தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

மனித அடிமைகளின் வியாபாரம் நிறுத்தப்பட்ட தினம் ஆகஸ்டு 23,எப்படி?

மனித அடிமைகளின் வியாபாரம் நிறுத்தப்பட்ட தினம்தான் வணிகம் தலைநிமிர்ந்த நாள்.
சர்வதேச அளவில் அடிமை வியாபாரம் ஒழிக்கப்பட்டதை கொண்டாடும் தினமாக 1998 ம் ஆண்டு ஆகஸ்டு 23 ஆம் திகதி தெரிவுசெய்யப்பட்டது.
முதன்முதலாக, ஹைதி நாட்டில்தான் 1998 ல் கொண்டாடப்பட்டது. பிறகு, செனகல் நாட்டில் 1999 ஆகஸ்ட் 23 ஆம் திகதி கொண்டாடப்பட்டது.
இப்போது இந்த அடிமை வியாபார ஒழிப்புதினம் எல்லா நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அடிமை வியாபாரத்தில் நம் மனித முன்னோர்கள் குறிப்பாக ஆப்பிரிக்க கறுப்பர் இன மக்கள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய முன்னோர்களால் அனுபவித்த கொடுமைகளை நினைத்தால், அவர்களுடைய வாரிசுகளை கூட மன்னிக்க மனம் வராது.
மண்ணின் மைந்தர்களான கறுப்பர்களை வந்தேறிகளான அமெரிக்க ஐரோப்பிய வெள்ளையர்கள் தங்களிடம் துப்பாக்கி, பீரங்கிகள் போன்ற வலிமையான ஆயுதம் இருந்த ஆணவத்தால், அவர்கள் நினைத்தபடி யெல்லாம் நீட்டி, மடக்கிப் பார்த்தார்கள், விலங்குகளிலும் கீழாக நடத்தி விளையாடினார்கள்.
கொலம்பஸ் அமெரிக்கா வந்தபோதும், வாஸ்கோடாகாம இந்தியா வந்தபோதும் மற்றும் ஏனைய ஐரோப்பிய வெள்ளை அரசின் ஆதிக்கசக்தியின் பிரதிநிதிகள் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு முதன் முதலாக சென்றபோதும் அங்கு இருந்த பூர்வீக குடியினர். அவர்கள் வழக்கப்படி வரவேற்று, அவர்கள் உணவுப்பொருள்களை உண்ணவும் கொடுத்து மற்ற உதவிகளும் செய்யவே தொடங்கினர்.
ஆனாலும் தாங்கள்தான் ஆண்டவனுக்கு அடுத்த மனிதசக்தி இந்த உலகம் எங்களுக்கே சொந்தம். நீங்கள் பூர்வீக குடிகளாக இங்கு பிறந்து வளர்ந்திருந்தாலும் விலங்குகள் எப்படி உரிமை கொண்டாட முடியாதோ அப்படித்தான் நீங்களும் என்ற மமதையில் ஆட்டிப்படைத்தனர்.
அவர்களை கழுத்து, கை, கால் விலங்குகளிட்டு நெடும் சங்கிலிகளால் பலரை ஒன்றாக இணைத்து கப்பல்களில் ஏற்றி அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டுவந்து விற்றனர்.
கப்பல்களிலும் பொருள்களைப்போலவே அடைக்கப்பட்டனர். உணவு, தண்ணீர், இல்லாமல் உடல் மற்றும் மன ரணங்களால் மடிந்தார்கள்.
அப்படி இறந்த உடல்கள் கடலில் வீசப்பட்டன. மனைவி ஒரு கப்பலில், கணவன் ஒரு கப்பலில் கடிந்து ஏற்றப்பட்டனர்.
கண்ணெதிரே மனைவி, மகள் வல்லுறவு கொள்ளப்பட்டனர். கொடுமைகள் ஏடு கொள்ளாது, சொல்லி மாளாது.
ஏசுவின் காலத்துக்கு முன்பும் எகிப்தில் மனிதர்களை விற்கும் வழக்கம் இருந்துள்ளது. அரபு நாடுகளிலும் ஆண்களையும் அழகிகளையும் விற்கும் வாங்கும் முறை இருந்துள்ளது.
இந்தியாவிலும், அரசர்கள் திருமணத்தில் சீதன பொருள்களோடு அடிமை பெண்களும் வழங்கப்பட்டனர்.
தேவதாசி முறை, அடிமைத் தொழிலாளர் முறை எல்லாமே இந்த வகை சார்ந்ததுதான் என்றாலும் அவ்வளவு சித்ரவதை அதில் இல்லை.
அமெரிக்க, ஐரோப்பியர்கள் கொடுமை ஒரு தனி ரகம்.
அபிரகாம் லிங்கன் ஆட்சிக்கு வந்ததும் மக்களிடம் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் செயலாக, தனது முதல் கையெழுத்தை கறுப்பர் இன அடிமை ஒழிப்பில்தான் போட்டார் என்பது, பல மோசடிகளுக்கு மத்தியில் நடந்த ஒரு வரலாற்று ஆறுதல்.
சண்டோ டோமினிக்கோ (கெயிட்டி குடியரசு) என்ற நாட்டில், 1719 ம் ஆண்டு ஆகஸ்ட் 22 ம் திகதி இரவில் அடிமைகள் ஏற்படுத்திய கலவர புரட்சி தான் அடிமை வியாபார முறை ஒழிப்புக்கு வித்திட்டது. அதனால்தான், ஐ.நா.வும் அந்த நாளையே தெரிவு செய்தது.
நிறவெறி என்பதே இயற்கையை வரவேற்க தெரியாத அரைவேக்காடு மனோபாவம்.
ரத்தமும் உயிர்பலியும் காவுகேட்கும் உக்கிர புரட்சி வெடிக்கும் வரை, நம் உரிமைகள் மீது உட்கார்ந்திருக்கும் முட்டாள்களுக்கு ஞானம் உதிப்பதில்லை.
இதைத்தான் கடந்த கால வரலாறுகள் நமக்கு கூறுகின்றன. அடிமை வியாபாரம் ஒழிந்தாலும் அடிமை வக்கிரம் இன்னும் சிலரிடம் தொடர்ந்தபடிதான் உள்ளது.
இலங்கையில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களை முள்வேலிக்குள் அடைத்தும், உணவு நீருக்காக ஏங்க வைத்தும் ரசித்தது, அந்த ஆட்சியாளர்களின் அடிமைநிலையை ஆதரிக்கும் கொடிய மனநிலையே ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக