அரியானா மாநிலத்தில் பாஜக அரசு பொறுப்பேற்றதை அடுத்து, நீர்நிலைகள் மற்றும் நதிகள் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வேதங்களில் புண்ணிய நதி என்று சொல்லப்பட்டுள்ள சரஸ்வதி நிதியின் தோற்றம் விண்வெளியில் இருந்து செயற்கை கோள் மூலம் ஆதிபத்ரி பகுதியில் முகல்வாலி என்ற இடத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து புவியியல் மற்றும் அறிவியியல் ஆராய்ச்சியாளர்கள் 20 பேர்கொண்ட குழுவினர் ஆராய்ச்சி செய்ய தொடங்கியுள்ளனர்.
கடந்த மாதம் 21ம் திகதியில் இருந்து தொடங்கப்பட்ட இந்த பணியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணியாளர்கள் சுமார் 80க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள முகல்வாலி பகுதியில் கடந்த செவ்வாய் அன்று தோண்டும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் பள்ளம் தோண்டி கொண்டிருந்த போது, அதனுள் இருந்து வெளிவந்த மணல் ஈரப்பதத்துடன் காணப்பட்டுள்ளது.
இதனால் ஆச்சர்யம் அடைந்த மக்கள், மேலும் மேலும் அந்த இடத்தில் தோண்டிய போது ஈரப்பதம் அதிகரித்து கொண்டே இருந்ததோடு, அந்த இடத்தில் இருந்து நீர் வர தொடங்கியுள்ளது.
மேலும், அந்த பள்ளம் தோண்டப்பட்ட அதே வரிசையில் தோண்டபட்ட மற்ற 4 குழிகளில் இருந்தும் நீர் ஊற்றுகள் தென்பட்டுள்ளது.
இந்த செய்தி காட்டுத் தீ போல பரவியதை அடுத்து அந்த இடத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியுள்ளனர்.
சரஸ்வதி நதி யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஆதி பத்ரி என்னும் கிராமத்தில் தோன்றி 41 கிராமங்களில் ஓடுவதாக கருதும் அரியானா அரசாங்கம், தற்போது 8 கிராமங்களில் இதற்கான பணிகளை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் நமது வேதத்தில் சொல்லப்பட்ட சரஸ்வதி நதியின் தோற்றம் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நம்புகின்றனர். ஆனால் அரசு சார்பில் இது தான் சரஸ்வதி நதி என்று எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக