தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 29 மே, 2015

பணக்கோழி கேட்கும் தீனி!

கோழிக்கறியைச் சாப்பிடும் யாரும் கோழிப்பண்ணை எப்படிச் செயல்படுகிறது, கோழிகள் எப்படி வளர்க்கப்படுகின்றன, அங்கு சுகாதாரம் எப்படி இருக்கிறது என்ற கவலையே இல்லாமல், வேளாவேளைக்குக் கோழிக் கறியை அவசர அவசரமாக உள்ளே தள்ளுவது அதிர்ச்சியாக இருக்கிறது.
இங்கிலாந்தின் மேற்குப்பகுதி நெடுகிலும் மிகப் பிரம்மாண்டமான ‘கோழி ஆலைகள்’ முளைத்து வருகின்றன. ‘பண்ணைகள்’ என்று கூறாமல் ‘ஆலைகள்’ என்று கூறுவதற்குக் காரணம், இவை ஆலைகளைப் போலவே செயல்படுவதுதான்.
நரகம்கூடப் பரவாயில்லை, இந்த ஆலைக்குள் நுழைந்தவுடனேயே உங்களுக்கு வாந்தி வருவதைப் போல புரட்டல் ஏற்படும். மூக்கைத் துளைக்கும் துர்நாற்றம் மட்டுமல்ல, கண்ணுக்கு எதிரில் தென்படும் அசிங்கங்களாலும்தான்.
பண்ணைகளா தொழிற்சாலைகளா?
மிகப் பெரிய 2 பிராய்லர் ஆலைகள் ஹெர்ஃபோர்ட் ஷைரின் தங்கப் பள்ளத்தாக்கில் திட்டமிடப்பட்டுவருகின்றன. பிரிட்டனில் உள்ள மிக அழகான இடங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலைகளின் ஒவ்வொரு கொட்டகையும் 90 மீட்டர்கள் (279 அடி) நீளம். 40,000 கோழிகளை இங்கே வளர்க்க முடியும். 40 நாட்களுக்கு ஒரு முறை இந்தக் கோழிகள் வெளியே எடுக்கப்பட்டு, கொல்லப்பட்டு, இறைச்சி எடுக்கப்படும். பிரிட்டனில் இப்போதைக்குச் சுமார் 2,000 கோழி ஆலைகள் இருக்கின்றன.
கடந்த 40 ஆண்டுகளில் இறைச்சியின் தேவை இரண்டு மடங்காகிவிட்டது. ஆலைகளில் ஓசையும் தூசும் துர்வாடையும் வாகனங்களின் இடையறாத போக்குவரத்தும் இருக்கும். எல்லாமே இயந்திரமயமாகிவிடுவதால் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆனால், அவர்கள் அருவருப்பான வேலைகளைச் செய்ய வேண்டும். தினமும் செத்துவிழும் கோழிகளை எடுத்துவந்து பீப்பாய்களில் அடைக்க வேண்டும்.
எச்சங்களும் இறகுகளும் பரவிக்கிடக்கும் தரையிலிருந்து கோழிகளைச் சேகரிக்க வேண்டும். எல்லாக் கோழிகளும் பிடிக்கப்பட்டு வெட்டுவதற்கு எடுத்துச் செல்லப்பட்ட பிறகு, தரையைச் சுரண்டி, தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும்.
அப்போது கிளம்பும் புழுதியில் கோழிகளின் எச்சம், அவற்றின் உடல்களிலிருந்து உதிர்ந்த செதில் போன்ற தோல், சிறு பூச்சிகள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், அகநச்சுப் பொருட்கள், புறநச்சுப் பொருட்கள், கால்நடைகளுக்கான மருந்துகளின் எச்சம், பூச்சிமருந்துகளின் எச்சம், அம்மோனியா சல்பைடு, ஹைட்ரஜன் சல்பைடு போன்ற அனைத்தும் கலந்திருக்கும். இது மிகவும் கொடிய நச்சுக் கலவை. இந்தக் குப்பையைப் பெருக்கும் கோழிப்பண்ணைத் தொழிலாளர்களில் 15% பேர் கடுமையான மார்புச் சளியால் பாதிக்கப்படுகின்றனர்.
முறைகேடுகளின் காவல் தெய்வங்கள்
இந்தக் கோழி ஆலைகளின் கூரைகள், உள்ளே  இருக்கும் நச்சுக்காற்றை வெளியேற்றும் வசதிகள் இல்லாதவை. இருந்தும் இதை பிரிட்டன், ‘மிகச் சிறந்த தொழில்நுட்பத்துடன் அமைந்த கூரைகள்’ என்று பெருமை பேசுகிறது. ஐரோப்பியக் கண்டத்தில் எந்த நாட்டிலும் இப்படியொரு அவலம் கிடையாது. இதுமட்டும் பண்ணையாக இல்லாமலிருந்தால் உள்ளிருக்கும் நச்சுக்காற்றை அவ்வப்போது வெளியேற்றும் நவீன காற்றுப் போக்கிகள் பொருத்தப்படாவிட்டால், இந்த ஆலைக்கே அனுமதி கிடைத்திருக்காது. இதில் உள்ளேயிருக்கும் தூசுகளை மட்டுமல்ல, துர்நாற்றத்தையும் அவ்வப்போது வெளியேற்றும் ஏற்பாடு மிகமிக அவசியம்.
ஆனாலும், ஆதிக்க சக்திகள் இந்தத் தொழிலுக்குக் காவல் தெய்வங்களாக இருப்பதால் இந்த முறைகேடுகள் கண்டுகொள்ளப்படுவதே இல்லை. இந்த ஆலைகள் ஆலைச் சட்டக் கட்டுப்பாடுகளிலிருந்தும் திட்டமிட்ட அமைப்பு முறைகளிலிருந்தும் வரி விதிப்பிலிருந்தும் விலக்கு பெற்றவை. ஹெர்போர்ட்ஷைர் கவுன்டி கவுன்சில், இந்தப் பண்ணைகளைப் பள்ளிகளுக்குப் பக்கத்தில்கூட அமைக்க அனுமதி வழங்கிவிட்டது. இதிலிருந்து வெளியாகும் நச்சுப் புழுதி குறித்தோ துர்நாற்றம் குறித்தோ அது கவலைப்படவில்லை.
கொழுக்க வைக்கும் கொடூரம்
கோழி ஆலைகளுக்குள் நடப்பதெல்லாம் கொடூரம். மிக வேகமாக வளர்ந்து விற்பனைக்குத் தயாராக வேண்டுமென்பதால், தீனியைத் திணித்து நகர விடாமல் நெருக்கமாக அடைத்துவைக்கிறார்கள். உடலின் எடை அதிகமாகிக்கொண்டே போவதால் நடக்கக்கூட முடியாமல் இவை கீழே கொட்டிக்கிடக்கும் ரசாயன, பூச்சிமருந்து, எச்சம், தீனி ஆகியவை கலந்த கலவை மீதே படுத்துவிடுகின்றன. பெரும்பாலான கோழிகளின் பாதங்கள் ரசாயனங்கள் காரணமாக வெந்துவிடுகின்றன. மார்பில் சதை கிழிந்து ரத்தம் வடிகிறது. தோலை உரித்து வெட்டிய பிறகு அவற்றின் எடை, தோற்றத்தைப் பொறுத்து வகைப்படுத்துகிறார்கள். இதில் ‘ஏ’ கிரேடு என்று வகைப்படுத்துவதை முழுதாக அப்படியே ‘பேக்’ செய்கிறார்கள். மற்றவற்றைக் கீறியும் வெட்டியும் எரித்தும் பாகம் பாகமாகச் சிதைக்கிறார்கள். சில உறுப்புகளைத் தனியே வெட்டியெடுத்து தனி விலை வைத்து விற்கிறார்கள்.
இந்த ஆலைகளால் தொற்றுநோய்கள் வேகமாகப் பரவுகின்றன. பிராய்லர் கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை ஊட்ட மருந்துகளை ஊட்டுகின்றனர். இந்த மருந்துகளைக்கூட டாக்டர்களின் பரிந்துரைப்படி, அவர்களுடைய மேற்பார்வையில்தான் அளிக்க வேண்டும். ஆனால், அது தொடர்பான ஆவணங்கள் ஆலைகளிடமும் இல்லை, அரசிடமும் இல்லை. இந்தக் கோழிகளுக்கு ஊட்டப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி மருந்துகள் அவற்றின் இறைச்சியில் கலந்துவிடுகின்றன. கோழி இறைச்சியைச் சாப்பிடும் மனிதர்கள் உடலிலும் அந்த மருந்துகள் சேர்கின்றன. ஏதேனும் வியாதிகளுக்காக மருந்து சாப்பிடும்போது அது பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. அவர்களுடைய உடலில் புகுந்த நோய் எதிர்ப்புக் கிருமிகள், சாதாரண நோய் எதிர்ப்பு மருந்துகளுக்குக் கட்டுப்பட மறுக்கின்றன. எனவே, அவர்களை நோய் தாக்கினால் கட்டுப்படுத்துவதே பெரும்பாடாகிவிடுகிறது.
அரசின் அலட்சியம்
இந்தக் கோழிகளுக்குப் பெரும்பாலும் சோயா மொச்சைதான் உணவாகத் தரப்படுகிறது. இதைப் பயிரிடுவதற்காகக் காடுகளை அழித்து பயிர் சாகுபடி செய்கிறார்கள். எத்தனை பிராய்லர் ஆலைகள் இருக்கின்றன என்ற புள்ளிவிவரம் உள்ளாட்சி அமைப்பிடம் இல்லை. மக்களைக் கேட்டால், கடந்த 12 மாதங்களில் மட்டும் 42 பிராய்லர் ஆலைகள் முளைத்திருப்பதாகக் கூறுகின்றனர். அரசின் புள்ளிவிவரமோ 2000 முதலே 21 ஆலைக்கு மட்டுமே அனுமதி கொடுத்திருப்பதாகத் தெரிவிக்கிறது. 2010 முதல் 31 புதிய ஆலைகளுக்கு ஒப்புதல் தந்திருப்பதாகப் பிறகு அதுவே ஒப்புக்கொள்கிறது. இந்தக் கோழி ஆலைகளை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும், எப்படி நிர்வகிக்க வேண்டும் என்ற உத்தியெல்லாம் அரசிடம் இல்லை. இந்த ஆலைகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடுகுறித்து மதிப்பிட வேண்டும் என்றுகூட அரசு நினைக்கவில்லை.
அப்படியானால், கோழி எப்படி வளர்க்கப்பட வேண்டும்? ஆலைகளில் வைத்து வளர்க்காமல் சுதந்திரமாகத் திறந்த வெளியில் சுற்றித்திரியுமாறு (நாட்டுக் கோழிகளாக) வளர்க்க வேண்டும். ஆனால், இறைச்சிக்காகவும் பாலுக்காகவும் கால்நடைகளையும் கோழி போன்ற பறவையினங்களையும் வளர்க்கிறவர்கள் குறுகிய காலத்தில் நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இயற்கைக்கு முரணாகத் தீனி கொடுத்தும் மருந்துகளை உள்செலுத்தியும் நாசப்படுத்துகிறார்கள்.
கோழி வளர்ப்பை புத்திசாலித்தனமாக செய்யத்தான் முடியவில்லை. உண்பதையாவது குறைத்துக்கொள்ளலாம் அல்லவா? கோழியிறைச்சியால் நமக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளை இப்படித்தான் குறைத்துக்கொள்ள முடியும். கோழி சாப்பிடாமல் பெரும்பாலானவர்களால் இருக்கவே முடியாது என்று தெரியும். நம்முடைய பாட்டனும் முப்பாட்டனும் கோழி இறைச்சி சாப்பிட்டவர்கள்தான். ஆனால், அப்போது கோழி இறைச்சி உருவான விதமும் இப்போது உருவாகும் விதமும் வேறல்லவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக