தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, November 6, 2017

அனுராதபுரத்தில் மட்டும் 85 இந்து ஆலயங்கள் மண்ணில் புதைந்துள்ளன! வரலாற்றாய்வாளர் தகவல்!


இலங்கையில் தற்போது சுமார் 7000 இந்து ஆலயங்கள் உள்ளன. ஆனால் முன்பிருந்த ஆயிரக்கணக்கான ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை இந்து சமய ஆராய்ச்சிப் பேரவையின் தலைவர் வரலாற்றாய்வாளர் என்.கே.எஸ்.திருச்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும், அனுராதபுரத்தில் மட்டும் 85 இந்து ஆலயங்கள் மண்ணில் புதையுண்டுள்ளதாகவும், எமது அடையாளமான தொல்பொருட்கள் பாதுகாக்கப்படுவதனூடாக எமது வரலாறு பதியப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட இந்து மத பற்றாளர்களுடனான சந்திப்பு நேற்று காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
இந்துக்களின் அடையாளம் ஆலயங்களாகும். அவற்றின் அடையாளம் தொல்பொருட்களாகும். தொல்பொருட்கள் ஒன்றே எமது வரலாற்றை நிலைத்துநின்று சொல்லக்கூடிய ஆவணமாகும்.
கல்வெட்டுக்கள் நிலைத்துநின்று எமது வரலாற்றைச் சொல்லக்கூடியன. துரதிஸ்டவசமாக எம்மவர் இவைகளை பாதுகாக்கத்தவறுகின்றனர். சிலைகள் சிற்பங்கள் கல்வெட்டுக்கள் சற்று சிதைவடைந்தால் அவற்றைத் தூக்கி ஆற்றிலோ குளத்திலோ கடலிலோ தூக்கி எறிந்துவிடுகின்றோம்.
இவ்வாறு தூக்கியெறிதல் என்பது நாங்களே எமது வரலாற்றை தூக்கி எறிவதற்கு ஒப்பானதாகும்.
அண்மையில் அம்பாறை மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் ஒரு பிள்ளையார் சிலை சேதமடைந்திருந்ததால் அருகிலுள்ள வில்லுக்குளத்தில் தூக்கி எறியப்பட்டுள்ளது.
அந்த ஆலயத்தின் வரலாற்றை நாம் குளத்தினுள் புதைத்திருக்கின்றோம். வடக்கு கிழக்கில் சுமார் 1000 ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. வடக்கிலே அழிக்கப்பட்ட 500 ஆலயங்கள் தொடர்பாக குரோஸ் பாதிரியார் விரிவாக பதிவிட்டுள்ளார்.
ஆனால் கிழக்கில் அழிக்கப்பட்ட ஆலயங்கள் தொடர்பான பதிவுகள் இல்லையென்றே சொல்லவேண்டும்.
பொதுவாக புராதன ஆலயத்தின் வரலாறு என்பது அந்தக் கிராமத்தின் வரலாற்றைச் சுட்டிக்காட்டும். ஆனால் இங்கு அப்படியில்லை. 2300 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றை கொண்டவை ஆலயங்கள்.
இந்த காரைதீவு மண் கூட காளிகேசர் அரசனின் ஆளுகைக்கு உட்பட்டது. ஆனால் இங்குள்ள ஆலயங்கள் அந்த வரலாற்றை பதிவிட்டுள்ளனவா? என்பது ஜயம்.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை மிகவும் பழமை வாய்ந்த ஆலயமாக திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் உள்ளது.
அந்த ஆலயத்தை போர்த்துக்கீசர் அழித்த போது தூபியின் கீழிருந்த கருவறையை அழிக்கத் தவறிவிட்டனர். அது இன்றும் உள்ளது.
அடுத்து வீரமுனைப் பிள்ளையார் ஆலயத்தைக்காணலாம். இன்றும் பல கல்வெட்டுக்கள் உள்ளன. அடுத்த நிந்தவூர் பிள்ளையார் ஆலயம், பெரியநீலாவணை விஸ்ணு ஆலயம் போன்றவற்றைக் காணலாம்.
இதுவரை கிழக்கில் 80 கல்வெட்டுக்களை கண்டெடுத்திருக்கின்றோம். பெரும்பாலும் இவற்றைக் குப்பையிலேதான் கண்டெடுத்தோம். எனவே தொல்பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.
பழைய அல்லது சேதமடைந்த சிலைகளை கல்வெட்டுக்களை தூக்கியெறியக் கூடாது. தொல்பொருட்களை அழியவிடக்கூடாது. அன்று 1000 ஆண்டுகளுக்கு முன் கோயில் வரலாற்றை மெய்க்கீர்த்தி பதிவு இருந்தது. இராஜராஜ சோழன் காலத்தில் இப்பதிவு இருந்தது. அதனால் இன்றும் அக்கல்வெட்டு அதன் வரலாற்றைச் சொல்லிக் கொண்டிருக்கின்றது.
உதாரணமாக கந்தளாய்க்குளத்தில் ஒரு மகா யாகம் நடைபெறுகின்றதென்றால் அருகிலுள்ள ஆலயத்தில் அது தொடர்பான பதிவைச் செய்யவேண்டும்.
அன்று யாப்பஹூவை ஆண்டவர் சுந்தரபாண்டியன் என்ற அரசன். இது தொடர்பான பதிவு இன்று அங்கில்லை. ஆனால் அருகிலுள்ள குடுமி மலையில் அன்று பொறித்து வைத்துள்ள கல்வெட்டு இன்று அதற்குச் சான்றுபகர்கிறது.
எனவே இன்றுள்ள எமது இருப்புக்களைத் தக்கவைக்க வேண்டுமானால் பதிய வேண்டுமானால் கல்வெட்டுக்கள் அவசியம். என்று அகில இலங்கை இந்து சமய ஆராய்ச்சிப் பேரவையின் தலைவர் வரலாற்றாய்வாளர் என்.கே.எஸ்.திருச்செல்வம் தெரிவித்துள்ளார்.http://www.tamilwin.com/statements/01/164116

No comments:

Post a Comment