தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 அக்டோபர், 2015

பரவசமான படகுப் போட்டி.. அருள் தரும் செட்டிகுளங்கரா தேவி கோவில்: கண்கவர் காயம்குளம்


காயம்குளம் கேரளாவின் வளர்ச்சியடைந்து வரும் ஒரு சுற்றுலா தலம்.
இந்தியாவின் தென்மேற்கில் இது ஆழப்புலா மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி. இங்கு தென்னை, கயறு தயாரித்தல், மீன் பிடித்தல், மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில்கள் சிறப்பு.
படகுப் போட்டி:
காயம்குளம் படகுப் போட்டி இங்கு பிரபலமானது. நீளமன படகுகளில் வரிசையாக படகோட்டும் போட்டியாளர்கள் இருபுறமும் அமர்ந்து ஒரே சீராக துடுப்பு போடுவதும் வரிசையாக படகுகள் ஒன்றைஒன்று போட்டிபோட்டு முந்திசெல்வதும் வியப்பான காட்சி.
இந்த போட்டியை காண கேரளாவில் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருகின்றனர்.
ஆகஸ்ட் மாதம் நான்காம் சனிக்கிழமை ஒவ்வொரு ஆண்டும் இந்த போட்டி நடைபெறும்.
கிருஷ்ணாபுரம் அரண்மனை, செட்டிகுளங்கரா கோவில், ஸ்ரீ விதோபா கோவில் இங்கு சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களாகும்.
இந்த ஊருக்கு காயம்குளம் பெயர் வர காரணம், காயம் என்ற மசாலா மரங்களும் குளங்களும் நிறைந்தது என்று பொருள். காயம் என்றால் ஏரி என்ற இன்னொரு அர்த்தமும் மலையாளத்தில் இருப்பதால், ஏரி, குளம் நிறைந்த பகுதியாக இருப்பதாலும் இந்த பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நகராட்சியான காயம்குளம் மற்றும் குட்டநாட்டில் உள்ள ஏரிகள் கேரளாவிற்கு நன்னீர் வழங்கும் தளங்களாகவும் விளங்குகின்றன.
கேரளாவில் உள்ள மிகப்பெரிய மின் நிலையமான என்.பி.டி.சி. அனல்மின் நிலையமும் காயம்குளத்தில்தான் இயங்குகிறது.
இங்கு எப்போதுமே ஒரு ஈரப்பதமான சூழலும் பருவகாலங்களில் மழை அதிகமாக பொழிவதும் இயல்பாக உள்ளது.
கிருஷ்ணாபுரம் அரண்மனை:
இந்த அரண்மனை ஆழப்புலா மாவட்டத்தில் அல்லெப்பே அருகில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை 18 ம் நூற்றாண்டில் அனிஸம் திருனல் மார்த்தாண்ட வர்மா என்பவரால் கட்டப்பட்டது. இந்த அரசர் திருவாங்கூர் சாம்ராஜ்யத்தை சேர்ந்தவர்.
இந்த அரண்மனை கேரள கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. ஓடுகள் வேயப்பட்ட கூரை, சாய்வான மேற்தளங்கள், பலகாணி ஜன்னல்கள். குறுகிய நடைபாதைகள் என அரண்மனை வரலாற்றில் தனிதன்மையாக விளங்குகிறது.
இதில் மியூஸியமும் அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணாபுரம் கிருஷ்ணசாமி கோவில் இதன் பக்கத்தில் உள்ளது. இதன் இடது புறத்தில் ஆச்சிரா, காயங்குளம் இடையிலான தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதனால் பெரிய நகரங்களில் இருந்து கூட நேரடியாகவே பேருந்துகளில் இங்கு வரலாம்.
செட்டிகுளங்கரா தேவி கோவில்:
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற தேவி கோவில்களில் காயம்குளத்தில் உள்ள இதுவும் ஒன்று. இந்த கோவில் கேரள கட்டடகலை பாணியில் ஓடுகள் வேய்ந்த சாய்வு கூரை அமைப்பு கொண்டதுதான்.
இங்கு பிப்ரவரி- மார்ச்சில் கொண்டாடப்படும் பரணி திருவிழா பிரபலம். சுற்று வட்டார ஊர்களில் இருந்தும் மக்கள் கூடுகின்றனர். அப்போது குத்தியோட்டம், கேட்டுகழ்ச்ச போன்ற நிகழ்ச்சிகளை பகவதி அம்மனுக்காக விவசாய குடிமக்கள் நடத்துகின்றனர்.
ஸ்ரீ விதோபா கோவில்:
காயம்குளத்தில் உள்ள முக்கிய பழமையான கோவில்களில் ஸ்ரீ விதோபா கோவிலும் ஒன்று. இது காயம்குளம் மார்க்கெட் அருகில் உள்ளது. இந்த கோவில் கொங்கனி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த கோவில் 400 ஆண்டுகள் பழமையனது. இதற்கு பூஜைகளைவிட பஜனைகளே அதிகமாக நடத்தப்படுகிறது. இங்கு உள்ள தெய்வம் விதோபா மக்களால் ’நாடா மூர்த்தி’ என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுக்கு இருமுறை திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவிழாவில் 9 ம் நாள் நடைபெறும் ரதோல்சவம் (chariot) மக்களால் கவரப்படுகிறது.
அழிக்கல் பீச், வல்லிய அழிக்கல் பீச், மக்கள் குவியும் சிறந்த சுற்றுலா தலங்களாகும். காயம்குளத்திற்கு மிக அருகாமையில் (37 கி.மீ.) உள்ள பெரிய நகரம் கொல்லம். மேலும், திருவனந்தபுரம் விமன நிலையத்திலிருந்து 105 கி.மீ தூரத்தில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக