கிளாஸ்ட்ரோஃபோபியா(claustrophobia) என்பது ஒருவர் தனிமையில் இருக்கவோ அல்லது தப்பிக்க வழி இல்லை என கருதி அதிக பயப்படுவதே ஆகும்.
குறிப்பாக கூட்ட நெரிசல் மிகுந்த இடம், சிறிய அறை அல்லது நீண்ட விமான பயணங்களில் இவர்கள் அதிக அமைதி இழந்து காணப்படுவார்கள்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு கழுத்தை இறுக்கும் ஆடை அணிந்தாலே பதட்டம் அதிகரித்து விடும்.
கிளாஸ்ட்ரோஃபோபியா அல்லது தனிமை கண்டு பயம்
கிளாஸ்ட்ரம் எனும் லத்தீன் மொழி வார்த்தைக்கு ‘மூடப்பட்டுள்ள இடம்’ என்பது பொருள், கிரேக்க மொழியில் ஃபொபோஸ் என்றால் பயம்.
தனிமை பயத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் குறுகிய அடைக்கப்பட்ட அறைகளில் தங்குவதை எப்படியாவது தவிர்த்து விடுவார்கள்.
இவர்கள் பெரும்பாலும் சுரங்கப்பாதைகள், நிலத்தடி பயணங்கள் என அனைத்தையும் ஒதுக்கியே வைப்பார்கள். உலகம் முழுவதும் இந்த நோயால் 15-37% பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவில் மட்டும் 10% பேர் இந்த நோயால் அவதிப்பட்டு வருகின்றனர்.
நோய் அறிகுறிகள்
இந்த நோய் குறித்து நோயாளிகள் விளக்கமளிப்பதை விட அதிகமாக சிகிச்சை அளிக்கும் மருத்துவரால் நோய் அறிகுறிகளை கண்டுகொள்ள முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சிலருக்கு காணப்படும் சிறு தலைவலி கூட இந்த நோயின் அறிகுறியாக கருதப்படும்.
பொதுவாக தனிமை பயத்தால் தாக்கப்பட்ட நோயாளிகளில் பதட்ட நிலை அதிகரிக்கும் போது அவர்களுக்கு வியர்வை அதிகரிக்கும், இதயத்துடிப்பு அதிகமாகும், மயக்க உணர்வு ஏற்படும், வாய் உலர்ந்து போகும், மூச்சுத்திணறல் உண்டாகும், உடல் உதறல் எடுக்கும், தலையில் பாரமற்ற நிலை இருக்கும், குமட்டல், மயக்கம், தலைவலி, கழிவறை செல்ல தூண்டும், குழப்பமான மன நிலை என பல்வேறு அறிகுறிகள் தென்படலாம்.
சிலருக்கு, லிஃப்ட் பயன்படுத்த பயம் ஏற்படும், சுரங்கப்பாதைகள், அதிக அறைகள் கொண்ட பொது கழிப்பிடங்கள், பூட்டப்பட்ட அறைகள், விமான பயணங்கள், இரயில் பயணங்கள் என பதட்டத்தை அதிகரிக்க செய்யும் காரணிகள் இவை.
தனிமை பயம் எப்படி ஏற்படுகிறது?
தனிமை பயம் என்பது ஒருவருக்கு அவரது குழந்தை பருவத்தில் எற்பட்ட ஒரு சம்பவத்தில் தொடர்புடையது.
அது அவரை மிக ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்வதே தனிமை பயம். நீச்சல் தெரிந்திராத குழந்தை பருவத்தில் ஆழமான குளத்தில் தவறி விழுந்து நீந்த முடியாமல் தவித்தது, கூட்ட நெரிசல் மிகுந்த பகுதியில் பெற்றோர் அல்லது உறவினர்களிடம் இருந்து பிரிந்து செல்வது போன்றவைகளின் பாதிப்பு பின்னாளில் தனிமை பயத்தை உருவாக்கலாம்.
தனிமை பயம் உருவாக வேறு சில காரணிகளும் மருத்துவர்களால் முன்வைக்கப்படுகிறது, அவை, மூளையின் ஒரு சிறு பகுதியான Amygdalae மனிதர்களுக்கு பயம் உருவாவதை கட்டுப்படுத்துகிறது.
அச்ச உணர்வால் பாதிக்கப்படும் நபர்களுக்கு மூளையில் சாதாரணமாக காணப்படும் அளவைவிட Amygdalae சிறிதாக காணப்படுகிறது.
நோயை கண்டறிதல்
தனிமை பயம் பாதிக்கப்பட்டிருப்பதாக உளவியலாளர் அல்லது மனநல மருத்துவரால் மட்டுமே கண்டறிய முடியும்.
ஒரு நோயாளி உளவியல் நிபுணரை சந்திக்கிறார் எனில் அவருக்கு தமது நோய் குறித்த புரிதல் ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நோயின் அறிகுறிகள் குறித்து பாதிக்கப்பட்ட நோயாளிகள் விளக்கும்போதே உளவியல் நிபுணர்கள் நோயின் தீவிரம் குறித்து கணக்கிடுகின்றனர்.
மேலும் உளவியலாளர்கள் நோயாளிகளிடம் சில வழிமுறைகளை பின்பற்றி நோயினை கண்டறிகின்றனர்.
உளவியல் நிபுணர்களால் 1993 ஆம் ஆண்டு தொகுக்கப்பட்ட தொடர் கேள்விகளால் நோயாளிகளிடம் நோய் குறித்தும் நோயின் தீவிரம் குறித்தும் கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.
இன்னொன்று, 1979 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 20 கேள்விகள் கொண்ட வழிமுறையை நோயாளிகளிடம் மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர்.
சிகிச்சை முறைகள்
நோய் குறித்தும் நோயின் தீவிரம் குறித்தும் கண்டறிந்த உளவியலாளர் நோயாளிகளுக்கு சில வழிமுறைகளை பின்பற்ற வலியுறுத்துகின்றனர்.
மருந்து முறை சிகிச்சை- இந்த சிகிச்சை முறையால் பதட்டம் மற்றும் பய உணர்வினை பெரும்பாலும் கட்டுப்படுத்தலாம். வேறு சிகிச்சை முறைகள் பயன்படாத சில நோயாளிகளுக்கு மருந்து முறை சிகிச்சை பயன் தரலாம்.
மன அமைதிப்படுத்தும் பயிற்சிகள்- இதில் குறிப்பாக நோயாளிகள் ஆழமான மூச்சு பயிற்சிகள் மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுவார்கள்.
மேலும் தியானம், உடற் தசைகளை தளர்வாக்கும் பயிற்சி என்பவையும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும். இது அவர்களது எதிர்மறை எண்ணங்கள் மற்றும் பதட்டத்தை குறைக்க பெரிதும் பயன்படும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக