தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான புதையல் நகரம்! (வீடியோ இணைப்பு)!
தமிழகத்தின் கீழடி என்ற ஊரில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான புதையல் நகரம், சங்ககால தமிழ் மக்கள் தமது வசதி மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்வதில் அவர்களுக்கு இருந்த நாகரீக வளர்ச்சியை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது.
கீழடி என்ற இந்த ஊர் தமிழகத்தின் தென்மாவட்டமான மதுரைக்கு 12 கி.மீ. தூரத்தில் தென்கிழக்கே சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
அந்த ஊரில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் பள்ளித்திடல் என்ற மணல்மேட்டிலேயே இந்த பழந்ததமிழர் நகரம் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.
இந்த அகழாய்வு, தமிழகத்தில் ஆதிச்சநல்லூருக்கு அடுத்தபடியாக மேற்கொள்ளப்படும் ஒரு பெரிய தொல்லியல் அகழ்வாக கருதப்படுகிறது.
கி.மு.3ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த நகரமாக கணிக்கப்பட்டிருந்தாலும் ”கரிம தேதியிடல்” சோதனைக்கு பிறகே அது துல்லியமாக தெரியவரும்.
பாண்டியர்களின் பழைய தலைநகராக இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ’பெருமணலூர்’ இது என்றே கருதப்படுகிறது.
இந்திய தொல்லியல் துறை 2013ம் ஆண்டு மற்றும் 2014ம் ஆண்டில் வைகையாற்றின் துவக்கமான தேனி மாவட்டத்திலிருந்து, அது கடலில் சங்கமமாகும் ராமநாதபுரம் மாவட்டம் வரை ஆய்வு செய்ததில் 293 தொல்லியல் எச்சங்கள் கிடைத்த பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றை ஆய்வுசெய்ததில் ஒரு நகரமே கண்டுபிடிக்கப்பட்ட பலனும் கிடைத்துள்ளது.
2015 மார்ச் 6ல் இருந்து நடைபெற்று வரும் இந்த அகழாய்வு செப்டம்பர் 2015-வுடன் முடிவடைந்தது.
ஆனாலும், இன்னும் ஆய்வுக்குரிய பகுதிகள் இருப்பதால் மேலும், ஒரு ஆண்டு இந்த ஆகழாய்வு பணிகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
இந்த அகழாய்வு களம் 3.5 கி.மீ. சுற்றளவில், 80 ஏக்கர் பரப்பளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இங்கு 48 இடங்களில் தோண்டப்பட்ட சதுர குழிகளில், உறைகிணறுகள், செங்கற்சுவர்கள், கூரைஓடுகள், மிளிர்கல் அணிகலண்கள், எலும்பு கருவிகள், இரும்பு வேல், மற்றும் ஆதன், திசன், உதிரன் என்ற தமிழ் பெயர்கள் பொறிக்கப்பட்ட பானையோடுகள் என பழந்தமிழர்கள் பயன்படுத்தியவை எச்சங்களாக கிடைத்துள்ளன.
கரிகால்சோழனிடம் பதினோராயிரம் பொன் பரிசை பெற்ற புலவர் உருத்திரங்கண்ணனாருக்கு பெற்றுத்தந்த நூலான பட்டினப்பாலையில் ‘உறைகிணற்றுப் புறச்சேரி’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள செங்கற்கலால் கட்டப்பட்ட இந்த உறைகிணறுகளைத்தான்.
ஆற்றங்கரையிலும் குளக்கரையிலும் உறைகிணறு அமைப்பது தமிழர்களின் வழக்கமாக இருந்துள்ளது என தொல்லியல் அறிஞர்களும் கூறுகின்றனர்.
மேலும், ரோமானியர்களுடன் பழந்தமிழர்கள் வணிக தொடர்பு வைத்திருந்ததின் அடையாளமாக ரௌலட் அரிட்டைன் வகை மட்பாண்டங்களும் கிடைத்துள்ளன.
மிகப் பழமையான கருப்பு, சிகப்பு மண்பாண்டஓடுகள், வெள்ளை வண்ணம் பூசப்பட்ட ஓடுகள், செம்பழுப்பு நிற ரசம் பூசப்பட்டவை என பல ஓடுகள் கிடைத்துள்ளன.
இவைகள் அழகன்குளத்திலும் கொங்குநாட்டிலும் கூட கிடைத்திருப்பது வணிக தொடர்பையே உறுதிப்படுத்துகிறது.
ஹரப்பா, மொகஞ்சதரோ புதையல் நகரங்களை போலவே கீழடி அகழாய்விலும் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்கள் காணப்படுவது தமிழர்கள் நாகரீகத்தின் முன்னோடிகள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக