தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 20 ஜூன், 2014

இலங்கையில் சிறுபான்மை இனங்கள் மீதான தாக்குதல்களும்! தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமும்



முப்பது வருடங்களாக இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகள் முடிவுக்குக் கொண்டு வரப்பபட்டுள்ளது.
நாட்டில் அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று மார்தட்டிக் கொள்ளும் இலங்கை அரசாங்கத்தின் அடாவடித்தன செயற்பாடுகள் தமிழ் மக்கள் மீது மாத்திரம் அல்ல, சிங்களவர் தவிர்ந்த ஏனைய அனைத்து இனங்கள் மீதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன என்பதற்கு சிறந்த சான்றாக இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பல வரலாற்று இனசுத்திகரிப்பு நடவடிக்கைகள் சிறந்த சான்று பகர்கின்றன.
பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரை தோற்கடித்தோம் என்ற மேடைப் பேச்சுக்களுக்கு மத்தியில் தமது இனசுத்திகரிப்பு செயற்பாடுகளை  இலங்கை அரசாங்கம் மூடி மறைத்துள்ளன என்றே கூற முடியும்.
எனினும் ஆங்காங்கே  புரையோடிப் போய் சின்னாபின்னமாக சிதறிப்போயுள்ள சிறுபான்மையின மக்கள் மீதான சிங்கள அரசாங்கத்தின் வெறித்தன செயற்பாடுகள் நாளாந்தம் நடைபெறுகின்றன என்பதற்கு தொடர்ச்சியாக நடைபெறுகின்ற சிங்கள- முஸ்லிம் இன மக்களுக்கிடையிலான உள்நாட்டு கலவரங்கள் சிறந்த சான்று பகர்கின்றன.
இலங்கை அரசியல் வரலாற்றில் 1915 ஆம் ஆண்டு காலம் தொட்டே அதாவது தனிநாடு என இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே இன ரீதியான பிரச்சினைகளும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் இடம்பெறத் தொடங்கியுள்ளமைக்கான பல வரலாற்றுச் சான்றுகள் காணப்படுகின்றன.
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரமே கருதப்படுகிறது.
1915 மே 29 அன்று முதல் தொடர்ச்சியாக  கண்டியில் பெரும்பான்மை சிங்கள பௌத்த கும்பல் ஒன்று பள்ளிவாசல் ஒன்றைத் தாக்கியதுடன், பல முஸ்லீம்களின் வணிக நிறுவனங்களையும் சூறையாடினர்.
பின்னர் அரசியல் ரீதியாக 1915 யூன் 5 ஆம் திகதியன்று இக்கலவரம் முடிவுக்கு வந்தது என்றாலும் தொடர்ச்சியாக பேரினவாத சக்திகளின் இந்த இனசுக்கிரமிப்பு செயற்பாடுகள் ஆங்காங்கே அரும்புகளாக வெளிவருகின்றமை கண்கூடு.
பெரகரா என்றழைக்கப்படும் பௌத்த சமய நிகழ்ச்சிகளின் ஊர்வலங்கள் கம்பளை, கண்டி நகரங்களில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு முன்னே செல்லும் போது மௌனமாகச் செல்ல வேண்டும் என சில முஸ்லிம்கள் கோரியதே கலவரங்களுக்கு முக்கிய காரணியாக அமைந்தது.
ஆரம்பத்தில் முளைவிட்ட இந்த கலவரம் தொடர்பில் குடியேற்றவாத பிரித்தானிய ஆட்சியாளர்கள் படைத்துறைச் சட்டத்தை அமுல்படுத்தினர். அத்துடன் சிங்கள பேரினவாத தலைவர்களான டீ. எஸ் சேனானாயக்கா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா, டீ. எஸ் விஜேவர்தனா, டொக்டர் நெயிசர் பெரேரா, ஈ. டீ. த சில்வா, எச் அமரசூரிய, ஏ. எச். மொலமூறே உள்ளிட்ட பல சிங்களத் தலைவர்களைக் கைது செய்தது. எனினும், அப்போதைய தமிழ்த் தலைவராக செயற்பட்ட சேர். பொன்னம்பலம் இராமநாதன் இங்கிலாந்து சென்று பேச்சுவார்த்தைகள் நடத்தி அச்சிங்களத் தலைவர்களை விடுவித்தார்.
இராமநாதன் நாடு திரும்பியபோது சிங்களத் தலைவர்கள் துறைமுகத்தில் அவரை வரவேற்றதோடு அவரது குதிரை வண்டியின் குதிரைகளைக் கழற்றிவிட்டுத் தாமே காலி வீதி வழியாக அவரது வீடுவரை இழுத்துச் சென்றனர்.
இச்செயற்பாடு தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட ஒரு காரணமாக அமைந்தது என இலங்கை அரசியல் வரலாறுகள் கூறுகின்றன. எனினும் செய் நன்றி மறந்து அரசியல் அபிலாசைகளுக்காகவும் தமது சமூகம் சார்ந்தும் இலங்கை பேரினவாத சக்திகள் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீதான இன ஆக்கிரமிப்பு செயற்பாடுகளை மேற்கொண்டது.
தமிழ் மக்கள் மீதான இனசுத்திகரிப்பு நடவடிக்கைகளில் அரசாங்கம் ஓரளவுக்கேனும் திருப்தி கண்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக முஸ்லீம் சமூகத்தினர் மீதும் தமது அத்துமீறல்களை பிரயோகிக்கின்றது. நாட்டில் சிங்கள முஸ்லிம் அல்லது வேறு எந்த இனங்களுக்கிடையிலான மோதல்கள் நடைபெற்றாலும் அவற்றுக்கெல்லாம் பலியாடு தமிழ் மக்கள் என்றால் அது மிகையில்லை.
ஓட்டுமொத்த சிங்கள- முஸ்லிம் சமூகங்களின் மோதல்களின் பின்னணியில் தமிழ் மக்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே ஆம் சிங்கள முஸ்லிம் பகுதிகளில் தொடர்ச்சியாக கர்த்தால் கடையடைப்பு செயற்பாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும். குறித்த இரண்டு இனங்களும் தமிழர் பகுதிகளில் அத்துமீறி மேற்கொள்கின்ற தாக்குல்களால் தமிழ் மக்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியது.
தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்துவதற்காக மேற்கொண்ட போராட்டங்களை அதிகாரத்துக்கான போராட்டம் எனவும் அவற்றை ஒரு பயங்கரவாத அமைப்பாகவும் வரைவிலக்கணப்படுத்தியும், நடைபெற்ற போராட்டங்கள் சதுரங்கம் என கூறியவர்கள் இன்று பௌத்த முஸ்லிம் சமூகத்தினரின் கலவரங்கள் தொடர்பிலும் இடம்பெறுகின்ற வன்முறைகள் குறித்தும் எவ்வாறான கருத்துக்களை முன்வைக்கப்போகின்றனர்.
இலங்கை பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் மேல் இன ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆரம்பத்தில் வர்த்தகம், தொழில் முன்னுரிமைக்கான போட்டியாகவும் பின்னர் காலப்போக்கில் சிங்களப் பெரும்பான்மையினரின் வாக்குச்சீட்டிற்காகவும் திட்டமிட்டு இனவாதம் தூபமிடப்பட்டது.
இந்தப்பிழைப்பு வாதம் தொடர்ச்சியாக திட்டமிட்டு தமது அரசியல் இலாபங்களுக்காக மேற்கொள்ளப்படுகின்ற அதேவேளை இதன் செயற்பாடுகள் அரசியல் சாசனத்திலும் தொடர்ச்சியாக உள்வாங்கப்படுகின்றமை கவனிக்கத்தக்கது.
சிங்கள இனவாத கட்சிகள் திட்டமிட்ட முறையில் இனவாதத்தை தமிழ் மக்களின் மேல் தினித்தது போன்றே முஸ்லிம் மக்களின் மேலும் செலுத்தியது. 1978ல் சிறு தொகுதிகள் மூலம் தேர்தலில் தெரிவு செய்யும் முறை கைவிடப்பட்டு விகிதாசார தெரிவு முறை நாடாளுமன்றத்தில் அமுல்படுத்தப்பட்டது. இது முஸ்லீம்களின் முக்கியத்துவமான தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் பலத்தை இழக்கவைத்தது.
இவை மாத்திரமல்ல 76ம் ஆண்டு புத்தளம் பள்ளிவாசலும் அதன் அண்டைகிராமங்களும் தாக்கப் பட்டும் எரிக்கப்பட்டும் பல முஸ்லீம்கள் கொலலப்பட்டனர். 82ல் காலி நகரிலும் அரச பயங்கரவாதம் முஸ்லீம் மக்கள் மேல் ஏவப்பட்டது, அளுத்கம எனும் இடத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக மிக மோசமான இனக் கலவரம் நடந்துள்ளது. 
1983 ஆம் ஆண்டு கலவரத்தின் போதும், தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டமை இங்கே நினைவுகூரத் தக்கது. இனக் கலவரங்களின் போது தான், முதலாளித்துவ பொருளாதாரமும், இனவாத பாசிசமும் ஒன்றுடன் ஒன்று கை கோர்த்துக் கொள்கின்றன.
முஸ்லிம் மக்கள் கிழக்கு மாகாணத்தில் 33 சதவீதமும் மற்றும் அம்பாறை, யாழ்ப்பாணம், மன்னார் போன்ற மாவட்டங்களில் குறிப்படத்தக்க அளவு கணிசமான தொகையினரும் வாழ்ந்தனர். ஆனால் ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் சிங்களப் பிரதேசங்களில் உள்ள தொகுதிகளிலேயே சிதறி வாழ்ந்தனர்.
முஸ்லிம்களுக்கான தனிமாகாணக் கோரிக்கை, முஸ்லிம்கள் மிக அதிகமாக வாழும் அம்பாறை மாவட்டத்தை அடிப்படையாக கொண்ட தென்கிழக்கு மாகாணக் கோரிக்கை போன்றவையும் இதுவரையில் எட்டாக்கனியாகவே காணப்படுகின்றது.
தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் 1958 ஆம் ஆண்டு, தமிழரசுக் கட்சியினர் அஹிம்சா வழியில் சிறி எதிர்ப்பு போராட்டம் நடத்தினார்கள். அதற்கு எதிர்வினையாக சிங்கள காடையரினால் தமிழர்கள் தாக்கப் பட்டனர். அந்தக் காலகட்டத்தில் சிறி எதிர்ப்பு போராட்டம் இரண்டு தடவைகள் இடம்பெற்றன. இரண்டுக்கும் இடையில் குறைந்தது ஆறு மாத கால இடைவெளி இருந்தது. இரண்டாவது போராட்டமே தமிழரின் அரசியல் அபிலாசைகளுக்கான ஆரம்ப படிக்கல்லாக அமைந்திருந்தது.
“தமிழர்கள் எல்லோரும் படித்த மேட்டுக்குடி வர்க்கத்தினர். நிறுவனங்களை நடத்துவதிலும், அரச பதவிகளிலும் அவர்களது ஆதிக்கம் தான் நிலவுகின்றது. சிங்களவர்களை சுரண்டிப் பிழைக்கும் தமிழர்கள் மிகவும் தந்திரசாலிகள்.” போன்ற கருத்துகளை, சிங்கள இனவாதிகள், சிங்கள மக்கள் மனதில் இனவெறியை தூண்டுவதற்காக வேண்டுமென்றே பரப்பி வந்தனர்.
மறுபக்கத்தில், தமிழினவாதிகள், இதே கருத்துகளை தமக்கு சாதகமானதாக பார்த்தார்கள். தம்மை யூதர்களுடன் ஒப்பிட்டு சிந்திக்கப் பழகினார்கள்.
1958 மே 22 தொடக்கம் 25 வரையிலான நாட்களில், சிங்களப் பெரும்பான்மைப் பிரதேசமான, அனுராதபுரம், பொலநறுவையில் வாழ்ந்த தமிழர்கள் தாக்கப்பட்டனர். இன்று அங்கே ஒரு தமிழர் கூட வாழ முடியாதவாறு, இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டனர்.
மே 26 தொடக்கம் ஜூன் 3 வரையில், தமிழ்ப் பெரும்பான்மை பிரதேசமான வடக்கு, கிழக்கிற்கு கலவரம் பரவியது. அரச அலுவலகங்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டன. குறிப்பாக வடக்கில், சிங்களவர்கள் அடித்து விரட்டப்பட்டனர். இதுவும், ஏறாவூரில் நடந்த பெருந்தோட்ட முதலாளி செனவிரத்ன கொலையும், கொழும்பில் கலவரம் பரவ காரணமாக அமைந்தன.
ஏறாவூர் பகுதியில் மட்டுமே குறிப்பிடத்தக்க அசம்பாவிதங்கள் இடம்பெற்றன.
தண்டவாளம் கழற்றப் பட்டதால், பொலநறுவையில் இருந்து கிழக்கு நோக்கி வந்த ரயில் வண்டி தடம் புரண்டது. வாகனமொன்று டைனமைட் குண்டு வெடிப்புக்கு இலக்கானது.
பெருந்தோட்ட முதலாளியின் தனிப்பட்ட விரோதிகளே அவரை சுட்டுக் கொன்றிருந்த போதிலும், அன்றைய குழப்பகரமான சூழ்நிலையில், அடுத்த நாள் வானொலியில் உரையாற்றிய பிரதமர் பண்டாரநாயக்க, “செனவிரத்ன கொலையை தமிழர்களே செய்ததாக” பழி சுமத்தினார்.
பிரதமரின் தொலைநோக்கற்ற உரையானது, “தமிழர்களே முதலில் சிங்களவர்களை தாக்கினார்கள்.” என்ற தவறான நிலைப்பாட்டை உருவாக்க வழிவகுத்து விட்டது.
கொழும்பு நகரில் தமிழர்களின் கடைகள் கொள்ளையடிக்கப் பட்டன. கண்ணில் பட்ட தமிழர்கள் கொலை செய்யப் பட்டனர். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானார்கள். பல இடங்களில், “இது செனவிரத்ன கொலைக்கு பழிவாங்கல்” என்று நியாயம் கற்பிக்கப்பட்டது.
கொழும்புக்கு அருகில் உள்ள இந்துக் கோயில் ஒன்றினுள் வைத்து, இரண்டு பூசாரிகள் கொலை செய்யப்பட்டதையடுத்து யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும், தமிழர்கள்- சிங்கள விரோத வன்முறையில் இறங்கினார்கள். கிழக்கு மாகாணத்தில், பருவ காலத்திற்கு வந்து மீன்பிடிக்கும் சிங்கள மீனவர்கள் தாக்கப்பட்டனர்.
பண்டாரநாயக்காவின் தேர்தல் கால வாக்குறுதியான, 24 மணி நேரத்தில் சிங்களம் மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக்கும் சட்டம், 5 ஜூன் 1956 இல் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப் பட்டது.
தமிழர் மீதான தாக்குதல்கள் கொழும்பில் இருந்து ஆரம்பித்து, கரையோரமாக காலி வரை பரவியது. யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த சிங்களக் குடும்பங்களின் வருகை, கொழும்பு நகர கலவரத்தை தூண்டி விடுவதற்கு பிரதான காரணமாக அமைந்தது.
இதே நேரம் பொலநறுவை மாவட்டத்தில், திட்டமிட்ட படுகொலைகள் அரங்கேறின எழுபது தமிழர்களை வாள்களால் வெட்டிக் கொன்றனர். விவசாய அலுவலர்களாக கடமையாற்றிய அதிகாரிகளின் பங்களாக்களும் எரிக்கப் பட்டன.
அன்று பல சிங்களக் குடியேற்றக் கிராமங்களுக்கு தமிழ் அதிகாரிகள் நியமிக்கப் பட்டிருந்தனர்! ஆரம்பத்தில் அவை யாவும் அரசினால் முன்னெடுக்கப் பட்ட, விவசாய அபிவிருத்திக் கிராமங்களாக இருந்தன. பின்னர் தான், சிங்களவர்களை திட்டமிட்டு குடியேற்றும் அரசின் திட்டம் தெரிய வந்தது.
சிங்களவர்களை இனவழிப்பு செய்யும் நோக்கோடு தமிழர்கள் திரண்டு வருகிறார்கள்... என்பன போன்ற வதந்திகளை கேள்விப்பட்ட கல்லோயா குடியேற்றவாசிகள், அயல் கிராமங்களில் இருந்த தமிழர்களை தாக்கினார்கள். குறைந்தது நூறு தமிழர்களாவது, இனவெறித் தாக்குதலுக்கு பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இருப்பினும் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் கல்லோயா கிராமத்தின் அமைவிடம் காரணமாக, செய்தியின் வீரியம் பிற பகுதிகளில் அறியப்படவில்லை.
இவ்வாறாக வியாபார முரண்பாடு, உலகமயமாதல் போன்ற காரணங்களுக்கான போட்டித் தன்மையை ஏற்றுக்கொள்ள முடியாத அல்லது எதிர்த்துப் போராட முடியாத சிங்கள பேரினவாதிகள் இனவாத அரசியலை இலங்கையில் சட்ட ரீதியாக மேற்கொண்டு வருகின்றனர் என்றால் அது மிகையில்லை.
சர்வதேச நாடுகள் தொடர்ச்சியாக இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற இனசுத்திகரிப்பு நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தி வருகின்ற போதிலும் காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்வதாக தெரியவில்லை.
இறுதி யுத்ததின் போதும் அல்லது சிங்கள முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான போராட்டங்களின் போதும் வெறுமனே கண்டனங்களையும் குழுக்களையும் அமைத்து விசாரணைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுகின்றமை வேதனைக்குரியதே.
தர்கா நகர், பேருவளை மற்றும் வெலிப்பென்ன, அளுத்கம ஆகிய பகுதிகளிலுள்ள முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளுக்கு முஸ்லிம் தலைவர்ளும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்ற நிலையில், முஸ்லிம் விரோதிகளை ஆதாரத்தோடு நிரூபித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உறுதி! ஏன்ற  செய்திக்குப் பின்னாலும் இலங்கை ஜனாதிபதி சிங்களவர் பால் குற்றமிருப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது நிருபணமே.
முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள் மேலோங்கிச் செல்வதானது ஒரு பெரிய பிரச்சினை இதற்கு அரசு அனுமதி கொடுக்கிறது என்றல்ல, அமைதியாக இருப்பது இதற்கு அனுமதியை கொடுத்துள்ளது போல் தோன்றுகின்றது. பிறருக்கு துன்பம் விளைவிக்கும் அமைப்புகளுக்கும் சங்கங்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பற்றி நாம் சற்று யோசிக்க வேண்டும். இவ்வாறு நடப்பதால் அச்செயற்பாடுகளுக்கு அரசு சார்பாக உள்ளது போன்று தோன்றுகின்றது எனவும் “ராவய” பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் பிரபல எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான விக்டர் ஐவன் விடிவெள்ளிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போது குறிப்பிட்டுள்ளமையையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அத்துடன்  இலங்கையின் அரசியல் வரலாற்றில் இனங்களிடையே காட்டிக் கொடுப்பிற்காகவும் குறுகிய இலாபத்திற்காக சோரம் போவதும் இனங்களிடையே பரஸ்பர நம்பிக்கையின்மையையே வளர்த்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள தமிழ் சமூகத்துக்கு மத்தியில் பல தசாப்தமாக தொடர்ந்த யுத்தம் ஓய்ந்துள்ள நிலையில் இன்னொரு சிறுபான்மை சமூகத்துடன் முரண்படுவது மிகப் பயங்கரமான தவறான விடயம் எனவும் விக்டர் ஐவன் தமது செவ்வியொன்றின் போது மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி “ராவய” பத்திரிகையில் பிரசுரமான கட்டுரை ஒன்றில் 1915, 1958, 1983 காலங்களில் ஏற்பட்ட கலவரத்துக்கு முன்னர் நிலவிய சூழ்நிலையை ஒத்ததாகவே தற்போதைய நிலையும் உள்ளது எனவும் “ராவய” பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் பிரபல எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான விக்டர் ஐவன் மேலும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவை எவ்வாறிருப்பினும் இலங்கையில் இனங்களுக்கிடையில் பொருளாதார ரீதியிலான போட்டித்தன்மையை எதிர்த்து நிற்க துணிவில்லாத பேரினவாத சக்திகள் தொடர்ச்சியாக இனவாத கிளர்ச்சிகளை மேற்கொண்டு இனசுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன என்றால் அது மிகையில்லை.
ஜெ.சுவாதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக