தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 1 அக்டோபர், 2014

கல்லூரி என்பது காதல்.....அலுவலகம் என்பது திருமணம்!


அரசியல் என்பது தற்போது சாதாரணமான ஒன்றாகிவிட்டது. எங்கும் அரசியல், எதிலும் அரசியல்.
வீட்டில் ஆரம்பித்து அலுவலகம் வரை அரசியல்.
சில பேர் கல்லூரி வாழ்க்கையை நன்றாக அனுபவித்துவிட்டு வேலைக்கு சேர்ந்தவுடன் அங்கு நடக்கும் அரசியலை சமாளிக்க முடியாமல் திணறிவிடுவார்கள்.
புதிதாக வேலைக்குச் சேர்பவர்கள் அலுவலக அரசியல் பற்றி அறிதல் வேண்டும்.
படிக்கும்போது பணமும் பதவியும் மட்டும் கண்ணுக்குத் தெரியும். வேலைக்குச் சேர்ந்த பிறகுதான் உங்களுடன் பணியாற்றுபவர்கள் உங்கள் பணி வாழ்க்கையைப் பாதிப்பதை உணர்வீர்கள்.
ஆனால் அந்தத் தீவிரம் புரிவதற்குள் நிறைய தவறான முடிவுகள் எடுத்திருப்பீர்கள்.
“ உன் படிப்புக்கு இன்னும் நல்ல கம்பெனியா சேந்திருக்கலாமே?” என்று தூண்டில் போடுபவரைக் கண்டு கொள்ளத்தெரியாது.
நேரில் ஒன்றைச் சொல்லிவிட்டு அதே சங்கதியை மின்னஞ்சலில் வேறு மாதிரி எழுதுபவரின் உள் நோக்கம் தெரியாது. “என்ன உதவி வேண்டுமானாலும் கேள்” என்று சொல்லும் வேறு துறை ஆசாமியிடம் என்ன கேட்கலாம், என்ன கேட்கக்கூடாது என்று தெரியாது.
“மனசில் இருப்பதைத் தைரியமா சொல்லுங்க... என்ன நினைக்கிறீங்க?” என்று மீட்டிங்கில் மேலதிகாரி சொன்னால் நம்புவதா இல்லையா என்று தெரியாது.
அதிகாரக் குவிப்பு உள்ள எல்லா அமைப்புகளிலும் அரசியல் இருக்கும். கட்சிகள், மடங்கள், கல்வி நிலையங்கள், வியாபார நிறுவனங்கள், குடும்பங்கள், அரசாங்கங்கள் என எல்லா மனிதக் கூட்டங்களிலும் அரசியல் உண்டு.
இதை அறிந்து கொள்வது சாலை விதிகளை அறிவது போல அவசியம். எல்லா மனித மனமும் விருப்பு வெறுப்பு சார்ந்துதான் முதலில் யோசிக்கும்.
எந்த நிகழ்வும் முழுக்கத் முழுக்க தர்க்கரீதியாக நடப்பதில்லை. அப்படி நடந்தால் உலகில் இன்று நாம் காணும் பிரச்சினைகளில் 99% இல்லாமல் போய்விடும்.
உணர்வு சார்ந்த நிலையில் உறவுகளில் ஏற்படும் மாற்றங்களும் முடிவுகளும் அமைப்பு விதிகள் சார்ந்து இருக்க அவசியமில்லை.
அலுவலக அரசியலைக் கற்றுக்கொள்ள முதலில் என்ன செய்ய வேண்டும்?
மக்களைப் படிக்க வேண்டும். பேசுவதை விட அதிகமாகக் கேட்க வேண்டும். உணர்வுகளைப் பகிர்வதற்கு முன் எதிராளியின் உணர்வுகளை, நிலைபாடுகளை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
பொய் சொல்லாவிட்டாலும் தேவை இல்லாத நிஜம் பேச வேண்டாம். நியாயத்தின் பக்கம் நிற்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் நியாயத்தின் எதிர் தரப்பில் உள்ளவர்கள் யார் எனக் கண்டு கொள்வது.
யார் தொழில் நிமித்தத் தொடர்பு, யார் தனிப்பட்ட உறவு என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள், சட்டம் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு அமைப்பில் இருக்கும்வரை அதிகாரி மையத்துடன் சீராக உறவை வைத்துக் கொள்ளல் உங்கள் வேலை சார்ந்த குறிக்கோள்களுக்கு உதவும்.
வம்பு வேண்டாம்
ஆளுக்கும் சமயச் சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ப உங்கள் செயல்பாடுகளை மாற்ற அவசியமில்லை.
அது உங்கள் நம்பகத்தன்மையைப் பாதிக்கும். மாற்றுக் கருத்துகளைக் கண்ணியமாக, சரியான வடிவத்தில், சரியான தருணத்தில் வெளிப்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்.
வம்பு பேச்சு வேண்டாம்! அது முழு நேர நிறுவன அரசியல்வாதிகளின் கருவி. அதில் சிக்கி நீங்கள் சின்னாபின்னமாகாதீர்கள்.
பிரச்சினைக்குரியவர்களை விட்டு விலகத் தேவையில்லை. ஆனால் தெளிவான பேச்சும், தேர்ந்தெடுத்த மவுனமும் கொண்டு அவர்களைக் கையாளுங்கள்.
அரசியலும் கடவுள் போலத்தான்! இல்லாத இடம் இல்லை. பணியிட அரசியலைக் கையாள்வதும் கரையேறுவதும் வேலைத்திறன் என்றால் நம்புவீர்களா?
இதை மேலை நாட்டு நிர்வாகப் பள்ளிகள் ஆய்வு செய்து பாடமாய் நடத்துகின்றன. நாம் இன்னமும் இலை மறைவு காயாகத் தான் அலுவல அரசியலைப் பார்க்கிறோம்.
அரசியல் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் அரசியல் தெரிய வேண்டியது அவசியம்!
http://lankasritechnology.com/view.php?20ed5nZ5dec42Q6AA4240aC603Fae040RJOmYcbdc4mAlJ1222ehF9o6daec3OcMQo4dbdcZPBdL03

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக