குஜராத்தின் அஹமதாபாத்தில் இருந்து 102 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள புஷ்பவதி என்னும் ஆற்றின் கரையில் உள்ள மோதேராவில் இந்து கடவுளான சூரியனுக்கு கோவில் ஒன்று அமைந்துள்ளது.
இந்த சூரியக் கோவில் கி.பி. 1026ம் ஆண்டில் சோலாங்கி வம்சத்தை சேர்ந்த பீம் தேவ் என்ற அரசனால் கட்டப்பட்டுள்ளது.
அழகிய சிற்பங்களும் கலை நுணுக்கங்களுடன் கூடிய இப்பெரிய சூரியன் கோயில் தற்போது இந்தியத் தொல்லியல் துறை வசம் உள்ளது.
எனவே தற்போது இந்த கோவிலில் எந்த பூஜைகளும் நடைபெறுவதில்லை.
ஸ்கந்த புராணம் மற்றும் பிரம்ம புராணத்தின்படி மோதேராவும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பண்டைய காலத்தில் தரும ஆரண்யம் (மறைக் காடு) என்ற பெயரால் அழைத்துள்ளனர்.
பிறப்பால் வேதியனாகிய இராவணனை போரில் வென்று கொன்றதால் தன்னை பீடித்த பிரம்மஹத்தி தோஷம் (வேதியனை கொல்வதால் பீடிக்கும் பாவம்) நீங்க வழி கூறுமாறு இராமர் தன் குலகுருவான வசிட்டரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு வசிட்டர், தற்போதைய மோதேராவிற்கு அருகே உள்ள தரும ஆரண்யத்திற்கு (மறைக் காட்டிற்கு) சென்று மகாதேவனை வழிப்பட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் எனக் கூறியுள்ளார்.
அதன்படி இராமர், தரும ஆரண்யத்தில் உள்ள மோதராக் எனும் கிராமத்தில் குடில் அமைத்து யாகம் செய்து மகாதேவரை வழிபட்டு பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதாக கூறப்படுகிறது.
பல தனிச்சிறப்புகளுடன் அழகிய கலைநயத்துடன் கட்டப்பட்ட இந்த கோயில் சூரிய குண்டம், சபா மண்டபம் மற்றும் குடா மண்டபம் என்று மூன்று பிரிவாக பிரித்துக் கட்டப்பட்டுள்ளது.
சூரிய குண்டம் எனும் இராமகுண்ட குளம், பெரிய செவ்வக வடிவில் அமைந்த ஆழமான குளமாகும்.
சூரிய குண்டம் எனும் இராமகுண்ட குளம், பெரிய செவ்வக வடிவில் அமைந்த ஆழமான குளமாகும்.
இந்த சூரிய குண்ட குளத்து நீரில் குளித்த பின்னரே மக்கள் சூரியன் கோயிலுக்கு சென்று சூரிய தேவனை வழிபட்டு வந்துள்ளனர்.
கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த சூரிய குண்ட குளத்தில் மக்கள் இறங்கி நீராட வசதியாக நூற்றுக்கணக்கான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குடா மண்டபத்தில் அமைந்துள்ள கருவறையில் சூரிய தேவன் தனது தேர்த்தட்டில் அமர்ந்துள்ளது போலும், சாரதியான அருணன் தேரில் கட்டப்பட்டுள்ள குதிரைகளை ஓட்டும் நிலையிலும் தங்கத்தால் சிலை வடிக்கப்பட்டுள்ளது.
இந்த கருவறையின் விதானம் கவிழ்ந்த தாமரை வடிவத்தில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 20ம் திகதி மற்றும் செப்டம்பர் மாதம் 21ம் திகதியும், மேல் விதானத்தின் சிறு துவாரத்தின் வழியாக சூரியனின் ஒளிக் கதிர்கள் கருவறையில் உள்ள சூரிய தேவன் மீது விழும்படியாக கோயில் கர்ப்பக்கிருகம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கோவில் கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் சூரியனின் 12 நிலைகளை எடுத்துக் காட்டும் விதமான சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக