வெள்ளையாக இருந்தாலே அழகு என பலரும் நினைக்கின்றனர், தங்களின் தோல் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும் என்பதிலும் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
அதுவே உடலில் திட்டு திட்டாக வெண்மை படலம் படரும் போது அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர்.
இப்படி வெண்மை படலம் படருவதற்கு “லூகோடெர்மா” அல்லது “விடிலிகோ” என்று பெயர்.
பொதுவாக 12 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இது ஏற்படுகிறது, உலகப் புகழ் பெற்ற பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் உட்பட பலரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெண் படலம் முதலில் கைகள் மற்றும் கால்களில் துவங்குகிறது, சிலருக்கு மூக்கு, வாய், கண்கள், தொப்புள் போன்ற இடங்களில் வெண் படலம் தோன்றும்.
பிறகு பரவாமல் அந்தந்த பகுதிகளுடன் நின்று விடும்; சிலருக்கு உடல் முழுவதும் பரவும்.
காரணம்
வெண் படலம் உருவாக, மரபணுவே காரணம். 17வது குரோமோசோமில் உள்ள சில மரபணுவில் மாற்றம் ஏற்படுவதால் இது போன்ற நிலை ஏற்படுகிறது.
பொதுவாக இது பரம்பரை நோயாக ஏற்படும். சிலருக்கு இந்த பிரச்னைக்குரிய மரபணு துண்டிப்பு, உடலில் இருந்தாலும், வாழ்நாள் முழுவதும் வெண் படலம் ஏற்படாமலேயே போக வாய்ப்பும் ஏற்படும்.
எனினும் குடும்பத்தில் ஒருவருக்கு இந்த படலம் தோன்றினால், மற்றவர்களுக்கும் தோன்ற, ஐந்து மடங்கு வாய்ப்பு அதிகம். இதே மரபணு தான், இள வயது நரைக்கும் காரணமாகிறது.
சிலருக்கு உடலில் வெண் படலமாகத் தோன்றும். சிலருக்கு இருபது வயதிலேயே நரை தோன்றும். சிலருக்கு, எந்த பாதிப்புமே தோன்றாது.
கவலைகள் அதிகரிக்கும் போது இந்த மரபணு தன் குணத்தை காட்டத் தோன்றும். சில விபத்துக்களாலோ அல்லது ஒவ்வாத உடைகள், ஷூக்கள் அணிவதாலோ கூட இந்த மரபணு தூண்டப்பட்டு விடும்.
உடலுக்கு மெலனின் என்ற நிறத்தை கொடுக்கும் நிறமி, சரியான முறையில் வேலை செய்யாமல் போவதால், இது போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. இதுவும் பரம்பரையாக ஏற்படுவது தான்.
எனவே தோல் பரிசோதனை செய்தால் மட்டுமே, எந்த வகையான நோய் ஏற்பட்டிருக்கிறது என்பது தெரிய வரும். வெண் படலம் தோன்றினால், நம் உடலில் சூரிய ஒளி நேரடியாக படாமல் பார்த்து கொள்ள வேண்டும். மற்ற இடங்களில் தோல் கருப்பாகி, வெண் படலம் வித்தியாசமாக தெரிய துவங்கி விடும்.
பாதுகாப்பு முறைகள்
சன் பில்டர் 30 சதவீதம் அடங்கிய சன்ஸ்கிரீன் லோஷனை, உடலில் வெயில்படும் இடங்களில் பூசிக் கொண்ட பிறகே, வெளியில் செல்ல வேண்டும்.
குடை விரித்து செல்வது மிக மிக அவசியம். சிறிய வெண் படலங்களை, சில களிம்புகளைப் பூசி மறைக்கலாம். டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் ஸ்டிராய்டு களிம்புகளும் பூசலாம். எனினும் தொடர்ந்து களிம்பு பூசினால் தோலின் தன்மை கெட்டு விடும்.
சிகிச்சை முறைகள்
உடலில் வேறு ஒரு பகுதியில் இருந்து தோலை எடுத்து வெண் புள்ளிகள் உள்ள இடத்தில் வைத்து அறுவை சிகிச்சை செய்யும் முறை ஸ்கின் கிராஃப்டிங்.
வெண் புள்ளிகள் உள்ள இடத்தில் நிறம் தரக் கூடிய எந்த அணு இல்லையோ அதை வேறு ஒரு பகுதியில் இருந்து எடுத்து வைத்து வளர்ப்பது மெலனைட் கல்ச்சர்.
இதுமட்டுமின்றி, ‘டாட்டூயிங்’ எனப்படும் பச்சை குத்தும் முறை மூலம் வெண் புள்ளிகள் உள்ள இடத்தில் தோல் நிறத்தில் சாயம் பூசுதல் போன்ற பல்வேறு சிகிச்சைகள் மூலம் இதை குணப்படுத்தலாம்
வெண் புள்ளிகள் உடலில் தோன்ற ஆரம்பித்தவுடனேயே சிகிச்சைக்கு வந்துவிட்டால் விரைவில் குணப்படுத்தலாம். இடைவிடாமல் சிகிச்சை எடுத்துக் கொள்வது, காலை ஏழு மணி வெயிலில் சிறிது நேரம் நிற்பது போன்றவற்றின் மூலம் வெண் புள்ளிகள் புதிதாக ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக