தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

பதஞ்சலி மகானின் யோக சூத்திரத்தில் ஸம்யமம் என்ற ஒரு பயிற்சி



பதஞ்சலி மகானின் யோக சூத்திரத்தில் ஸம்யமம் என்ற ஒரு பயிற்சி சொல்லப்பட்டுள்ளது. இது ஒரு மேல் நிலைப் பயிற்சியாகும். குறிப்பிட்ட பொருளோடு ஒன்றி கலந்து உயிர் கலப்புப் பெறுதல் என்பார் வேதாத்ரி மகரிஷி அவர்கள். அது இந்த ஸம்யமப் பயிற்சியே ஆகும். ஒருமுகப்பட்ட தன்மை, மேலும் அதை குறிப்பிட்ட நேரத்திற்கு நீடித்திருக்கச் செய்யும் மன வலிமை, மற்ற எல்லா எண்ணங்களையும் ஒதுக்கி விட்டு அந்தக் குறிப்பிட்டப் பொருளோடு மனதை கலக்கச் செய்தல் அதாவது தாரணை, தியானம், ஸமாதி இந்த மூன்றும் சேர்ந்த நிலையில் செய்யப்படும் பயிற்சியே ஸம்யமம் ஆகும். இந்தப் பயிற்சியை வேண்டும் போது, வேண்டிய பொருளின்மீது செய்தால் வேண்டியதை வேண்டியவாறு பெறலாம் என்கிறார் பதஞ்சலி முனிவர். எண்ணியதை எண்ணியபடியே செய்யலாம்.

ஸமாதியில் தாரணையும், தியானமும் கலந்து விடுவதால் இதை ஸமாதி நிலையில் செய்வது என்பார்கள். ஆனால் இந்த ஸம்யமமானது நிர்பீஜ ஸமாதிக்குப் புறத்தானதாகும். இயம, நியம, ஆசன, பிராணாயாம, பிரத்தியாகாரங்களெல்லாம் வெளிமுகமானவை. ஆனால் தாரணை, தியானம், ஸமாதி மூன்றும் சேர்ந்த ஸம்யமமானது முற்றிலும் உள்முகமானப் பயிற்சியாகும். ஸம்யமப் பயிற்சியை வெல்வதால் அறிவு நிலை அடையப் படுகிறது. இப்போது இந்த ஸம்யமப் பயிற்சியை எதன்மீது செய்தால் என்னென்ன பலன்கள் கிட்டும் என்பதைப் பார்ப்போம்.

சூரியனை ஸம்யமம் செய்தால் உலகங்களைப் பற்றிய ஞானம் கிட்டும்.

ந்திரனை ஸம்யமம் செய்தால் நட்சத்திர மண்டலங்கள் பற்றிய ஞானம் கிட்டும்.

துருவ நட்சத்திரத்தின் மீது ஸம்யமம் செய்தால் நட்சத்திரங்களின் நகர்தல் பற்றிய ஞானம் கிட்டும்.

யானை போன்ற வலிமையான விலங்குகள் மீது ஸம்யமம் செய்து அவைகளைப் போல பலம் பெறலாம்.

நம் உடலின் மீதே ஸம்யமம் செய்தால் கண்ணிற்கும் ஒளிக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டு, உற்று உணரும் சக்தியைக் கட்டுப்படுத்த முடிவதால் உடலை மறையச் செய்யும் சித்தை அடையலாம்.

பிறரது சந்தேகங்களை ஸம்யமம் செய்வதால் அவர்தம் மனத்தை அறியும் ஆற்றல் கிட்டும்.

சிறிய கால அளவின் மேல் செய்யும் ஸம்யமத்தால் விவேக ஞானம் வரும்.

செவிக்கும் வெளிக்கும் இடையில் உள்ள தொடர்பினை ஸம்யமம் செய்வதால் தெய்வீக ஒலிகளைக் கேட்கும் திறன் ஏற்படும்.

உடலுக்கும் ஆகாயத்திற்கும் உள்ள தொடர்பினை ஸம்யமம் செய்வதால் பஞ்சைப் போல எடையற்ற உடலைப் பெற்று ஆகாயத்தில் சஞ்சரிக்கலாம். ஆகாயத்தை ஸம்யமம் செய்வதால் சூக்கும சரீரத்தின் மூலம் செல்ல வேண்டிய இடத்திற்குச் சென்று காண வேண்டியதைக் காணலாம்.
''காயா காசயோ; ஸம்பந்த ஸம்யமா லகு
தூல ஸமாபத்தேச்ச ஆகாச கமனம்||''
- பதஞ்சலி யோக சூத்திரம் - 42. பாதம்111.

மனதின் மூன்று நிலைகளின் ஸம்யமத்தால் முக்காலங்களைப் பற்றிய அறிவு உண்டாகிறது.

மனதின் பதிவுகளை(ஸம்ஸ்காரங்கள்) ஸம்யமம் செய்வதால் பூர்வ ஜென்மத்தை அறிந்து கொள்ளலாம்.

உதான வாயுவை ஸம்யமம் செய்து விரும்பும் போது இறக்க முடியும்.

சமான வாயுவை ஸம்யமம் செய்வதால் பிரகாசம் ஏற்படும்.

வயிற்றுப் பகுதியில் உள்ள சக்கரத்தை ஸம்யமம் செய்வதால் உடல் பற்றிய ஞானம் வருகிறது.

தொண்டைப் பகுதியில் உள்ள சக்கரத்தை ஸம்யமம் செய்து பசி, தாகத்தை வெல்லலாம்.

தலையில் உள்ள ஒளியை ஜோதியை ஸம்யமம் செய்தால் சித்தர்களை தரிசிக்கலாம்.

இதயத்தை ஸம்யமம் செய்து மனதின் நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

கூர்ம நாடியில் ஸம்யமம் செய்வதால் உடல் நிலை பெறும்.

இப்படி உள் உணர்வினால் அனைத்து அறிவைப் பற்றிய அறிவையும் பெற முடிகிறது. பந்தத்தின் காரணத்தை தளர்த்துவது, உட்புகுதல் பற்றிய அறிவால் கூடு விட்டு கூடு பாய முடிகிறது. இப்படி எட்டு வகையான சித்திகளையும் ஸம்யமத்தால் பெற முடியும். ஸமாதியில் நிலைத்து நிற்க இந்த சித்துக்கள் தடையாகி விடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு காலகட்டத்தில் இந்த சித்துகளை விட்டு விடுவதால் பந்தத்தின் விதை அழிகிறது. முக்தி எளிதில் வாய்க்கிறது. வரிசையாகப் பார்த்தால் ஒன்றாவது பக்தி, இரண்டாவது சித்தி, மூன்றாவது முத்தி (முக்தி). இத்தகைய சித்திகளையெல்லாம் தாம் மேன்மையடையவும், மற்றவர்களை மேன்மைப் படுத்தவும் பயன்படுத்தி மரணமில்லா நிலையை அடைந்தவர்களே சித்தர்கள். அவர்கள் பாதம் சரணடைந்து மேன்மை பெற்று உய்வோமாக. வாழ்க பதஞ்சலி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக