தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

மனித உடல் ரகசியம்: -----------------------------------




உடல்-மனம்-இந்திரியங்கள்-ஜீவாத்மா ஆகியவற்றின் சேர்க்கை முன் ஜன்மத்தின் கர்ம வாசனைகளால் தகுந்த கருக்குழியை தேர்ந்தெடுத்து மனித உடலாக உருப்பெற்று வளர்கிறது. முன் ஜன்மத்தின் கர்ம வினைகள் சிறப்பாக இருக்குமேயானால் நல்ல ஆசால சீலங்களையும் மகிழ்ச்சியும் வளமும் நிறைந்த ஒரு குடும்பத்தில் சூக்ஷ்ம சரீர வடிவத்தில் இருந்த ஜீவாத்மா மனித உடலை எடுத்துக் கொண்டு அக்குடும்பத்தில் பிறக்கிறது. எது சிறப்பான கர்மவினை என்று நாம் ஆராய்ந்து பார்த்தால் மனதின் சத்வகுணத்தை அதிகப்படுத்தும் உணவு வகைகளான பால், வெண்ணெய், நெய், தயிர், மோர், இனிப்புப் பண்டம் எளிதில் ஜீர்ணமாகக் கூடிய கறிகாய் வகைகள், அவைகளை சரியான நேரத்தில் உண்பது, செயல்களை செய்வதில் ஆலோசனைக்குப் பிறகே செய்தல், பொருள் பற்று இல்லாதிருத்தல், தானம், சமநோக்கு, உண்மையே பேசுதல், பொறுமை, சான்றோருக்கு வேண்டிய உதவிகளை செய்து அவர்களுடனிருத்தல், சதா ஈஸ்வர பக்தி, உயர் சிந்தனைகள் போன்றவை கர்மவினைகள் சிறப்பாக அமையும்படி செய்யும் ஒரு சில உதாரணங்கள். ஜீவாத்மாவின் உடல் பிரவேசம் கண்களுக்குப் புலப்படாதிருக்கிறது. உடலின் அமைப்பையும் குழந்தையின் மன நிலையும் சிறப்பாக அமைவதற்கு தாய் தந்தையரின் ஆரோக்யமான முட்டையும் விந்துவும் காரணமாக அமைகின்றன. கருவுற்ற நிலையில் தாயாரின் உணவுப் பழக்கங்களும் நடவடிக்கைகளும் மனதில் எழும் எண்ணங்களின் வெளிப்பாடும் தூய்மையாக அமையும் பக்ஷத்தில் குழந்தையும் உடல் ஆரோக்யத்தையும் உயர் சிந்தனைகளை கொண்டதாகவும் ஜனனம் பெறுகிறது.
கர்மவினை எதுவாயினும், உயர்குடிப்பிறப்பாயினும் மனித உடலில் வாதம்-பித்தம்-கபம் எனும் மூன்று தோஷங்கள் மட்டுமே உடல் அமைப்பை தீர்மானம் செய்கின்றன. இம்மூன்று தோஷங்களின் ஏதேனும் இரண்டு அதிக அளவில் சேர்ந்தால் வாத கபம், பித்த கபம், வாத பித்தம் என்று மூன்று வகையில் உடல் அமைப்பில் மாறுதல்களைக் காணலாம். வெறும் வாதத்தை மட்டும் அதிகமாகக் கொண்டு பிறக்கும் குழந்தைக்கு ஆரோக்யம் மிகக் குறைவாகவும், பித்தம் மட்டும் அதிகமானால் மத்யம நிலையில் ஆரோக்யமும், கபத்தை மட்டும் அதிக அளவில் பெற்றும் வரும் குழந்தை உத்தம ஆரோக்யமாகவும் அமையும். இவை அனைத்தையும் விட சமமான நிலையில் மூன்று தோஷங்களையும் கொண்ட உடலுக்குத்தான் தீர்க்க ஆயுஸும் ஆரோக்யமும் அமையும். இரண்டு தோஷங்களின் சேர்க்கை நிந்திக்கக்கூடியது அதாவது நல்லதல்ல என்பது ஆயுர்வேத அறிஞர்களின் கூற்று. இம்மூன்று தோஷங்களின் அதிக அளவு, குறைந்த அளவில் சேர்க்கை போன்றவற்றை கருவுற்றிருக்கும் பெண்ணின் உணவும், செயல்களும் தீர்மானிக்கின்றன. இதில் தந்தையின் பங்கு விந்தவின் சேர்க்கையில் நிர்ணயம் செய்கிறது.
வறட்சி, லேசானது, குளிர்ச்சி போன்ற தன்மைகளையுடைய வாயுதஷம், அளவில் மிகக் குறைந்த உணவு, ஆயாஸம், மாலை நேரம், காமம், சோகம், பயம், சிந்தை, இரவில் தூக்கமின்மை, அடிபடுதல், நீந்துதல், உணவு ஜீர்ணமான பிறகும் சீற்ற்தை அடைகின்றது. காரம், புளிப்பு, உப்புச் சுவை, சூடான பூமி, பசி தாகம் அடக்குதல், நடுப்பகல், உணவு ஜீர்ணமாகும் தருவாயிலும் பித்தம் சீற்றமாகின்றது.
இனிப்பு, நெய்ப்புத்தன்மை, குளிர்ச்சியான உணவு, பகல்தூக்கம், பசி மந்தித்தல், காலை நேரம், உடல் உழைப்பின்றி ஸுகமாயிருப்பது, உணவு சாப்பிட்டவுடனும் கப தோஷம் அதிகரிக்கின்றது.
மேற்கூறிய காரணங்களை சரியாக உணர்ந்து செயல்பட்டு தாயானவள் குழந்தையின் ஆரோக்யத்தில் பற்றுக் கொண்டவளாக இருத்தல் வேண்டும்.
இம்மூன்று தோஷங்களும் உடலின் அனைத்து பகுதிகளில் பரவியிருந்தாலும் கூட வாயு தோஷத்தின் ஆதிக்கம் தொப்புள் பகுதியின் கீழ்ப் பகுதி முதல் கால் அடிப்பகுதி வரையில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. வாயுவின் சீற்றத்தினால் தான் இடுப்பு, மூட்டுவலி, கணுக்கால் வலி போன்றவை ஏற்படுகின்றன. எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் வாயுவின் சீற்றம் ஏற்படாதவாறு பாதுகாக்கலாம்.
பித்தம் தன் ஆதிக்கத்தை இதயப் பகுதி முதல் தொப்புள் வரை வைத்திருப்தால் இரைப்பையில் உணவை ஜெரிப்பதற்கான வழி சுலபமாக உள்ளது. பித்தத்தின் ஆதிக்கப் பகுதிகளில் தான் கல்லீரல், மண்ணீரல், டியோடினம் மற்றும் பேன்கிரியாஸ் போன்ற முக்ய உறுப்புகள் இடம் பெறுகின்றன.
கபம் இதயத்திற்கு மேல் பகுதியிலிருந்து தலை வரை ஆதிக்கம் செலுத்துகிறது. உடலை பலப்படுத்தி நிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இம்மூன்று தோஷங்களின் சமமான அளவை எவர் ஒருவர் சிறந்த உணவால், செயலால் பெறுகிறாரோ அவரே ஆரோக்யமானவர். அறுசுவை உணவில் சுவையே தோஷங்களின் ஏற்றக் குறைச்சலை செய்கின்றன.
1. இனிப்பு, புளிப்பு உப்புச் சுவை - வாதத்தின் சீற்றத்தைக் குறைக்கின்றன.
2. காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை - கபத்தின் சீற்றத்தைக் குறைக்கின்றன.
3. துவர்ப்பு, கசப்பு, இனிப்புச் சுவை - பித்தத்தின் சீற்றத்தைக் குறைக்கின்றன.
4. இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை - கபத்தை அதிகரிக்கும்
5. காரம், கசப்பு துவர்ப்புச் சுவை - வாதத்தை அதிகரிக்கும்
6. புளிப்பு, காரம், உப்புச் சுவை - பித்தத்தை அதிகரிக்கும்
ஆக அறுசுவை உணவு வகைகளையும் சரியான அளவில் உணவில் சேர்ப்பவருக்குத்தான் ஆரோக்யம் புலப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக