தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 20 ஜூன், 2014

முகவரியை தொலைத்தவர்கள் (வீடியோ இணைப்பு) !

நாட்டில் நடக்கும் போர், வன்முறையால் உடமைகள், உரிமைகள், உறவுகள், இருப்பிடம் என அனைத்தையும் இழந்தவர்கள் அகதிகளாக உருவெடுக்கின்றனர்.
அகதிகள் தினம்
யூன் 20 ம் திகதி உலக அகதிகள் தினமாக (World Refugee Day) நினைவுகூரப்படுகிறது. ஆரம்பத்தில் யூன் 20ம் திகதி ஆப்பிரிக்க அகதிகள் தினமாகத்தான் Africa Refugee Day நினைவு கூறப்பட்டது.
பின்னர் இத்தினமானது 2000ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் United Nations General Assembly சிறப்புத் தீர்மானமொன்றின்படி, ஆப்பிரிக்க அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள்ளும், பிற நாடுகளுக்குள்ளும் இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கியமான நோக்கமாகும்.
அகதிகள் உருவாவதன் காரணம்
ஒரு நாட்டில் தங்களுக்கு வேண்டிய உரிமைகள் மறுக்கப்படும் போது, ஒருவர், இருவராக இணைந்து அந்த உரிமைகளை கேட்க ஆரம்பிக்கின்றனர். பின்னர் ஒரு குழுவினராக இணைந்து போராட்டத்தை ஆரம்பிக்கின்றனர்.
இந்த போராட்டங்கள் போராக வெடிக்கும்போது, நாடே பற்றி எரிகிறது, இதில் நாடு பற்றி எரிவதை விட அங்கு வசிக்கும் மக்கள் தான் அதிகமாக அல்லல்படுகின்றனர்.
இதன் விளைவாக உடமைகள், உறவுகள் என எல்லாவற்றையும் இழக்கும் மக்கள் இறுதியில் தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக சொந்த நாட்டினை விட்டு பிற நாட்டிலாவது தங்களுக்கு ஒரு இடம் கிடைக்காதா என்று செல்கிறார்கள்.இவர்களே அகதிகள் என முத்திரை குத்தப்படுகின்றனர்.
அகதிகளின் எண்ணிக்கை
2012ம் ஆண்டு மட்டும் 7.6 மில்லியன் மக்கள் அகதிகளாகியுள்ளனர். 1994 ஆண்டுக்குப் பிறகு அதிகரித்த மிகக் கூடிய தொகை இதுவாகும்.
இன்றைய சூழ்நிலையில் அதிகளவு அகதிகளை உருவாக்கி வரும் நாடாக சிரியா முன்னேறி வருகின்றது. மொத்த அகதிகளில் 55% வீதம் ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இருந்தே இடம்பெயர்ந்து வருகின்றனர்.
மேலும் உலகில் அதிகளவு அகதிகளை (81%) உள்வாங்கும் நாடுகளாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளே திகழ்கின்றன. இது 10 வருடங்களுக்கு முன்பிருந்ததை விட 11% வீதம் அதிகமாகும்.
ஒவ்வொரு முறை நாம் கண் சிமிட்டும் போதும் அதாவது 4.1 செக்கன்களுக்கு ஒருமுறை ஒரு அகதி தற்போது உருவாகி வருவதாகத் திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகில் அதிக அகதிகளைத் தோற்றுவிக்கும் நாடாக 32 வருடங்களாக ஆப்கானிஸ்தான் விளங்கி வருகின்றது. இதில் 95% வீதமான ஆப்கான் அகதிகள் ஈரானிலும் பாகிஸ்தானிலும் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இதற்கு அடுத்த 2ம் இடத்தில் சோமாலியாவும் 3வது இடத்தில் ஈராக்கும் 4வது இடத்தில் சிரியாவும் 2012ம் ஆண்டில் இடம்பிடித்துள்ளன.இதேவேளை 2013ம் ஆண்டு இறுதிக்குள் இன்னும் 2 மில்லியன் மக்கள் சிரியாவில் இருந்து இடம் பெயரக் கூடும் என்றும் இவர்களில் கணிசமான அளவினரை ஐரோப்பிய நாடுகளும் ஏற்க வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவுக்கு அடுத்த இடத்தில் அதிகளவு அகதிகள் மாலி மற்றும் கொங்கோ ஆகிய நாடுகளில் இருந்து இடம் பெயர்ந்து வருவதாகவும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
முகவரியை தொலைத்தவர்கள்
பிறந்து வளர்ந்த தேசத்தை விட்டு, பஞ்சத்தில் அடிபட்டு, தஞ்சம் அடைய இடம் தேடி, அகதிகள் என்ற முத்திரையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அவலம்.
துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்ததால் நிம்மதி இழந்த இவர்கள், நாடு கடத்தப்பட்டவர்கள் அல்ல; நலம் நாடி வந்தவர்கள்.
வன்முறையால் விரட்டப்பட்டவர்கள். போரில் உயிர் பிழைத்து, சொந்த நாட்டில் இருண்ட வாழ்க்கை வாழ்ந்து, அகதியாய் வந்த நாட்டிலும் உரிமைகள் இல்லை. என்றாவது ஒரு நாள் விடியும் என்ற நம்பிக்கையில் இவர்களது வாழ்க்கை, காலத்தின் போக்கில் கரைந்து கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக