உலகம் என்ற மிகப்பெரிய எல்லை வியப்பு இப்போது சுருங்கிவிட்டது.
ஒரு மாநகர எல்லைக்குள் நடப்பது போலவே உலக சம்பவங்களின் தகவல்கள் உடனுக்குடன் அறிந்துகொள்ளவும் நேரில் பார்ப்பது போல ஊடகங்களில் காட்சிகளாகவே புரிந்துகொள்ளவும் வசதிகள் வளர்ந்துவிட்டது.
பயணமில்லாமலே ஒரு பாக்ஸுக்குள் யாவையும் பார்க்கும் நாம் ஒரு பாக்கியமுள்ள தலைமுறைதான்.
இதற்கு காரணம், மற்ற துறைகளைவிடவும் மளமளவென தொழில்நுட்ப வளர்ச்சி ஊடகங்களில் வளர்ந்திருப்பதுதான்.
இந்த தகவல் தொழில்நுட்பங்கள் உலக வளர்ச்சிக்கு பயன்படுகிறதா என்ற சிந்தனையை எல்லோரிடமும் எழுப்பவே, இந்த உலக வளர்ச்சிக்கான தகவல் தினம் சர்வதேச சமூகத்தால் ஊக்குவிக்கப்பட்டு அக்டோபர் 24 ல் கொண்டாடப்படுகிறது.
தகவல் தொழில்நுட்ப கருவிகளான மொபைல் போன்கள், கணனி மற்றும் மடிகணனிகள், தொலைக்காட்சி ஊடகங்கள், பல்வேறு விதமான வலைதளங்கள், இணையதளங்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
அதை அவசியமாகவும் அந்தஸ்தாகவும் கருதி மக்களும் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
வியாபார உத்திகளின் தந்திரங்களாலும் இந்த வணிகம் வெகுவேகமாக நடைபெறுகிறது. இந்த வசதிகளை அனுபவித்துக் கொண்டிருப்பதால் மட்டுமே மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டது என்பதில் உண்மையில்லை.
நம்மைச் சுற்றிலும் உள்ள தகவல் தொழில்நுட்ப கருவிகளுக்கு மட்டுமே முன்னேற்றப்பாதைக்கு கொண்டுசெல்லும் அடிப்படை தகுதி இல்லை.
ஊடகங்களில் வந்துபோகும் பிரபலங்களே அதே ஊடகங்களால் நொந்துபோய்க் கொண்டிருக்கின்றனர்.
இணையதள ஊடகங்களிலும் விளம்பரங்கள் ஊடுருவியிருக்கின்றன. அதனால், எத்தனை பேர்? எவ்வளவு நேரம்? பயன்படுத்துகின்றனர். என்பதை பொறுத்து முதலாளிகளுக்கு லாப கணக்கு சேர்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, வலைதளங்களையும் ஊடகங்களையும் பயன்படுத்தும் விதத்திலே எல்லோரும் தூண்டப்பட்டுள்ளனர்.
இந்த தலைமுறையே வலைதளங்களுக்குள் சிக்கிக்கொண்டிருக்கின்றது. ஆனால், அதை சந்தோஷமாகவும் காலத்திற்கு ஒப்ப(upto date) இயங்குவதாகவும், பெரிய வளர்ச்சியை எட்டிவிட்டதாகவும் நினைத்துக் கொண்டிருப்பதும் தான் ஜீரணிக்க முடியாத கொடுமை.
அதிகமாக இணையதளத்தை உபயோகிப்பவருக்கு மன அழுத்தம் மற்றும் உடல் எடை கூடுதல் நோய்கள் அதிகரித்துவருகிறது.
126 பேரில் 36 பேருக்கு மன அழுத்தம் இருப்பதாகவும், 49% பேருக்கு உடல் எடை அதிகரிப்பதாகவும் சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உலக அழகையும் அதில் நடக்கும் நிகழ்வுகளையும் கற்பனைகளையும் காட்சியாக்கி பார்ப்பதாலும் அதை விமர்சித்துக் கொண்டிருப்பதாலும் மட்டும் எல்லோருடைய வாழ்க்கை நோக்கம் பூர்த்தியாகி விடுவதில்லை.
அதில் பூர்த்தியடைவதாக நினைத்தால், அவர்கள் இன்னும் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள்தான்.
நம் தலைமுறைகள் விருப்பத்தோடு தகவல் தொழில்நுட்பங்களுக்குள் புகுந்துவிட்டனர். அவர்களை சேதமில்லாமல் மீட்டெடுப்பதில் சமூக அக்கறை உள்ளது.
தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழில் வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, பொருளாதார முன்னேற்றம், தீங்கு, குற்றம், நோய் பற்றிய சமுதாய விழிப்புணர்வு கொண்டுவருவது அவசியமானது.
அதுதான் அக்டோபர் 24 ல் கொண்டாடப்படும் உலக வளர்ச்சிக்கான தகவல் தினத்தின் நோக்கமும் ஆகும்.
அதற்கு, தகவல் தொழில்நுட்பத்தை நாம் கவனமாக கையாள வேண்டும். அதன் கட்டுப்பாட்டுக்குள் நாம் சிக்கிக்கொள்ளக் கூடாது. ஆனால், இளைஞர்களின் ஆர்வக் கோளாறுகளால் இரண்டாவது நிலையே இங்கு மிதமிஞ்சியிருப்பது வேதனைதான்.
தொழில்நுட்பங்களுக்கு உள்ளே வாழ்க்கை அமைத்துக்கொண்டவர்கள், தொலைத்த இடத்தில் தேடவில்லை என்றே தோன்றுகிறது.
இயற்கை பசுமையான தோட்டம் போட்டால் ஒரு தொழில்தான் அந்த திறமையும் பயனும் வளர்ச்சியே, தோட்டம் போல பிரமாதமாக ’ஷெட்’ அமைத்தால் அதுவும் தொழில்தான் அந்த திறமையும் பயனும் வீக்கமே!
கவர்ச்சி, களிப்பின் காரணமாக வீக்கத்தின் பக்கமே சமுதாயம் சாய்ந்திருக்கிறது.
திரைகளிலிருந்து விழிகளை திருப்புங்கள், நிஜங்களோடு வாழுங்கள். மீட்க முடியாத அளவில் அதனோடு கலந்து விடாதீர்கள்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக