தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, January 14, 2016

தமிழர் திருநாளும்....களைகட்டும் கொண்டாட்டங்களும்!!

உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்!
  நாளை பொங்கல்!
தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் தலையாயது பொங்கல்.
உலகுக்கு முதலானது உழவு, அது செழிக்க, உதவும் மண்ணாகவும் மழையாகவும் ஒளியாகவும் வளியாகவும் பல தோற்றங்களில் தோள்கொடுக்கும் இயற்கைக்கு, நன்றி தெரிவிக்கும் இனிய விழா.
இது வேறு இனத்தவர்களிடம் இருந்து கொஞ்சமும் இறக்குமதி கலக்காத ஒரு இயற்கை விழா. இதற்கு முன்னே இருந்த இதன் பெயர்தான் இந்திரவிழா!
தைத்திருநாள், தமிழர் திருநாள், உழவர் திருநாள் என பொங்கலுக்கு பல பெயர்கள். அவை யாவும் பொங்கலோடு தொடர்புடைய காரணங்கள். அதன் சிறப்புக்கு கிடைத்த தோரணங்கள்.

பொங்கல் விழா நான்கு நாள் பண்டிகை
போகி
முதல் நாள் போகிப் பண்டிகை,வீடுகளின் கூரைகளில் பூலாப்பூ செருகப்படும். பழையன கழிவதும் புதியன புகுவதும் வழக்கம் என்பதற்கு ஏற்ப, அன்று வைகரையில் பயனற்ற பழைய ஆடைகள், பொருள்களை தீயிட்டு கொளுத்தி மேளம் கொட்டி கொண்டாடுவர்.
கிராமங்களில் பெண்கள் அன்று ஒப்பாரி வைப்பார்கள். அதற்கு காரணம், புத்தர் இறந்த நாள் அன்றுதான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தைப்பொங்கல்
ஆடியில் விதைத்து, ஐப்பசியில் பொழிந்த மழையால் பயிர் வளர்த்து, மார்கழியில் அறுவடையான நெற்பலனை வீட்டுக்கு கொண்டுவந்து, புதுபானையில் மங்களகரமாக மஞ்சள் கட்டி, புது அரிசியில் பொங்கலிட்டு, கரும்பும் வைத்து, சூரியனுக்கு படைப்பது மரபு.
கரும்பு, வாழை, மஞ்சள், பாலரிசி, வெள்ளம், மண்பானை, மாடு, மனிதன், சூரியன் இவையெல்லாம் பொங்கல் விழாவின் அங்கங்கள்.
அது மனிதன், விலங்கு, தாவரம் எல்லாமே இயற்கையின் ஒரு குடும்பமாக தமிழர்கள் கடைப்பிடித்த ஆகமங்கள்.
மாட்டுப்பொங்கல்
மாடுகளை அன்று குளிப்பாட்டி, குங்குமமிட்டு, மாலை அணிவித்து அதற்கு பொங்கல் படையலிடுவர். அது சாப்பிட்ட எச்சிலை பட்டி பெருக!, பால்பானை பொங்குக! நோவும் பிணியும் தெருவோடு போக! என்று தொழுவத்தில் தெளிப்பார்கள்.
பால் மற்றும் பட்டியை பெருக்கும் பயனுள்ளது பசு. அதை ஒரு பெண் போல நினைத்ததால், உழுவது போன்ற கடினமான விவசாய வேலைகளுக்கு காளை மாடுகளை மட்டுமே பயன்படுத்தினார்கள்.
மாட்டுப் பொங்கல் வைப்பதற்கும் மஞ்சுவிரட்டில் ஜெயிப்பதற்கும் காளைகளை பயன்படுத்தினார்கள் என்பதைவிட, பெருமைப்படுத்தினார்கள்.
ஜல்லிக்கட்டை மிருகவதையாக பார்ப்பது சமீப காலங்களில் உருவான கருத்துப் பரிணாமங்கள். தன்னைவிட வலிமையான வீட்டு விலங்கான மாடுகளோடு மல்லுக்கு நிற்பதை பலத்தின் ஒரு அளவுகோலாக கருதினான். களத்தில் அதன் கொம்புகளை கையாள்வதை தற்காப்பு கலையாக பழகினான்.
அதே சமயம், அவைகளை தன்னைப்போல நினைக்கும் மனமிருந்ததால்தான் பொங்கல் திருநாளில் மாடுகளுக்கும் பங்களித்தான்.
மாட்டுப் பொங்கல் வைத்தால் மாடுகளுக்கு என்ன தெரியும் என்று சிந்தித்திருந்தால், மஞ்சுவிரட்டும் கூட தமிழர் வழக்கத்தில் இருந்திருக்காது.
காணும் பொங்கல்
இந்த நாளில் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று அன்பையும் உணவுபண்டங்களையும் பகிரிந்துகொள்வார்கள். கோயிலுக்கும் செல்வார்கள். இளம் வயது பெண்கள் இயற்கை தெய்வமான ஆற்றுக்கு அரிசி பழங்கள் படையலிட செல்வார்கள்.
வட மாநிலங்களில் கொண்டாட்டம்
வடமாநிலங்களில் மகர சங்கராந்தி, சங்கராந்தி என்ற பெயரில் இதே நாளில் சூரியனுக்கு படையலிட்டு கொண்டாடப்படுகிறது. மகரம் என்றால் சூரியன் என்று பொருள். மணிப்பூர் மாநிலத்திலும் அங்கு வாழும் தமிழ் மக்கள் இந்த பாரம்பரிய தமிழர் பண்டிகையை மாறாமல் கொண்டாடி வருகின்றனர்.
வெளிநாடுகளில் பொங்கல்
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள், பாரம்பரியம் மாறாமல் பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டில் கொண்டாடுவது போலவே அங்கு கொண்டாடுகின்றனர்.

No comments:

Post a Comment