது. ஒளி பொருந்தியவனான சந்திரன், களையிழந்து நாளுக்கு நாள் தேய ஆரம்பித்தான்.
சந்திரன் இப்படித் தேய்ந்து போனதும், அவனைச் சார்ந்து பூமியில் வளர்ந்திருந்த பல செடி– கொடிகளும், பயிர்களும் நாசமாகிப் போயின. சுவையுள்ள உணவுப் பண்டங்கள், சுவையில்லாமல் போக ஆரம்பித்தன. விலங்குகளும் உடல் வலிமை குன்றி, நொடிந்து போகத் தொடங்கின.
பூமியில் இப்படிப் பிரச்சினைகள் வளர்வதைக் கண்டு, தேவர்களுக்குக் கலக்கம் உண்டானது. சந்திரனைச் சார்ந்திருக்கும் உயிர்கள் எல்லாம் பிரச்சினையில் வாடுவதைக் கண்டுகொண்ட அவர்கள், சந்திரனையே சந்தித்துக் காரணம் கேட்கலாம் என்று அவனிடம் வந்தார்கள்.
பூமியின் நலனுக்காக
அப்போது, ஒளியிழந்து உருக்குலைந்து நின்றிருந்த சந்திரனைக் கண்டார்கள், அவர்களுக்கு வருத்தம் ஏற்பட்டது. ‘சந்திரனே! உன் நிலைமை ஏன் இப்படியானது? பூமியில் நடக்கும் பிரச்சினைகளுக்கும், உன்னுடைய இந்த நிலைதான் காரணமா? எதனால் இப்படி நடக்கிறது? எங்களுக்குச் சொல்’ என்று பதைபதைப்புடன் கேட்டார்கள்.
நடந்த விடயங்களை எல்லாம் சந்திரன் மற்ற தேவர்களுக்கு ஒன்று விடாமல் விளக்கமாக விவரித்தான்.
‘பூமியின் நிலைமையைச் சரி செய்ய ஒரே வழி, தட்சனை சமாதானப்படுத்துவது தான்’ என்று உணர்ந்த தேவர்கள், தட்சனை அணுகினார்கள்.
‘தட்சனே! சந்திரன் செய்தது தவறுதான். அதற்கான தண்டனையை அவன் அனுபவித்தே ஆக வேண்டும். ஆனால் இப்போது நீங்கள் இட்ட சாபத்தின் காரணமாக, சந்திரனுடன் சேர்ந்து பூமியிலுள்ள பயிர்களும், உயிர்களும் கூடத் துன்பத்தை அனுபவிக்கின்றன.
நியாயத்தை உணர்ந்தவரான நீர்தான், இதற்கு நல்வழி செய்ய வேண்டும்’ என்று வேண்டினார்கள்.
தட்சனும் தேவர்கள் பேச்சில் உள்ள நியாயத்தை உணர்ந்தார். மனமிரங்கிய அவர், ‘தேவர்களே! இந்தச் சாபம் உடனடியாக விலக வழியில்லை. ஆனாலும், இனிமேல் சந்திரன் 15 நாட்கள் தேய்ந்தும், அடுத்த 15 நாட்கள் வளர்ந்தும் இருப்பான்.
மேலும், அவன் இழந்த ஒளியை மீண்டும் பெறுவதற்கும் ஒரு வழி இருக்கிறது. சரஸ்வதி நதி, கடலில் கலக்கும் மேற்குப் பகுதியில் சந்திரன் நீராட வேண்டும். அதன்பிறகு சிவபெருமானை வேண்டி வழிபட வேண்டும் என்று வழி சொன்னான்.
தட்சனுக்கு நன்றி தெரிவித்துவிட்டுத் திரும்பிய தேவர்கள், சந்திரனிடம் வந்து அவன் சாப விமோசனம் அடைவதற்கான வழியைச் சொன்னார்கள்.
சாபம் போக்கிய தீர்த்தம்
அதன்படி சந்திரனும் சரஸ்வதி நதியில் குளித்து சிவபெருமானை வழிபட்டான். இதையடுத்து ஒளியிழந்த நிலை மாறி மீண்டும் தன் பழைய ஒளியை அடைந்தான்.
சந்திரனின் நிலைமை சரியானதும், பூமியில் பயிர்களும், உயிர்களும் பழையபடி செழித்தோங்கி வளரத் தொடங்கின. தட்சனின் சாபம் முழுமையாக நீங்காததன் காரணமாக, சந்திரன் 15 நாட்களுக்கு ஒரு முறை தேய்ந்தும், வளர்ந்தும் வரத் தொடங்கினான்.
சந்திரன் தன் சாபம் நீங்க, சரஸ்வதி நதியில் குளித்த அந்த இடம் ‘பிரபாச தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் நகருக்கு அருகே அமைந்திருக்கும் இந்த இடத்தில், இன்றும் கூடப் பலர் மகாளய அமாவாசை அன்று தங்கள் முன்னோர்களுக்கான பித்ரு காரியங்களைச் செய்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக