தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 17 நவம்பர், 2014

ஐயப்பன் விரதம்!


கார்த்திகை மாதம் (தமிழ்) 1ம் திகதி ஐயப்பன் விரதம் ஆரம்பிக்கத் தொடங்குவார். ஐயப்ப பக்தர்கள் கறுப்பு அல்லது நீல நிற உடை அணிந்து ஐயப்பன் பதக்கம் பொருந்திய துளசி மாலையை கழுத்தில் அணிந்து கொள்வர். விரதம் ஆரம்பிக்கும் நாள் கன்னி மூல கணபதியை மனதில் தியானித்துக் கொண்டு ஐயப்ப சங்க குருசாமி பக்தர்களினால் மாலை அணிய வேண்டும். முதல் மாலை அணிபவரை கன்னிச்சாமி என அழைப்பர். மூன்றாம் முறை மாலை அணிபவரை மணி கண்டன் என அழைப்பர்.

ஐயப்பனை வணங்கும் பக்தர்கள் கடுமையான விரதத்தினைக் கைக் கொள்வர். பிற தெய்வ வழிபாட்டிலும் முற்றிலும் வேறுபட்ட வழிபாடு ஐயப்ப வழிபாடு பிரமச்சரிய விரதம் மிகத் தீவிரமாக கைக்கொள்ளப்பட வேண்டும். மன அடக்கம் புலனடக்கம் சரீர அடக்கம் சேர்ந்து ஓர் உன்னதமான விரதத்தை கைக் கொள்வதன் மூலம் மனம் ஆசை வழிப்படாது தியானம் ஜெபம் பஜனை ஆகியவற்றை மேற்கொண்டு தவறான எண்ணங்களை நீக்கி இறைவழிபாடு செய்ய வேண்டும். கள்ளங்கபடம் இல்லாத நல்ல மனதில் இறைவன் குடிகொள்வான்.

இவ்விரதம் கைக்கொள்ளும் பொழுது மது மாமிசம், புகைத்தல், போதைவஸ்து என்று பஞ்சமா பாதகங்களை விலக்கி தைமாதம் முதலாம் திகதி அதாவது மகர ஜோதி காணும் வரை இறை வழிபாட்டுடன் இருத்தல் வேண்டும். குடும்பஸ்தர் கடும் பிரம்மச்சரிய விரதம் இருத்தல் வேண்டும். உலக ஆசாபாசங்களை நீக்கிட வேண்டும். அதாவது சினிமா பாடல்கள் கேட்டல் தொலைக்காட்சி பார்த்தல் சவரம் பண்ணுதல் நகம் வெட்டுதல் வாசனைப் பொருட்கள் பாவித்தல் தலையணை வைத்து உறங்குதல் போன்றவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். எந்நேரமும் ஐயப்பனை நினைத்து பஜனை செய்தல் நன்று.

பஸ்மாசுரனை வதம் செய்வதற்காக திருமால் மோகினியாக மாறிய பொழுது சிவனின் கடைக்கண் பார்வை திருமால் மேற்பட ஹரிஹர புத்திரனாகிய ஐயனார் அவதாரம் செய்தார். இவர் மார்கழி மாதம் பஞ்சமி திதி உத்தர நட்சத்திரம் சனிக்கிழமை பிறந்தபடியால் அன்று இவருக்கு விஷேட பூஜை நடைபெற்று வருகின்றது. மக்கள் பக்தியால் முக்தியடைய வேண்டிய ஹரிஹர புத்திர ஐயனார் கேரள நாட்டில் வாழ்ந்த ராஜசேகர பாண்டிய மன்னன் என அழைக்கப்படும் பந்தள ராஜன் வேட்டைக்கு சென்ற பொழுது பம்மை என்ற புண்ணிய பூமியில் பம்பை நதியில் ஓர் குழந்தையாக காட்சி கொடுத்தார்.

தனக்கு குழந்தை இல்லாத குறையை இறைவன் போக்கி விட்டான் என மகிழ்ந்த அரசன் குழந்தையின் கழுத்தில் மணி இருக்கக் கண்டு மணிகண்டன் எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தான். மணிகண்டன் வந்த சமயம் அரசிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

மணிகண்டன் வளர்ந்து பெரியவனானதும் அரசன் அவனுக்கு முடி சூட்டு விழா செய்ய ஆயத்தமானான். ஆனால் அரசிக்கு அது பிடிக்கவில்லை. மந்திரிமார்களுடன் சதியாலோசனை செய்தாள். பின்னர் கடும் வயிற்று வலியால் வருந்துவதாகவும் அதற்கு மணிகண்டன் வசம் புலிப்பால் கொண்டு வரும்படி கேட்டாள்.

தன் தாயின் வேண்டுகோளை ஏற்று புலிப்பால் கொண்டு வர கானகம் செல்லப் புறப்பட்டான் மணிகண்டன். மன்னனின் மனம் கலங்கியது. மகனே உனக்கு முக்கண்ணன் துணையிருப்பான் எனக்கூறி முக்கன் உடைய தேங்காயில் நெய்நிரப்பி மற்றும் பூஜைக்குரிய பொருட்கள் சேர்த்து ஒரு மூடி கட்டி மற்றதில் அவன் வழியில் உண்ண வேண்டி உணவும் கட்டி அனுப்பி வைத்தான். இதனையே இன்று இருமுடி என அழைக்கின்றனர்.

ஐயப்பன் மணிகண்ட பாலகனாக காட்டுக்குச் சென்று அங்கு மகரஜோதி காண்பிக்கப்படும் பொன்னம்பல மேட்டில் தான் யார் என்பதை உலகம் அறியும் வண்ணம் ஜெயந்தன் என்ற நம்போதிரிக்கு காட்சி கொடுத்தான்.

அப்போது தேவேந்திரர்கள் வந்து அவரை வணங்கி எல்லா தேவதைகளும் அவருக்கு பதினெட்டுப் படியாக மாறி ஒரு பீடத்தை அமைத்துக் கொடுத்து ஜோதியாக காட்சி கொடுக்கச் செய்தனர். பின்னர் புலிப்பாலுடன் புலிக்கூட்டத்தினருடன் புலியின் மேல் இருந்து ஐயப்பன் அரசனுக்கும் அரசிக்கும் காட்சி கொடுத்தான். தான் வந்த நோக்கம் நிறைவடைந்ததாகக் கூறி தந்தையிடம் ஆசி பெறச் சென்றான். வருந்திய தந்தைக்கு சபரிமலைப்பகுதியில் ஓர் அம்பை எய்கிறேன்.

அது எங்கு போய் நிற்கிறதோ அங்கு எனக்கு ஓர் ஆலயம் அமைத்து வழிபடுங்கள். மகர சங்கிராந்தியன்று நான் ஜோதி வடிவில் பொன்னம்பல மேட்டில் காட்சி தருவேன் எனக் கூறி அதன்படி சபரி மாலையில் பதினெட்டுப் படியுடன் கூடிய ஆலயத்தில் இருந்து கொண்டு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். ஐயப்பன் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு ஐந்து வித திருக்கோலங்களில் காட்சியளிக்கிறார்.

எரிமேலியில் கிராதரூபனாகவும் மகிஷியை வதம் செய்து முடித்த வேடனாகவும் குழத்துப் புழாவில் பாலகனாகவும் ஆரியங்காவில் இடையில் உடைவாளுடன் கிருகஸ்தனாகவும் அச்சன் கோவிலில் வானப் பிரஸ்தனாகவும் காந்த மலையில் சீவன் முத்தனாகவும் சபரிமலையில் முத்திரையுடன் அமர்ந்த கோலத்தில் பிரமச்சாரியாகவும் அருள் புரிகின்றார். இவை ஐயப்ப சுவாமிகளின் ஆறுபடை வீடுகளாக திகழ்கின்றன.

ஐயனார் இறைவனின் திருமூர்த்தங்களில் ஒன்றாக விளங்குகின்றது. சங்க காலத்திலிருந்தே ஐயனார் வழிபாடு இருந்து வந்துள்ளது. சாஸ்தா வழிபாடும் ஐயனார் வழிபாடும் ஐயப்ப சுவாமி வழிபாடும் ஒன்றாகக் கலந்து இன்று சபரிமலை ஐயப்ப விரதமாகத் திகழ்கின்றது. ‘யாதொரு தெய்வங் கண்டீர் அத்தெய்வமாகியாங்கே மாதொரு பாகனார்தான் வருவா’ என்று சிவஞான சித்தியாரிலும் ‘எவ்வுருவில் யார் ஒருவர் உள்குவார் உள்ளத்துள் அவ்வுருவாய்த் தோன்றி அருள் கொடுப்பான்’ என்று திருக்கைலாய ஞான உலாவிலும் கூறப்பட்டதிலிருந்து முழு முதற் கடவுளாகிய சிவபெருமான் துஷ்ட நிர்க்கிரக சிஷ்ட பரிபாலனம்’ செய்யும் பொருட்டு பல மூர்த்தங்கள் எடுத்து அருள் புரிவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக