இந்திய சாலைகளின் வரலாறு, ஹரப்பா நாகரீக காலமான கி.மு4000-த்தில் இருந்தே தொடங்கியிருக்கிறது.
பண்டைக் கால அரசர்கள் சாலைகளை அமைப்பதற்கு பெரிதும் முன்னுரிமை கொடுத்துள்ளனர்.
அசோகர், ஹர்சர், முகாலயர்கள் ஆகியோர் காலத்தில் சாலைகள் மேலும் வளர்ச்சி பெற தொடங்கியுள்ளன.
தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலைகளுக்கு முன்னோடி ஷேர்ஷா என்பவர் தான். இவர் 1540ம் ஆண்டிலேயே அப்போதைய இடைக்கால இந்தியாவில் மிகப் பெரிய சாலையான க்ராண்ட் ட்ரங்க் என்றழைக்கப்படும் சாலையை உருவாக்கியுள்ளார்.
பெஷாவர் முதல் டெல்லி வரை அமைத்த இந்த க்ராண்ட் ட்ரங்க் சாலை இன்று 2500கி.மீ தொலைவுள்ள ஒரே தொடர்ந்த சாலையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு சாலைகள் இன்றியமையாதவை. குறைந்த தூரம் உள்ள இடங்களுக்கு பொருட்களை எடுத்துச் செல்லவும், பயணம் செய்யவும் வீட்டிற்கு வீடு பொருட்களை அனுப்பவும் சாலைகள் பெரிதும் உதவுகின்றன.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்திய தேசிய நெடுஞ்சாலைகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட தன்னாட்சியுடைய ஓர் இந்திய அரசு நிறுவனமாகும்.
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள்
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் நடுவண் அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படுகின்றன.
இந்தச் சாலைகளில் பெரும்பாலானவை இரு வழிப்பாதைகள். இந்தியா முழுவதும், 66,590 கிமீ தொலைவு சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக இருக்கின்றன.
மொத்தச் சாலைக் கட்டமைப்பில் தேசிய நெடுஞ்சாலைகளின் பங்கு 2 சதவீதமாகும். ஆனால் அவை 40 சதவீத போக்குவரத்தை கையாளுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் நீண்ட தேசிய நெடுஞ்சாலை- NH 7
இந்தியாவிலேயே மிக நீளமான தேசிய நெடுஞ்சாலையாக தேசிய நெடுஞ்சாலை எண் 7 (NH7) இருக்கிறது. இதன் நீளம் 2369 கி.மீ.
இது இந்தியாவின் வடக்கே உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் தொடங்கி தெற்கே தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரியுடன் இணைகிறது.
இந்தியாவின் சிறிய நெடுஞ்சாலை- NH 47A
இந்தியாவின் மிகக் குறைவான தேசிய நெடுஞ்சாலையாக தேசிய நெடுஞ்சாலை எண் 47A (NH47A) இருக்கிறது. இதன் நீளம் 6 கி.மீ.
இது கேரள மாநிலத்திலிருக்கும் எர்ணாகுளத்தைச் சேர்ந்த குண்டனூரையும் கொச்சிதுறைமுகம் அமைந்துள்ள வெல்லிங்டன் தீவையும் இணைக்கிறது.
இந்திய மாநில நெடுஞ்சாலைகள்
இந்திய மாநில நெடுஞ்சாலைகள், மாநில அரசுகளால் இடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
இவை தேசிய நெடுஞ்சாலைகளிலிருந்து வேறுபட்டவை, ஓர் மாநிலத்தின் முக்கிய நகரங்கள், ஊர்கள், மாவட்டத் தலைநகரங்களை ஒன்றுக்கொன்று மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைத்திட இந்த சாலைகள் இடப்பட்டுள்ளன.
இந்திய விரைவுவழி
விரைவுவழி (expressway) என்பது அணுக்கம் கட்டுப்படுத்தப்பட்ட நெடுஞ்சாலையாகும்.
விரைவுவழிகள் சுங்கம் இன்றி இலவசச் சாலைகளாகவும் இருக்கலாம். விரைவுவழிக்கு செல்லவும் வெளியேறவும் சாலை வடிவமைப்பின்போதே தனி பக்கச்சாலைகள் அமைந்திருக்கும்.
இதனால் விரைவாகச் செல்லும் போக்குவரத்திற்கு தடங்கலின்றி விரைவுவழிக்குள் செல்லவும் வெளியேறவும் இயலும்.
இவை ஆறு அல்லது எட்டு தடவழிச் சாலைகளாக உள்ளன. இந்தியாவில் 600 கிமீ நீளமுள்ள விரைவு வழிகள் உள்ளன.
தங்கநாற்கரச் சாலைத் திட்டம்
தங்கநாற்கரச் சாலைத் திட்டம் என்பது இந்தியாவின் நான்கு முக்கிய மாநகரங்களான டெல்லி,மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகியவற்றை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளை, நான்கு வழிப்பாதைகளாக மாற்றும் திட்டம் ஆகும்.
மேற்கூறிய நான்கு நகரங்களையும் இணைக்கும் கோடு நாற்கரமாகக் காணப்படுவதால் இது தங்கநாற்கரச் சாலைத் திட்டம் எனப் பெயரிடப்பட்டது. இதன் மொத்த நீளம் 5,846 கிலோ மீற்றர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக