தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, November 13, 2017

சாகரம் தாண்டி சாசனம் தேடி – ஒல்லாந்தர் தேசத்தில் (Holland – Netherlands) சோழர் செப்பேடுகள் !

சென்னையில் பணிபுரியும் மென்பொருள் பொறியாளர்கள் கூட்டத்தில் வெளிநாடுகளுக்கு பறந்து சென்று வரும் வாய்ப்பை பெற்றவர்கள் பட்டியலில் எனக்கும் ஒரு சிறு இடம் கிடைத்தது ! சிலகாலம் ஒல்லாந்து எனும் நெதர்லாந்து நாட்டில் தங்கியிருந்து அலுவல்களை கவனிக்க வேண்டும் !
நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டெர்டாம் நகரிலிருந்து வடக்கே சுமார் இரண்டு மணி நேர இரயில் பயணத்தில் வரும் நகரம் குரோனிங்கென், இந்த நகரம் தான் தங்கி பணிபுரிய வேண்டிய ஊர் ! சற்றே அரைமணிநேரம் பயணித்தால் ஜெர்மனியின் எல்லையை தொட்டுவிடலாம், ஆம்ஸ்டர்டாம் போன்றே கால்வாய்கள் நிறைந்த ஊர் !
ஐரோப்பா என்றதும் கண் முன் நிழலாடியது மத்திய கால மறுமலர்ச்சியும், பெர்லின் சுவரும், மோனாலிசாவும், டாவின்சியும், இரோமாபுரியும் வத்திக்கானும் !
தாய்நாட்டில் இருக்கும்போது சோழர் பாண்டிய வரலாறுகளை புரட்ட ஆரம்பித்த காலத்திலிருந்தே லெய்டன் செப்பேடுகளை பற்றி படித்ததுண்டு, சோழர் காலத்திய இரண்டு செப்பேடுகள் ஹாலந்து நாட்டின் லெய்டன் நகர அருங்காட்சியகத்தில் இருப்பதாக இருவரி செய்திகளாகவும், இந்திய தொல்லியல்துறை பதிப்பாம் எபிகிராபிகா இண்டிகாவிலும் பார்த்ததுண்டு !
அந்த செப்பேடுகளை நேரில் காண அமைந்த பொன்னான வாய்ப்பென கருதி அதனை காண சிறு முயற்சிகள் செய்ய ஆரம்பித்தேன் !
ஆசிய ஆண்டு கொண்டாட்டங்கள் – லெய்டன் என்ற செய்தி இணையத்தில் வந்தது, அதனை பின்தொடர்ந்து இணையத்தில் தேடிப்பார்த்ததில் லெய்டன் பெரிய செப்பேடு அந்த கொண்டாட்டத்தின் பாகமாய் கண்காட்சியில் வைக்கப்படுவதாக அறிந்தேன், ஆனால் அந்த கொண்டாட்டங்கள் வாரநாட்களில் அமைந்ததால் செல்லும் வாய்ப்பு இல்லாமல் போனது !
லெய்டன் நகரம் நான் இருக்கும் இடத்திலிருந்து சுமார் மூன்று மணி நேரம் இரயில் பயணம் ! தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து நாற்பது நிமிடங்கள்
லெய்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தின் இணையத்தில் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை, அந்த இணையத்தில் “நூலகரை கேளுங்கள் (Ask your Librarian) என்ற மின்னஞ்சல் மூலம் முதல் மின்னஞ்சல் அனுப்பினேன்.
செப்டம்பர் 4 2017: உங்கள் நூலகத்தில் சோழர் செப்பேடுகள் இருப்பதாய் அறிகிறேன், அதனை காண வழிமுறைகள் /நேரம் கட்டணம் இவற்றை பற்றி தெரியப்படுத்தவும் !
பதில் : நீங்கள் காணவிரும்பும் செப்பேடுகளில் ஒன்று கண்காட்சியில் உள்ளதால் அதனை காண செப்டம்பர் 23 வரை காத்திருக்க வேண்டும், மற்றொன்றை காணலாம். காண்பதற்கு நூலக உறுப்பினர் அட்டையோ ஒரு நாள் அனுமதி சீட்டோ அவசியம், காணவிரும்பும் பொருளின் விவரத்தையும் வரும் நாளையும் ஒரு வாரம் முன்பே தெரிவிக்க வேண்டும்.
செப்டம்பர் 11 2017: Or. 1687 and Or. 1688 (Leiden Plates) இதனை காண வரும் 23 சனிக்கிழமை திட்டமிட்டுள்ளேன், வரும்போது ஏதேனும் ஆவணங்கள் எடுத்து வரவேண்டுமா?
பதில் : மன்னிக்கவும், லெய்டன் நூலக சிறப்பு பிரிவை வாரநாட்களில் காலை ஒன்பது முதல் மாலை ஐந்தரை வரை மட்டுமே காண முடியும், வரும்போது நெதர்லாந்து அடையாள அட்டையையும், முகவரியையும் கொண்டு வரவும் !
இரண்டு வாரத்திற்கு ஒருமுறை ஆம்ஸ்டர்டாமில் இருந்து பணிபுரிய வேண்டும், அங்கிருந்து நாற்பது நிமிடம் தான் லெய்டன் அதனால் அந்த நாளுக்கு அனுமதி கேட்டேன் செப்டம்பர் 12 2017: அடுத்த வியாழன் 21 செப்டம்பர் செப்பேடுகளை காண அனுமதி வேண்டும், சுமார் நான்கு மணி அளவில் மாலை
பதில் : நீங்கள் வரும் நேரத்தில் செப்பிடுகள் பார்வைக்கு வைக்கப்படும், திங்கட்கிழமை அதிகாரிகளிடம் நினைவுபடுத்திவிடுகிறேன், நான்கு மணிக்கு முன் வர முயற்சி செய்யவும் ஏனெனில் அனுமதி அட்டை வாங்க நேரம் எடுக்கலாம்
செப்டம்பர் இருபத்தி ஒன்று வியாழக்கிழமை, அன்று ஆம்ஸ்டெர்டாமிலிருந்து பணிபுரிய வேண்டும், அவசர அவசரமாய் வேலைகளை முடித்துவிட்டு வண்டியை பிடிக்கவும் நேரம் மூன்றரை அடிக்கவும் சரியாய் இருந்தது, அடித்து பிடித்து லெய்டன் சென்று அங்கிருந்து ஒரு பேருந்தை பிடித்துக்கொண்டு சேரும்போது நூலக வாசலில் நான்கு முப்பது…10 யூரோக்கள் கொடுத்து படிகளிலூடே ஏறிச்சென்றால் நான்கு நாற்பது, கையில் இருந்த அனுமதி சீட்டை காட்டி நூல்கரிடம் அனுமதி கேட்க, அவரோ அருகிலிருந்த அறிவிப்பு பலகையை காட்டினார்.
” நான்கு மணிக்குமேல் சிறப்பு பிரிவில் எந்த பொருளும் காட்சிக்கு வைக்கப்படமாட்டாது, பார்வையிட விரும்பும் பொருளை ஒரு மணி நேரம் முன்னரே வந்து விவரங்கள் தரவேண்டும்.
” சற்றே வருத்தம், அந்த வயதான நூலகரிடம் நான் வடக்கே குரோனிங்கென் வெகுதூரத்திலிருந்து வருகிறேன் ஒரு பத்து நிமிடம் காண அனுமதி கேட்டேன், நல்ல உள்ளம் கொண்ட அவர் என்னை அமரவைத்து விட்டு முயற்ச்சிப்பதாய் சொன்னார்.
உள்ளே தண்ணீர் பாட்டில்கள், பேனாக்கள் அனுமதி கிடையாது, சற்று நேரத்தில் அந்த நூலகர் ஒரு சிறு வண்டியில் இரண்டு செப்பேடுகளையும் வைத்து எடுத்து வந்தார், காணும் போதே கண்களில் ஆனந்தம், சிறுபுன்னகையுடன் கையில் கொடுத்தார்…நேரம் குறைவாக இருக்கிறது சீக்கிரம் பார்த்து செல்லுங்கள் என்றார்.
அழகு தமிழ் ஏடுகள் பொன்போல் பாதுகாக்கப்படுகின்றன, கையில் கையுறைகள் மாட்டிக் கொண்டே ஏடுகளை புரட்டி பார்க்கலாம், அதன் அருகே அதன் விளக்கமும் வைக்கப்பட்டுள்ளது.
பெரிய செப்பேடு இராசராசன் ஆணையை இராஜேந்திரன் உறுதிப்படுத்தியது, முப்பத்தி ஒரு இதழ்கள் தமிழும் வடமொழியும், சிறிய செப்பேடு முதலாம் குலோத்துங்கன் அதனை உறுதி படுத்தியதை சொல்வது !
லெய்டன் செப்பேடுகளுடன் யாம்.
மனதில் ஒரு பெரிய மகிழ்ச்சி, புகைப்படங்கள் சில எடுத்துக்கொண்டேன், அருகில் இருந்து போர்த்துகீசிய மாணவர்இதனை பற்றி என்னிடம் ஆர்வமாய் கேட்டு அறிந்து கொண்டார், புகைப்படமும் எடுத்து கொடுத்தார் செப்பேட்டு விவரங்களை அடுத்த பதிவில் விவரமாய் எழுதுகிறேன்!-தனசேகர் பிரபாகரன்

No comments:

Post a Comment