தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 5 நவம்பர், 2017

பொட்டு!

நெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பழங்காலந்தொட்டு நம் நாட்டு மக்கள் கடைப்பிடித்து வரும் ஒரு வழக்கமாகும். இதைப் பொட்டு என்றும் திலகம் என்றும் ௬றுவர். பொட்டு என்ற சொல் பெரும்பான்மை பேச்சு வழக்கிலும், சிறுபான்மை இலக்கிய வழக்கிலும் பயன்படுத்துகின்றனர். அதேபோல, திலகம் என்ற சொல்லை சிறுபான்மை பேச்சு வழக்கிலும் பெரும்பான்மை இலக்கிய வழக்கிலும் பயன்படுத்துகின்றனர்.
மேலை நாட்டு நாகரிகத்தால் நாம் எத்தனையோ மாற்றங்களை ஏற்றுக் கொண்டிருந்த போதும், இன்று வரை நம்மிடையே மாறாமல் இருப்பது நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ளும் வழக்கம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைப் பயன்படுத்தும் இந்தப் பொட்டு, மின்சாரம் இல்லாத காலத்தில் வாழ்ந்த மக்கள் எவ்விதம் தயாரித்துப் பயன்படுத்தினர் என்பதைக் ௬றுவதே இப்பதிவின் நோக்கம். இருப்பினும், பொட்டு குறித்த பற்பல செய்திகளையும் முன்னதாகப் பகிர்ந்து கொள்கிறது.
சொட்டும் பொட்டும்:
சொட்டு என்ற நிலையை அடுத்து பொட்டு என்பது தோன்றுகிறது. ஒரு விரலைத் தண்ணீருக்குள் விட்டு வெளியே எடுத்தால், விரலில் பட்ட நீர் விரல் நுனி வழியாக வழிந்து துளியாகக் கீழே விழும். அவ்வாறு விழும் நீரை சொட்டு என்று சொல்கிறோம். வானத்திலிருந்து மழை இவ்விதமே விழுகிறது. எனவேதான் மழையை சொட்டு சொட்டாகப் பெய்கிறது என்றும், கண்ணிற்கு விடும் மருந்தை சொட்டு மருந்து என்றும், விவசாயத்தில் நீர் சிக்கனத்திற்காகப் பயன்படுத்தும் முறையைச் சொட்டு நீர்ப்பாசனம் என்றும் ௬றுகின்றனர். இக்கருத்திற்கு எடுத்துக்காட்டாக கவிஞர் மருதகாசி எழுதிய திரைப் பாடலில்,
         “சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே-மழை
          கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே
          கஷ்டப்படும் ஏழைசிந்தும் நெத்தி வியர்வை போல-அவன்
          கஞ்சிக்காக கலங்கிவிடும் கண்ணீர்த் துளியைப் போல”
                                                                  (படம்:ஆட வந்த தெய்வம், 1960)
என்பதில் சொட்டு, துளி ஆகிய சொற்களைப் பயன்படுத்தியுள்ளதைப் பார்த்தால் பொருத்தமானதாக இருக்கும். ஆகவே, விழும் நீர் சொட்டு, அது விழுந்து விரிந்தால் பொட்டு. மொட்டு விரிந்தால் மலர், சொட்டு விரிந்தால் பொட்டு என்றும் கொள்ளலாம்.
புள்ளியும் பொட்டும்:
ஒரு குறிப்பிட்ட இடத்தை சுட்டிக்காட்ட இடப்படும் புள்ளியைப் பொட்டு என்று ௬றுகிறோம். கணிதப் பாடத்தில் வரைபடப் பிரிவில் மிகச் சிறிய அளவில் பென்சிலால் இடப்படுவதைப் பெரும்பாலும் புள்ளி என்று ௬றுகிறோம்.  பொட்டு என்று ௬றினாலும் தவறில்லை. கட்டடங்கள் கட்டுதல் போன்ற அளவு சார்ந்த எந்தச் செயல் செய்தாலும் முதலில் பொட்டு என்ற புள்ளி வைத்துக் குறித்துக் கொள்கின்றனர். கல்வியறிவு இல்லாத மக்கள் பால் கணக்கு, மோர்க் கணக்கு போன்றவற்றைக் கணக்கிட வீட்டுச் சுவரில் பொட்டு வைத்தே கணக்கிட்டு வந்துள்ளனர். இன்றும் கோலம் வரைபவர்கள் முதலில் பொட்டு வைத்தே அதன் பின் கோலம் வரைகின்றனர். கவிஞர் உடுமலை நாராயணகவி எழுதிய “நல்ல பெண்மணி…” எனத் தொடங்கும் திரைப்பாடலில்,
         “பொட்டு வைத்துக் கோலம்௬டப் போடத் தெரியணும் – புத்தி
          புகட்டும் நாட்டுப் பாடல்௬டப் பாடத்தெரியணும்” (படம்: மணமகள், 1951)
என்பதில் பொட்டு வைத்துக் கோலம் வரைதல் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொட்டு
இவ்வாறு அளவு சார்ந்த அனைத்து இடங்களிலும் இந்தப் பொட்டு என்ற சொல்லைப் புள்ளி என்ற பொருளில் பயன்படுத்தி வருகிறோம். மேலும், நெற்றியில் அழகுக்காகவும், மங்கலப் பொருளாகவும், பக்தியின் அடையாளமாகவும் இட்டுக் கொள்ளும் இப்பொட்டின் பெயரால் “பொட்டம்மன்” என்ற பெண் தெய்வம் வழிபடப்படுவதும் அனைவரும் அறிந்ததே.
         “குங்குமப் பொட்டின் மங்கலம்
          நெஞ்சம் இரண்டின் சங்கமம்”  (படம்: குடியிருந்த கோவில், 1968)
என்னும் திரைப்படப் பாடலானது, பொட்டு வைத்துக் கொள்ளும் வழக்கம் இல்லாத இஸ்லாமிய மார்க்கத்தைச் சார்ந்த ‘ரோஷினாரா பேகம்’ என்னும் பெண் கவிஞரால் எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், பொட்டு என்பது அதைப் பயன்படுத்தாத பெண்களிடமும் மங்கலப் பொருளாக அறியப்பட்டு வந்துள்ளதை இதன் வழி அறிகிறோம்.
மண் பொட்டு:
நெல்லை மாவட்டம் – சங்கரன்கோவிலில் எழுந்தருளியுள்ள கோமதியம்பிகை மீது புளியங்குடி முத்துவீரக்கவிராயர், “கோமதியம்பிகை பிள்ளைத்தமிழ்” பாடியுள்ளார். இதில் செங்கீரைப் பருவத்தில் உள்ள கோமதியம்பிகையை நீராடித் துடைத்தபின் அவர் நெற்றியில் புற்றுமண்ணைப் பொட்டாக இட்டது பற்றி,
       “பரிமள மிகுந்தநீ ராட்டிமர கதவொளி
                   பரப்புதிரு மேனியெல்லாம்
       பட்டாடை கொண்டொற்றி ஈரம் புலர்த்திமலை
                   யரசன்மனை யாட்டிபவள
       விரிகுமுத வாயினான் மென்காது கண்ணுந்தி
                   மேவுநீர் ஊதிநீக்கி
       வெண்பிறையை நிகர்நுதலின் மண்பொட்டும் இட்டுமடி
                    மீதினில் இருத்தி …”
என்ற பாடல் சொல்கிறது. மேலும், இன்றைய திரைப் பாடல்களில் வரும்,
“மண்ணத் தொட்டு கும்பிட்டுட்டு பொட்டொன்னு வச்சுக் கோம்மா…” (படம்: சாமுண்டி, 1992)
“எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வச்சோம்” (படம்: எஜமான், 1993)
போன்ற வரிகளும் மக்களிடமுள்ள ‘மண் பொட்டு’ வழக்காறுகளைக் காட்டுகின்றன.
திலகம்:
திலகம் என்ற சொல் நெற்றியில் இடும் பொட்டு என்பதையே குறிக்கிறது. சங்க இலக்கிய நூல்களுள் ஒன்றான திருமுருகாற்றுப்படையில் திருப்பரங்குன்றம் படை வீட்டுப் பகுதியில் சூரமகளிரின் ஒப்பனை பற்றி ௬றும் போது, ‘திலகம்’ என்ற சொல்லை நக்கீரர் பயன்படுத்துகிறார்.
         “செங்கால் வெட்சித் சீறிதழ்  இடையிடுபு
          பைந்தாள் குவளைத் தூவிதழ் கிள்ளித்
          தெய்வ உத்தியொடு வலம்புரி வயின் வைத்துத்
          திலகம் தைஇய தேங்கமழ் திருநுதழ்” (அடிகள்: 21-24)
என்பதில் அதைக் காண்கிறோம். மேலும், ‘விவேக சிந்தாமணி’ முதற்பாகத்தில், 108 வது பாடலில் மன்மதன் மண்டியிட்டான் என்ற தலைப்பிலுள்ள பாடலில்,
       “அலகு வான்விழி ஆயிழை நன்னுதல்
        திலகம் கண்டெதிர் செஞ்சிலை மாரனும்
        கலக மேசெயும் கண்இது வாமென
        மலரம்(பு) ஐந்தையும் வைத்து வணங்கினான்”
திலகம் என்ற சொல் அழகிய பெண்ணைக் குறிப்பதாக வருகிறது.
திலகம் என்ற சொல்லைப் பெண்களுக்குப் பெயராக வைக்கும் வழக்கமும் நம் முன்னோரிடம் இருந்து வந்திருக்கிறது. இதற்குச் சான்றாக, சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசு அடிகளாரின் தமக்கையார் பெயர் ‘திலகவதியார்’ என்பது குறிப்பிடத் தக்கது.
‘திலகம்’ என்பதைப் பேச்சு வழக்கில் ‘திலகா’ என்றும், ‘திலகை’ என்றும் சுருக்கி அழைப்பர். சான்றாக, மணிமேகலை காப்பியம் – பாத்திரம் பெற்ற காதையில்,
        “போதி கீழற் பொருந்தித் தோன்றும்
          நாதன் பாதம் நவை கெட ஏந்தித்
         தீவ திலகை சேயிழைக்கு உரைக்கும்.” (அடிகள் 73-75)
என்று சீத்தலைச் சாத்தனார் கூறுகிறார்.
‘திலகம்’ என்பதற்கு மஞ்சாடிமரம் என்ற பொருளும் உண்டு. இதே காப்பியத்தில் ‘மலர்வனம் புக்க காதை’யில் சொல்லப்படும் இருபது வகை மரப்பெயர்களில்  (அடிகள்: 160 முதல் 166) ஐந்தாவது பெயராக திலகம் வருகிறது. இதே பொருளில் இச்சொல் இந்நூலில் பல இடங்களில் காணக் கிடைக்கின்றது. மேலும், திலகம் என்பதை ஆண்களுக்குப் பெயராகச் சூட்டும் போது திலக், திலகன், திலகராஜ் என்றும்சூட்டி மகிழ்கின்றனர்.
திலகம் என்றால் சிறப்பு:
திலகம் என்றால் உயர்வுச் சிறப்புப் பொருளிலும், பலர் பால் விகுதி சேர்த்து திலகர் என்றும் பயன்படுத்துகின்றனர். ஒரு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்குப் பட்டமாகச் சூட்டி சிறப்புச் செய்வதற்கும் இச்சொல்பயன்படுகிறது. சான்றாக, ‘நடிகர் திலகம்‘ ‘மக்கள் திலகம்’ என்ற அடைமொழிகள் அவ்வாறு பிறந்தவையே. அதே போல, தமிழ்த் திரைப்படங்கள் கூட, “திலகம், மங்கையர் திலகம், இரத்தத்திலகம், வீரத்திலகம்” ஆகிய பெயரில் வெளிவந்துள்ளன.
பொட்டு
பொட்டு – இடச்சிறப்பு:
அறிவு என்னும் மூன்றாம் கண் நெற்றியில் இரு புருவங்களுக்கு இடையே ஒரு புள்ளியில் குவிந்து நிற்பதாக அறிவு பற்றிய ஆய்வு நூல்களும், தியான நூல்களும் கூறுகின்றன.
        “ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்குஇருக்கில்
         அடங்கி அடங்கிடும் வாயு அதனுள்
         மடங்கி மடங்கிடும் மன்உயி ருள்ளே
         நடங்கொண்ட கூத்தனும் நாடுகின் றானே” (திருமந்திரம்: 666)
என்ற பாடலில் திருமூலர், ‘உள்ளம் ஒருமையடைந்து புருவத்தினது நடுவில் இருப்பின், மூச்சுக்காற்று அப்போது கட்டுப்பட்டு நின்று விடும். வெளி நோக்கம் இல்லாது போகும். அக நோக்கம் கொண்ட உயிருள் நடமிடும் சிவனும் தன்னை அறியச் செய்வான்’ என்கிறார். இதில் இரு புருவத்தின் நடுவிலுள்ள பொட்டு வைக்கும் இடத்தின் சிறப்பை அறியலாம்.
மனோ சக்தியைப் பற்றி ஆராய்ந்தும் சோதித்தும் உண்மையைக் கண்ட மாமேதை மறைமலையடிகள், தாம் எழுதிய “யோக நித்திரை அல்லது அறிதுயில்” என்ற நூலில் ஏழாவது பகுதியாகிய “கண்ணும் கருத்தும்” என்பதில் இக்கருத்தை,
         “புருவங்களுக்கு நடுவே உட்செல்லும்
         இடைவெளியில் உயிரின் அறிவு
         எல்லார்க்கும் முனைத்து விளங்குகிறது”
என்று எளிதில் புரியும் படிக் கூறியுள்ளார்.
இதன்வழி, அறிவுக்கண் என்பது இரு புருவங்களுக்கு இடையே அமைந்து இருப்பதாகவும், அது நம் கண்களால் காண இயலாத ஒன்றாகவும் அறிகிறோம். இதனைக் காணும் அடையாளப் பொருளாக எந்த மதமும் தராத செயல் விளக்கமாக சைவ சமயம் ஒன்றே நமக்குத் தருகிறது. அதாவது, சிவனுக்கு நெற்றிக் கண் இருப்பதாக எடுத்துக் காண்பிக்கிறது. எனவேதான், சிவனை முக்கண்ணன் என்றும் கூறுகின்றனர்.
முக்கண்ணன்
சிவனுக்கு மூன்று கண்கள் உள்ளது பற்றி சைவ சமய நூல்கள் மட்டுமல்லாது வைணவ சமய நூல்களும், நீதிநூல்களும் குறிப்பிடுகின்றன.
இத்தகு சிறப்புடைய இக்கண்ணிண் அடையாளமாக, நம் பெண்கள் இட்டுக் கொள்ளும் பொட்டுதனை சங்க இலக்கியம் ‘விழியாக் கண்’ என்று கூறுகிறது.
         “நெற்றி விழியா நிறைத்திலகம் இட்டாலே
          கொற்றவை கோலங் கொண்டோர் பெண்” (பரி: 99-100)
பொட்டின் வகைகள்:
கருப்பு நிறத்தில் வைக்கப்பட்ட பொட்டு காலப்போக்கில் குங்குமப் பொட்டு, சந்தனப் பொட்டு, சாந்துப் பொட்டு, ஜவ்வாது பொட்டு, அம்பர் பொட்டு, பலவண்ணப் பொட்டு, மண்பொட்டு, ஒட்டுப் பொட்டு (Sticker) என்று பல வகைகளில் பயன்படுத்தப் படுகிறது. இதில் ஸ்டிக்கர் தவிர மற்ற பொட்டுகளை விரலாலோ, சிறு குச்சியாலோ அல்லது அதற்கென்று உரிய அச்சாலோ வைத்துக் கொள்வர். ஒட்டும் பசை கொண்ட ஒட்டுப் பொட்டு (ஸ்டிக்கர் பொட்டு), வட்டப் பொட்டு, ஜிகுனாப் பொட்டு, பிறைப் பொட்டு, நட்சத்திரப் பொட்டு, கோபிப் பொட்டு என்று பற்பல வடிவங்களிலும் அளவுகளிலும் கிடைக்கின்றன. இதை நெற்றியில் ஒட்டிக் கொண்டால் போதும்.
பொட்டு இடுதல்:
பொட்டு என்பதில் பல வகைகள் இருந்தாலும் இதில் குங்குமத்திற்குத் தனிச் சிறப்பு உண்டு. இந்து ஆலயங்களில் அம்மன் சன்னதியில் குங்குமம் கொடுக்கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. இதை மங்கலப் பொருளாகக் கருதப்படுவதால் சுபகாரியங்கள் எல்லாவற்றிலும் கண்டிப்பாக இதை நெற்றியில் அணிந்து கொள்கின்றனர். பொட்டு என்பதை ஆண், பெண் என்ற இருபாலரும் வைத்துக் கொள்கின்றனர். ஆண்கள் பெரும்பாலும் சந்தனத்தை முதலில் பொட்டாக இட்டு அதன் மீது குங்குமம் அணிகின்றனர். சிறு குழந்தைகள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கருப்பு நிறப் பொட்டு மட்டுமே வைப்பது வழக்கம். மேலும் இக்குழந்தைகளுக்குக் கண் திருஷ்டிப் பொட்டு என்று கன்னத்திலும் வைப்பர்.
பொட்டு வைத்துக் கொள்வதைப் பெண்கள் விரும்பிச் செய்கின்றனர். திருமணமான பெண்கள் குங்குமத்தை நெற்றியில் வைப்பதோடு நெற்றிக்கு மேல் தலைமுடியை இரண்டாகப் பிரிக்கும் உச்சி என்பதன் தொடக்கத்தில் அதாவது நெற்றிக்கு மேலும் கழுத்திலும் வைத்துக் கொள்கின்றனர்.
பொட்டு
பொட்டு என்பதை பெண்கள் கணவரோடு தொடர்புடையதாகக் கருதுவதால் கணவனை இழந்த பெண்கள் எந்தவகைப் பொட்டும் அணியாத வழக்கம் முன்பு இருந்தது. ஆனால், பிற்போக்குச் சிந்தனை வளர்ந்த இந்நாட்களில், இவ்வகை எண்ணம் அருகி வந்து விட்டது. இவைபோக இஸ்லாமியப் பெண்களும், கிறிஸ்துவத்தில் ஒரு சாராரும் என்றுமே பொட்டு வைத்துக் கொள்வதில்லை.
மி.மு. காலத்தில் பொட்டு:
இன்றிருக்கும் நாகரிக வளர்ச்சியும், அதன் பயனாய்க் கிடைக்கும் புதிய பொருட்களும் விற்பனைக்கு வராத மி.மு. காலத்தில், வீட்டில் இருக்கும் பெண்களே ‘பொட்டு’ தயாரித்துக் கொண்டனர்.
செய்முறை – 1
காடுகளிலுள்ள கருவமரம் என்று சொல்லப்படும் முள்மரத்தின் காய்களைப் பறித்து வந்து உரலில் இட்டு உலக்கையால் இடித்துப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்வர். பின் அச்சாற்றை ஒரு சிறிய இரும்புப் பாத்திரத்தில் ஊற்றி, அதை சூரிய ஒளியில் காய வைப்பர். நன்கு காய்ந்து நீர் வற்றி பசை போல வந்ததும் துளையில்லாத தேங்காச் சிரட்டையை எடுத்து, அதில் ஊற்றி நன்கு கெட்டியாகும் வரை மீண்டும் காய வைப்பர். நன்கு உலர்ந்து கெட்டியானதும் அதை எடுத்துப் பொட்டாகப் பயன்படுத்தலாம். இதைக் கருவப் பொட்டு என்பர்.
செய்முறை – 2
இது பச்சரிசியில் செய்யும் முறை. இதனை அரிசிப் பொட்டு என்பர். இதற்கு பச்சரிசியைத் தேவையான அளவு எடுத்து நன்கு கருகும்படி வறுத்துக் கொள்ள வேண்டும்.  சூடு ஆறியபின் அம்மியில் வைத்துப் பசையாக வரும் அளவிற்கு அரைத்துக் கொள்வர். பின் அதை நன்கு வழித்து எடுத்து முன் கூறியபடி சிரட்டையில் ஊற்றிக் கெட்டியாக வரும் வரை காய வைத்து, நன்கு உறைந்த பின் பயன்படுத்துவர்.
பொட்டு
பயன்படுத்தும் விதம்:
மேலே சொன்னபடி தயாரிக்கப்படுவதைப் ‘பொட்டுச் சிரட்டை’ என்று சொல்வர். அன்று எல்லா வீடுகளிலும் இந்தப் பொட்டுச் சிரட்டை இருந்தது. இரண்டு மூன்று சொட்டு நீர்விட்டு வலதுகை ஆள்காட்டி விரலால் தேய்த்தால் சிறிதே நேரத்தில் பசை போன்று வரும். அதை மோதிர விரல் நுனியால் தொட்டு நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டியதுதான். நெற்றியில் இட்ட பொட்டு சிறிதே நேரத்தில் உலர்ந்து நன்கு கருமை நிறத்தில் பளபளவென இருக்கும். அன்று சிறு பிள்ளைகள் முதலாய் திருமணம் ஆனவர், ஆகாதவர் என்று எல்லோரும் இந்தப் பொட்டைத்தான் பயன்படுத்தினர். இந்தப் பொட்டுகள் எல்லாம் கண்ணின் கருவிழி போன்று கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கும். நானும் இந்தப் பொட்டு சிரட்டையிலிருந்து தேய்த்தெடுத்து நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டு பள்ளிக்கூடம் சென்றது ஞாபகத்திற்கு வருகிறது.
பொட்டுச் சிரட்டை இல்லாத நேரத்தில் சிறு பிள்ளைகள் மண்பானையின் கீழ்ப் பக்கத்தில் ஒட்டியிருக்கும் புகைக் கரியை தண்ணீர் விட்டுத் தேய்த்து நெற்றியில் பொட்டாக இட்டுக் கொள்வதும் உண்டு. இதைப் பெரியவர்கள் செய்ய மாட்டார்கள். இவ்வாறுள்ள பழங்கால நிகழ்வுகளை இன்றுள்ள நிலையோடு ஒப்பிடும்போது மனதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

நெற்றியில் பொட்டு வைப்பதன் ரகசியம் தெரியுமா?

நம் நாட்டு பெண்கள், நெற்றியில் பொட்டு அல்லது குங்குமம் வைப்பது மங்கல சின்னங்களாக கருதப்படுகிறது. இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடம் நெற்றி பொட்டு என அழைக்கப்படுகிறது. மருத்துவ ஆராய்ச்சிகளின்படி நினைவாற்றலுக்கும், சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடம் அதுவே. யோகக்கலை இதனை ஆக்ஞா சக்கரம் எனக் குறிப்பிடுகிறது.

இந்த இடம் எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிபடுத்துகிறது. அதிலும், முன் நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலைவலி அதிகமாவதை உணரலாம். நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது.

மேலும் நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது. எனவே, நெற்றித் திலகம், நம்மை இறை அனுக்கிரகத்துடன் வாழவைப்பதுடன் தீய சக்திகள் நம்மை அணுகாமல், தீய எண்ணங்கள் நம்மில் எழாமல் காக்கிறது. நெற்றியில் திலகத்தை வைத்து கொள்ளும்போது, நான் கடவுளை எப்போதும் மனத்தில் நிலை நிறுத்துகிறேன்.

இறை தன்மையுள்ள இந்த உணர்வு, எனது எல்லாச் செயல்களிலும் ஊடுருவி பரவட்டும். என் செயல்பாடுகளில் எப்போதும், நேர்மையும் உண்மையும் நிறையட்டும், என்று பிரார்த்திக்க வேண்டும். நெற்றி திலகம் லட்சுமி கரமானது என்பர். எனவே, குங்குமம் வைக்கும் போது, ஸ்ரீயை நமஹ” என்றோ, மகாலட்சுமியே போற்றி” என்றோ சொல்லியபடி வைத்துக் கொள்வது பெண்களுக்கு நலம் பயக்கும்.

குங்குமத்தை மோதிர விரலால்தான் நெற்றியில் இட வேண்டும். மற்ற விரல்களை பயன்படுத்தக்கூடாது. பெண்கள், தலை வகிடிலும், மாங்கல்யத்திலும், நெற்றியிலும் பொட்டு வைக்கிறார்கள். இந்த மூன்று இடங்களிலுமே லட்சுமி குடியிருப்பதாக ஐதீகம். கோயில்களிலோ, வீட்டிலோ குங்குமத்தை எடுத்து இடது கையில் போட்டு கொண்டு, வலது கைவிரலால் தொட்டு வைப்பதும் கூடாது. வீட்டில் யாராவது ஒருவரை வலது உள்ளங்கையில் சிறிதளவே போட சொல்லி, வலதுகை மோதிர விரலை வளைத்து குங்குமத்தை தொட்டு நெற்றியில் இட வேண்டும்.
http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=2441&Cat=501
மேலும் சில தகவல்கள்:

* குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.
* ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
* கட்டை விரலால் குங்குமம் இட்டு கொள்வது மிகுந்து துணிவைக் கொடுக்கும்.
* குருவிரல் எனப்படும் ஆள்காட்டி விரலால் குங்குமம் அணிவது முன்னணித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.
* சனிவிரல் எனப்படும் நடுவிரல் குங்குமம் இட்டு கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும்.
* மோதிர விரலால் குங்குமம் தரிப்பது துணிவு, நேர்மையுடன் செயல்படும் பண்பை தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக