தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 26 ஆகஸ்ட், 2015

இலங்கையில் காலத்தால் முந்தியதெனக் கருதப்படும் மனித வர்க்கமான பலாங்கொடை மனிதன்


பலாங்கொடை மனிதன் (Homo sapiens balangodensis, Balangoda Man[1]) எனப்படுவது இக்காலத்துக்கு 34,000 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவதாக இலங்கையிற் காணப்பட்ட உடற்கூற்றியல் அடிப்படையிற் புது மனித இனத்தினன் ஆவான்
இற்றைக்குக் கிட்டத்தட்ட 300,000 முதல் 500,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஓமோ எரெக்டசு (home erectus) மனித இனம் இலங்கையில் வாழ்ந்தமைக்கான சான்றுகள் காணக் கிடைக்கின்றன. இற்றைக்கு 125,000 ஆண்டுகளுக்கு முன்னர் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட மனிதர்கள் இலங்கையில் வாழ்ந்தமைக்கான உறுதியான சான்றுகளும் உள்ளன.[2]
இலங்கையிற் காணக் கிடைத்துள்ள புது மனிதனின் எச்சங்கள் இலங்கையில் நிலவிய இரண்டாம் கற்காலத்திற்குரிய, அஃதாவது பொதுக் காலத்துக்கு முன் 1000 ஆண்டுகளுக்கு முன் இரும்புக் காலம் தொடங்குவதற்கு முற்பட்ட பண்பாட்டுக்குரியனவாகும். இந்த இடைக் கற்காலப் பண்பாடு "பலாங்கொடை நாகரிகம்" எனப்பட்டது.
நன்கு வளர்ச்சியடைந்த பலாங்கொடை மனிதரில் ஆணின் உயரம் 174 செமீ எனவும் பெண்ணின் உயரம் 166 செமீ எனவும் கணிக்கப்பட்டுள்ளது. பலாங்கொடை மனிதனின் எலும்புகள் மிக உறுதியானவையாகவும், மண்டையோடு தடித்ததாகவும், விலா எலும்புகள் நன்கு வளைந்தனவாயும், மூக்கு உட்குழிவானதாயும், விரலெலும்புகள் பருமனானவையாயும், கழுத்து சிறியதாயும் இருந்துள்ளன.
பலாங்கொடை மனிதனின் கற்கருவிகள் மிகச் சிறியனவாகவும், கிட்டத்தட்ட 4 செமீ அளவான கூரிய படிகங்களால் ஆனவையாகவும் மும்மூலை வடிவங்களாகவும் காணப்பட்டன. இவ்வாறான கற்கருவிகளே ஐரோப்பாவில் முதலில் விவரிக்கப்பட்ட படி, முதற் கற்காலத்திலும் பயன்படுத்தப்பட்டவையாகும். ஐரோப்பாவிற் காணப்பட்ட முதற் கற்கருவிகள் இற்றைக்கு 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாயிருக்க, இலங்கையிற் பயன்படுத்தப்பட்ட கற்கருவிகளின் காலம் பட்டதொம்பலென என்னுமிடத்திற் காணப்பட்டவை 31,000 ஆண்டுகளுக்கும், பூந்தலவுக்கு அருகில் அமைந்துள்ள கரையோரப் பகுதிகள் இரண்டிற் காணப்பட்டவை 28,000 ஆண்டுகளுக்கும், பெலிலென குகையிற் காணப்பட்டவை 30,000 ஆண்டுகளுக்கும் முற்பட்டிருப்பது அதிசயமானதாகும்
பலாங்கொடை மனிதனே இலங்கையின் நடு மலைநாட்டில் வேட்டையாடுவதை எளிதாக்குவதற்காக மரங்களை எரித்து ஓட்டன் சமவெளியை உருவாக்கினான் எனக் கருதப்படுகிறது. எனினும், ஓட்டன் சமவெளியிற் கண்டெடுக்கப்பட்டனவான பொதுக்காலத்துக்கு 15,000 ஆண்டுகளுக்கு முந்திய புல்லரிசி மற்றும் வாற்கோதுமை என்பன, பலாங்கொடை மனிதன் வேளாண்மையிலும் ஈடுபட்டானெனக் கருதச் செய்கின்றன.[4]
நில்கல குகை மற்றும் பெல்லன்பந்தி பலசுச என்னுமிடங்களிற் காணப்பட்ட பொதுக் காலத்துக்கு 4500 ஆண்டுகளுக்கு முந்தியனவான நாய் எலும்புக்கூட்டு எச்சங்கள், பலாங்கொடை மனிதன் வேட்டைக்காக நாய்களைப் பயன்படுத்தினான் என்ற கருத்தை ஏற்படுத்துகின்றன. இலங்கையின் நாயினங்கள் தமக்குப் பொதுவான வரலாற்றுக்கு முந்திய முன்னோரைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. மேலும் காட்டுக்கோழி, பன்றி, நீரெருமை, மாடு போன்றவற்றையும் பலாங்கொடை மனிதன் பழக்கி வளர்த்தான் எனக் கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக