கொழுக்கட்டை என்றாலே நமக்கு ஞாபகத்துக்கு வருவது விநாயகர் சதுர்த்தி தான்.
பொதுவாக வீட்டில் கொழுக்கட்டையில் சர்க்கரை, பயறு கலந்து செய்து தான் அம்மாக்கள் செய்து சுவைக்க தருவார்கள்.
ஆனால் இப்போது கொஞ்சம் புதுவிதமாக கோதுமை வெஜ் கொழுக்கட்டையை பார்ப்போம்,
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - ஒரு கப்
அரிசி மாவு (கொழுக்கட்டை மாவு) - ஒரு மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று
பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 5
கேரட் (துருவியது) - ஒன்று
உருளைக்கிழங்கு (துருவியது) - ஒன்று
கோஸ் துருவல் - ஒரு கப்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை
வெறும் வாணலியில் கோதுமை மாவை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். (சூடாகும் வரை வறுத்தால் போதும்). வறுத்த கோதுமை மாவுடன் அரிசி மாவு மற்றும் உப்புச் சேர்க்கவும்.
அதனுடன் கொதிக்கும் நீரை சிறிது சிறிதாக ஊற்றி, கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசையவும். நல்லெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, பீன்ஸ். கேரட், கோஸ் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
பிறகு மிளகாய் தூள் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்கு ட்ரையாகும் வரை வதக்க வேண்டாம், லேசான சதசதப்புடன் இருக்கும் அளவிற்கு வதக்கினால் போதும்.
பிசைந்து வைத்துள்ள மாவை எலுமிச்சை பழ அளவு உருண்டையாக எடுத்து, லேசாக எண்ணெய் தொட்டுக் கொண்டு கிண்ணம் போல் செய்து, அதில் ஒரு தேக்கரண்டி அளவு வதக்கிய காய்கறி கலவையை வைத்து, மூடி ஓரத்தை ஒட்டவும்.
மீதமுள்ள மாவிலும் இதேபோல் தயார் செய்து, அவற்றை இட்லி பானையில் வைத்து 8 - 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்தெடுக்கவும்.
மாலை நேர டிபனுக்கு சுவையான கோதுமை வெஜ் கொழுக்கட்டை தயார். தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை. குழந்தைகளும், சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடுவதற்கு சிறந்த சத்தான உணவு இது.
குறிப்பு
சர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கை தவிர்த்துவிடவும்.
இத்துடன் குடைமிளகாய் சேர்த்துக் கொள்ளலாம். புளிப்புச் சுவை விரும்புபவர்கள் வதக்கும் போது ஒரு தேக்கரண்டி தக்காளி சாஸ் சேர்த்துச் செய்யலாம்.
அரிசி மாவு பதப்படுத்தப்பட்ட கொழுக்கட்டை மாவாக இருக்க வேண்டும். பட்டாணி சேர்த்தால் கொழுக்கட்டையிலிருந்து வெளியில் வந்துவிடும். அதனால் பட்டாணி சேர்க்க வேண்டாம்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக