தன் வாழ்நாள் முடிவதற்குள் ஒரு முறையாவது ராமனை தரிசித்து விட வேண்டும் என்பது அந்த மூதாட்டியின் எண்ணமாக இருந்தது. ஒவ்வொரு கணமும் ராமனையே சிந்தித்து வந்தாள். அவனைக் காணும்போது சுவையான கனிகளை விருந்தளித்து உபசரிக்க வேண்டும், பாதம் பணிந்து வணங்க வேண்டும் என்பதே அவளது ஆசையாகும். சபரி என்பது அந்த மூதாட்டியின் பெயர். வேடுவ குலத்தில் பிறந்த அவள், வனப்பகுதியில் குடில் அமைத்து ராம நாமங்களை உச்சரித்து வந்தாள். அவளது குடிலுக்கு அருகில் மதங்க முனிவரின் ஆசிரமம் இருந்தது. மதங்க முனிவரிடம் உபதேசம் பெற்றதன் காரணமாகத்தான், சபரிக்கு ராமபிரானின் மீது அன்பும், பக்தியும் அதிகரித்தது. அதன்பிறகு, தன் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ராமனை எண்ணியே கழிக்கத் தொடங்கினாள். மதங்க முனிவர் தன்னுடைய பூவுலக வாழ்க்கை நிறைவு பெறும் நாள் நெருங்குவதை கண்டார். அவர் தான் மோட்சத்தால் விண்ணுலகம் எய்தப்போவதை எண்ணி மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தார். அப்போது சபரியிடம், ‘இந்தக் காட்டில் தனியாக இருந்து என்ன செய்வாய்?. ஆகையால் நீயும் என்னோடு விண்ணுலகம் வந்து விடு. ராம நாமத்தால் உனக்கு மோட்சம் நிச்சயம் கிடைக்கும்’ என்று கூறி அழைத்தார். ஆனால் ராமனை கண்ணால் காண்பதை விட, தனக்கு வேறு எந்த மோட்சமும் தேவையில்லை என்று அந்த நொடியே மதங்க முனிவரின் அழைப்பை புறந்தள்ளி விட்டாள் சபரி மூதாட்டி. ஒவ்வொரு நாளும், ‘ராமன் இன்று வருவான்’ என்று நினைத்த படியே குடிலையும், அதன் சுற்றுப்புறத்தையும் நன்றாக பெருக்கி சுத்தம் செய்வாள். பாதைகளில் கிடக்கும் கல், முள் போன்றவற்றை கைகளால் பொறுக்கி எடுத்து அப்புறப்படுத்துவாள். பின்னர் அந்த பாதையில் தண்ணீர் தெளித்து பாதம் நோகாமல் இருக்கும்படி செய்வாள். அன்றாடம் மரங்களில் இருந்து கிடைக்கும் கனிகளை கொண்டு வந்து, கடித்து சுவை பார்ப்பாள். நல்ல சுவையுடன் இருக்கும் கனிகளை ஒரு ஓரமாக எடுத்து வைப்பாள். சுவையில்லாதவற்றை அவளே உண்பாள். இவ்வாறு ஒன்றல்ல, இரண்டல்ல, பல ஆண்டுகளாக அன்பு மிகுந்த ராமனின் தரிசனம் காண்பதற்காக காத்திருந்தாள் சபரி. மூதாட்டியின் பிரார்த்தனை வீண்போகவில்லை. பக்தையின் பிரார்த்தனை வீண்போகுமா என்ன?. சீதாதேவியை தேடிக் கொண்டு வந்த ராமரும், லட்சுமணரும் சபரியின் குடிசைக்கு வருகை தந்தனர். அவர்களைப் பார்த்ததும் ஆனந்தத்தில் கண்ணீர் சொரிந்தாள் சபரி. குடிசைக்குள் அவர்களை அமரச் செய்து உபசரித்தாள். எச்சில் செய்து சுவை அறிந்து வைத்திருந்த கனிகளை, ராம� லட்சுமணர்கள் உண்பதற்காக எடுத்து வந்து அவர்கள் முன்பாக வைத்தாள். ராமர் அந்த பழங்களை அன்புடன் ஏற்றுக்கொண்டார். ஆனால் பழங்களைப் பார்த்தபோது, அவை எச்சில்படுத்தப்பட்டவையாகவும், காய்ந்து போயும் இருப்பதைக் கண்ட லட்சுமணன் அவற்றை உண்ணவேண்டாம் என்பதற்காக ராமரின் கையைப் பற்றி சைகை செய்தான். அவனுக்குள் எழுந்த சந்தேகத்தை அறிந்து கொண்ட ராமர், ‘எதுவாக இருப்பினும் பின்னர் கேள்!’ என்று கூறிவிட்டு, சபரி அன்புடன் அர்ப்பணித்த கனிகளை சாப்பிடத் தொடங்கினார். பழங்கள் நாள்பட்டவை என்பதால் காய்ந்து போயிருந்தன. சில அழுகியிருந்தன. சில கனிகள் புளிப்பேறிப்போய் இருந்தன. ஆனால் சபரியின் அன்பு காரணமாக அவை எல்லாம் ராமனுக்கு தித்திப்பாய் இருந்தது என்பதுதான் உண்மை. ஆகையால்தான் சபரி வைத்த அனைத்து கனிகளையும் தான் ஒருவனே உண்டு தீர்த்து விட்டார் ராமபிரான். ‘அன்னையே! இங்கு வந்தபோது எனக்கு நல்ல பசி. தாய் பிள்ளையின் பசியை அறிவதுபோல, காலம் கண்டு எனக்குண்டான பசியை கனியை கொடுத்து தீர்த்து வைத்தாய்! உனக்கு எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்’ என்று கூறிய ராமர், தன் தம்பியுடன் அங்கிருந்து புறப்பட்டார். அவர்கள் சென்றதும், ராமரின் மீதான சபரியின் அன்பைக் கண்டு, தேவர் உலகத்தில் இருந்து தெய்வ விமானம் தோன்றி அவளை, வானுலகம் அழைத்துச் சென்றது. சபரியும் தன் அன்பு தெய்வத்தை கண்ணால் கண்டு, விருந்து கொடுத்து உபசரித்த மகிழ்ச்சியில் அந்த விமானத்தில் ஏறி தேவலோகம் சென்றாள். சபரி மூதாட்டியின் விருந்து உபசரிப்பை முடித்துக் கொண்டு புறப்பட்டனர் ராமரும், லட்சுமணனும். குடிலை விட்டு வெளியே வந்த சிறிது நேரம் கழித்து லட்சுமணனை நோக்கி ராமபிரான் கேட்டார். ‘சபரியின் குடிலில் வைத்து என்னிடம் ஏதோ கேட்க வந்தாயே அது என்ன?’ என்றார். ‘அண்ணா! எச்சில் படுத்திய பழங்களாகவும், அவை நாள்பட்டவையாகவும் இருந்ததன் காரணமாகத்தான், நீங்கள் அந்த பழங்களை உண்ணத் தொடங்கியபோது சைகையால் தடுத்தேன். ஆனால் எனக்கு இப்போது மிகப்பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. எந்த பொருளாக இருந்தாலும், எனக்கு கொடுத்து நான் உண்ட பின்னரே உண்ணும் தாங்கள், இன்று எனக்கு எந்த கனியையும் கொடுக்காமல், அனைத்தையும் தாங்கள் உண்ட காரணம்தான் விளங்கவில்லை’ என்று கூறினான் லட்சுமணன். ‘தம்பி! லட்சுமணா! இதுவரை உனக்கு தராமல் நான் எதையும் சாப்பிட்டதில்லை. ஆனால் இன்று சபரி அளித்த கனிகள் எச்சில் படுத்தி சுவை பார்த்தவை. காய்ந்தவை, நாள் பட்டவை. ஆனாலும் அன்பின் காரணமாக அவை தூய்மையானது. அந்த கனிகளை நான் உனக்கு தந்திருந்தால், எச்சில் கனி என்று முகம் சுளித்திருப்பாய்! காய்ந்த கனி என்று ஒதுக்கியிருப்பாய். அவ்வாறு நீ செய்திருந்தால், நமக்கு தர வேண்டும் என்று வெகு நாட்களாக அன்புடன் சேர்த்து வைத்திருந்த அந்த தாயை அவமதித்ததுபோல் ஆகும். மேலும் அந்த அன்னையின் மனம் வேதனையால் துடித்துவிடும். அவர் மனம் புண்படும்படி நடக்கலாகாது என்பதால்தான் அவ்வாறு செய்தேன்’ என்று எடுத்துரைத்தார் ராமபிரான். |
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 4 ஜனவரி, 2016
ராமன் மீது அன்பு கொண்ட மூதாட்டி- சபரி!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக