கட்டைக் கூத்துக்கலையை காக்கும் கிராமம்! தமிழின் நாடக மரபில் கூத்தின் பங்கு முதலிடத்தில் இருந்தது. புராண இதி காசங்களை கூத்து வாயிலாகவே மக்கள் அறியும் வாய்ப்பினை கூத்துக்கலைஞர்கள் நாடெங்கும் நிகழ்த்திக் காட்டிய பெருமை கூத்துக் கலைக்கே ஆதி காலத்தில் இருந்து வந்தது. தற்போது நவீன தொழில் நுட்ப இயந்திர உலகத்தில் கூத்து அரிதாகி விட்டது. நாடகம், சினிமா, கதைத்தொடர்கள் என மக்கள் மனதுக்குள் மாற்றத்தை அடையவைக்கும் காரணிகளாகி விட்டன. இந்நிலையில் கூத்துக் கலையினை உயர்த்திப் பிடித்து, ஆண்டுதோறும் கூத்துப்பயிற்சி நடத்தி மாணவர்களுக்குக் கூத்துக் கலையினை கற்றுத் தரும் தமிழகத்தின் சிறந்த பள்ளியாக புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்துப் பயிற்சிப் பள்ளி விளங்கி வருகிறது.
பழங்கலையின் புராதனத்தைப் பாதுகாத்துக் கொண்டே இக்கால நவீனங்களோடும் ஐக்கியப்படுத்திக்கொண்டும் கூத்து மரபினை பாதுகாத்து வரும் புரிசை கிராமமும், புரிசை மண்ணும் அடவு காக்கும் பூமியாக விளங்கி வருவது உலகம் அறிந்த ஒன்றாகும். தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் சின்னஞ்சிறு ஊர் இது. கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஜனவரியில் தொடங்கி மார்ச் மாதம் வரை பயிற்சியும், ஒத்திகையும் நடத்தி கூத்து அரங்கேற்றி வரும் நிலையில், நடப்பு 2014ஆம் ஆண்டிலும் ஜனவரியில் தொடங்கி 'பாஞ்சாலி சபதம்' எனும் கூத்து கடந்த மார்ச் மாதம் 30ஆம் திகதி இரவு அரங்கேற்றம் நடைபெற்றது. தங்கள் குடும்பத்தின் ஐந்தாவது தலைமுறையின் நீண்ட பயணத்தின் அடிச்சுவட்டில் கலைமாமணி கண்ணப்ப சம்பந்தன் கூத்துக் கலைஞர்களை உருவாக்கும் பயிற்சியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு மாணவர்களை இயக்கிய விதம் மிகுந்த வாஞ்சைக்குரியது.
மாணவர்களின் 'பாஞ்சாலி சபதம்' தெருக்கூத்து கட்டியங்காரன் துவங்கி, துரியோதனன் , கர்ணன், துச்சாதனன், சகுனி, விதுரன், திருதராஷ்ட்ரன், தருமன், பீமன், அர்ச்சுனன், திரௌபதை ஆகிய அனைத்துக் கதை மாந்தர் பாத்திரங்களும் மிக இயல்பாக இருந்ததும், அடவு பிசகாமல் ஆடிய கால்களும் பாராட்டத்தக்கது. பின்னரங்கின் பின்பாட்டில் கூத்துக் கலைஞர்களை இன்னும் மெருகேற்றிட தரையில் அமர்ந்திருந்த மக்களை தன்வயப்படுத்தியது கூத்துக்கு சிறப்பைத் தந்தது. மட்டிலா மணிகள் பூண்டு பரிச சல்லடமும் கட்டிசட்டமாய் சாலும் போலும் தகித்ததோர் வயிறும் இஷ்டமாய் இளகோர் போற்றும் எழில்துரியன் வாசல் காக்கும்கட்டியங்காரன் வந்து கணசபை மேவினானே...எனத் தொடங்கி கட்டியங்காரனாக வந்த அரிஷ்ஓரியன் துரியோதனன் கர்ணன், துச்சாதனன், சகுனி என வந்த எஸ்.பிரதீப்குமார், பாண்டியன் , செந்தில், மா. பசுபதி, பொ. பாலமுருகன் ஆகியோரின் களத்தில் விதுரன் , திருதராஷ்ரன், தருமனாக பி. இளையராஜா, ராஜன், ஆரிசன் ஆகியோரின் ஆட்டத்தில் பீமன், அர்ச்சுனனாக கா. சரவணன், பாண்டியன் கம்பீரத்தில் திரௌபதையாக நடித்த ஆதிரையன், பதைபதைப்பில் தெள்ளிய நிரோடையான நடிப்பிலும் பாஞ்சாலி சபதம் கெம்பீரத்துடன் நடந்தது மிகவும் சிறப்பு.
இதே கூத்து மார்ச் 31-ல் பாண்டிச்சேரி ரோமன் ரோலண்டு சாலையிலுள்ள இந்தியன் ஓஸ்ட்ரம் தியேட்டரில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.துச்சாதனின் துகிலுரி பாடலின் இறுதியாக இழுக்க இழுக்க பட்டாய் வருகுதே திரௌபதை ஆடை இழுத்த கைகால் அசந்து போகுதே! என துவங்கும் பாடலின் வழி துச்சாதனின் இறுதி அத்தியாயம் முடிவுற்ற நிலையும், பின்னர் பீமன், அர்ச்சுனன், திரௌபதையின் வீர சபதங்களின் ஊடே கூத்து நிறைவு பெறுகிறது என்பதை பார்த்தவர் உணர்ந்து பாராட்டும் படியாக இருந்தது.நிகழ்வினை நீங்கள் தமிழகம் வரும்போது கட்டாயாம் பாருங்கள்.
நன்றி - யதுகுலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக