தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, January 11, 2016

ஜல்லிக்கட்டு வரலாறு!


2000 ஆண்டுகளுக்கு முன்பே ஜல்லிக்கட்டு குறித்து கலித்தொகையில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது, ஆயர் குலத்தவர்களே ஏறு தழுவுதலை வாழ்வியல் பண்பாடாக செம்மைப்படுத்தியுள்ளனர்.
முல்லை நிலத்தில் வளமான புல்லுண்டு. அதனை வயிறார மேய்ந்து மாடுகள் அழகிய மேனி பெற்று விளங்கும். அந் நிலத்தில் வாழும் ஆயர்க்கு அவைகளே அரும்பெருஞ் செல்வம். மாடுகளில் ஆண்மையுடையது எருது.
அதனை ஏறு என்றும், காளை என்றும் கூறுவார். வீறுடைய ஏறுகள் கடும் புலியையும் நேரே நின்று தாக்கும், வலிய கொம்புகளால் அதன் உடலைப் பீறி கொல்லும். இத்தன்மை வாய்ந்த எருதுகளைக் கொல்லேறு என்றும், மாக்காளை என்றும் தமிழ் நாட்டார் போற்றுவர்.
மஞ்செனத் திரண்ட மேனி வாய்ந்த காளைகளை கண்டு ஆயர் குலத்து இளைஞர் அஞ்சுவதில்லை; அவற்றின் கொட்டத்தை அடக்க மார்தட்டி நிற்பர். ஏறுகோள் என்பது அவர்க்குகந்த வீர விளையாட்டு.
இந்த ஏறுதழுவுதல் விளையாட்டு, வீரத்தின் அடையாளம் மட்டுமின்றி திருமணத்திற்கான முயற்சியாகவும் கூறப்படுகிறது, காளையை அடக்கும் வீரனை திருமணம் முடிக்கும் ஆசையில் பெண்டிரும் அமர்ந்து இந்த விளையாட்டினை ரசிக்க, வலிய கொம்புகளுடன் பாய்ந்து வரும் காளையை, ஆண்மகன் வீறுகொண்டு வீழ்த்துவான்.
சிந்து சமவெளியில் ஜல்லிக்கட்டு
பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு 4000 வருடங்களுக்கு முன்பே, விளையாடப்பட்டு வந்தது என்பதற்கு சான்றாக, சிந்து சமவெளி நாகரீகம் இருந்த இடமான மொஹஞ்சாதாரோ பகுதியில் இந்த முத்திரை உள்ளது.
அந்த முத்திரையை உற்றுப்பார்த்தால், ஒருவரே பல கோணங்களில் தூக்கி அடிப்பது போலவும் அல்லது பலர் காளையால் தூக்கி அடிக்கப்பட்டு நாலாபுறமும் சிதறுவதை போலவும் உள்ளது.
இறுதியில் காளை தான் வெற்றி பெறுகிறது என்பதனை உணரமுடிகிறது, மேலும் தற்போதும் நடந்து வரும் ஜல்லிக்கட்டு விளையாட்டினை தத்ரூபமாக உணர்த்துவது போன்று உள்ளது.
மேலும், ஆக்ரோஷத்துடன் வீரர்களை பந்தாடுகிறது, அதன் கழுத்தினை கவனித்தால் இடது புறம் சற்று சாய்வாக உள்ளது, இதன் காரணம் தன்னை பக்கவாட்டில் பிடிக்க வரும் அந்த வீரனை தூக்கி எறிந்து விட்டு மீண்டும் அது கழுத்தை பழைய நிலையக்கு கொண்டு வருவதையே உணர்த்துகிறது.
இவ்வாறு சிந்து சமவெளி நாகரீகத்தில் கூட முத்திரை பதிக்கப்பட்ட இந்த ஜல்லிக்கட்டினை, தமிழர் திருநாள் கொண்டாட்டத்தோடு சேர்த்து தமிழக மக்கள் உலகறிய விளையாடுவர்.
ஜல்லிக்கட்டு சந்தித்த மல்லுக்கட்டு
காலங்காலமாக களத்தில் கால்பதித்து வந்து ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு ஏற்பட்ட பிரச்சனை தமிழ் வீரர்கள் மத்தியில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியது.
2011ல் மான், மயில் உள்ளிட்ட விலங்குகள் அடங்கிய காட்சிப்படுத்தப்படக் கூடாத பட்டியலில் காளைகள் சேர்க்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து விலங்குகள் நல வாரியம் மற்றும் சமூக நல அமைப்புக்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
காளைகளை துன்புறுத்தக் கூடாது என ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த பாரம்பரிய விளையாட்டுக்கு தடை விதிக்க கூடாது என பல அமைப்பினர் நீதிமன்றத்தை நாடினர்.
இதனால் சில விதி முறைகளை வகுத்து நிபந்தனைகளுடன் மாவட்ட அதிகாரிகளின் கண்காணிப்பில் ஜல்லிக்கட்டு நடத்த 2011ம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஜல்லிகட்டு நடத்தப்படும் போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
ஆனால், தமிழர்களின் கலாசாரமும், வீரமும் உலகறியப்படும் வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்த தமிழக அரசியல் கட்சியினர், ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த மாநில அரசும், மத்திய அரசும் அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் வலியுறுத்தி வந்தனர்.
அதன் முயற்சியாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளதோடு மட்டுமல்லாமல், தமிழக வீரர்களும் உற்சாக மிகுதியில் உள்ளனர்.
எவ்வாறாயினும், வரலாற்றில் செதுக்கப்பட்ட தமிழனின் வீரம், இனி புதுவித வரலாறு படைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

தகர்ந்தது தடை: தரணியை மீண்டும் ஆள வருகிறது தமிழனின் வீரம்!
[ சனிக்கிழமை, 09 சனவரி 2016, 05:45.29 AM GMT +05:30 ]
தமிழர்களின் வீரத்தினை உலகுக்கு எடுத்துக்காட்டும் வீர விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு.
இந்த விளையாட்டினை பார்ப்பதற்காக இந்தியாவின் வெளி மாநிலத்தில்  இருந்துமட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் படையெடுத்து வருவார்கள்.
ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பல பெயர்களில் தமிழர்களின் வீர விளையாட்டு அழைக்கப்படுகிறது.
அப்படிப்பட்ட பாரம்பரிய வீர விளையாட்டின் வரலாற்றை பற்றி பல தகவல்கள் வெளிவந்தாலும், வரலாற்றை மாற்றி அமைக்கும் விதமாக தமிழர்கள் அதில் பல மாற்றங்களை புரிந்துவருகின்றனர்.

No comments:

Post a Comment