உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளின் கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டன.
இன்னும் ஒரு மாத காலம் யாரையும் கட்டுப்படுத்த முடியாத அளவு மகிழ்ச்சி துள்ளலில் குதிக்க ரசிகர்கள் தயாராகி விட்டனர்.
இந்தியாவில் பெரும்பாலானோருக்கு கிரிக்கெட் ஜூரம் என்றால் உலகில் முக்கால்வாசிப் பேருக்கு கால்பந்துக் காய்ச்சல்தான் அதிகம்.
ரசிகர்கள் தொலைக்காட்சி முன்பும், முடிந்தால் போட்டி நடக்கும் மைதானங்களில் குவிந்தும் குதூகலிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
உலகெங்கும் உள்ள இளசுகளின் கால்களும், கைகளும், வாய்களும் தாளம் போட ஆரம்பித்து விட்டன. இப்படிப்பட்டர்களுக்கு உலகக்கிண்ண கால்பந்துப் போட்டி வந்து விட்டால் போதும் போட்டது போட்டபடி தான் இருக்கும்.
எப்போது தான் இந்த யூன் 12 ஆம் திகதி வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் குறைவில்லை. எப்படியொ உலகையே உறைய வைக்கப் போகிறது இந்த உலகக்கிண்ணப் போட்டிகள்.
யார் எத்தனை கோல் அடிப்பார்கள். எந்த அணிக்குக் கிண்ணம், அந்த அணி வென்றால் இது செய்கிறேன் என்ற பந்தயங்களும், பேச்சுகளும், ஜோசியங்களும் களைகட்டியிருக்கும்.
உலகக்கிண்ண கால்பந்து போட்டி எவ்வளவு அசத்தலாக இருக்குமோ அதை விட அசத்தல்காரர்கள் அதைப் பார்க்க வரும் ரசிகர் கூட்டம்.ஆண்கள் மட்டுமல்ல, பெண் ரசிகைகளும் ஒரு கலக்கு கலக்குவார்கள்.
பிரமிக்க வைக்கும் பிரேசில்
கால்பந்துக்காக உயிரையே கொடுக்கத் துணியும் ரசிகர்களைக் கொண்ட பிரேசில் நாட்டில்தான் 2014ம் ஆண்டு உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது.
இதை 2007ம் ஆண்டு அக்டோபர் 30ம் திகதி ’ஃபிபா’ எனப்படும் உலககால்பந்து சம்மேளனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
32 அணிகளின் மோதல்
உலகக்கிண்ணத் தொடரில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதில் போட்டியை நடத்தும் நாடான பிரேசில் தானாகவே போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றது. மற்றவர்கள் கடுமையான் தகுதிப் போட்டிகள் மூலம் தகுதி பெற்றார்கள்.
இடம்பெறும் அணிகள்
அவுஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், தென் கொரியா, அல்ஜீரியா, காமரூன், கானா, ஐவரி கோஸ்ட், நைஜீரியா, கோஸ்டா ரிகா, ஹோண்டுராஸ், மெக்ஸிகோ, அமெரிக்கா,
அர்ஜென்டினா, பிரேசில், சிலி, கொலம்பியா, ஈகுவடார், உருகுவே, பெல்ஜியம், போஸ்னி ஹெர்ஸகோவினா, குரோஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி,
கிரீஸ், இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ரஷ்யா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள்தான் இந்த உலகக்கிண்ணப் போட்டியில் மோதப் போகின்றன.
வந்தாச்சு நெல்லி
கடந்த உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் போது 'பால்' என்று பெயரிடப்பட்ட ஆக்டோபஸ், அணிகளின் வெற்றியை கணித்தது.
தண்ணீர் தொட்டிக்குள், விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் கொடிகளை வைத்து ஆக்டோபஸ் அதில் எந்த கொடியை தொடுகிறதோ அந்த கொடியையுடைய நாடுதான் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டது.
ஆக்டோபஸ் தொட்ட கொடிக்குறிய நாடுதான் அன்றைய போட்டிகளில் வெற்றி பெற்று வந்தது. இந்நிலையில் போட்டித்தொடர் முடிந்த சில நாட்களிலேயே ஆக்டோபஸ் உயிரிழந்தது.
இதைத் தொடர்ந்து விளையாட்டு ஆர்வலர்களின் மனக் குறையை நீக்க ஒரு உயிரினம் ரெடியாகிவிட்டது. ஜெர்மனியில் உள்ள 'நெல்லி' என்ற பெயர் கொண்ட யானைதான் இந்த உலகக்கிண்ணத்தின் 'ஜோதிட திலகம்'.
கோடிகள் கொட்டும் உலகக்கிண்ணம்
உலகக்கிண்ணம் வெல்லும் அணிக்கு ரூ.210 கோடி பரிசு தொகை வழங்கப்படும். கடந்த முறை உலகக்கிண்ணம் வென்ற ஸ்பெயின் அணிக்கு வழங்கப்பட்ட பரிசு தொகையை விட இது 17 சதவீதம் கூடுதலாகும்.
சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு 4927 கிராம் எடை கொண்ட தங்க கிண்ணமும் வழங்கப்படும். 2வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.150 கோடியும், 3வது இடத்தை பிடிக்கும் நாட்டுக்கு ரூ.132 கோடியும், 4வது இடத்துக்கு ரூ.120 கோடியும் பரிசு தொகையாக வழங்கப்படும்.
கால் இறுதியில் வெளியேறும் 4 அணிகளுக்கு தலா ரூ.84 கோடியும், 2வது சுற்றில் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.54 கோடியும், முதல் சுற்றில் வெளியேறும் 16 அணிகளுக்கு தலா ரூ.48 கோடியும் பரிசாக வழங்கப்படும்.
இந்த போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.3456 கோடியாகும். கடந்த உலகக்கிண்ணத்தில்(2010) வழங்கப்பட்ட பரிசு தொகையில் இருந்து 37 சதவீதம் கூடுதலாகும்.
கனவுகள் அணி
டுவிட்டர் பயன்படுத்துவோரின் பயன்பாட்டை வைத்து, உருவாக்கப்பட்ட கனவு அணியில் ரோனால்டோ, ரூனே, நெய்மார் ஆகியோர் முக்கிய வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களில் அவர்கள் டுவிட்டர் வலைத்தளத்தில் எந்தெந்த வீரரின் பெயர்களை அதிகம் பயன்படுத்தினர் என்பதை வைத்து கனவு அணியை டுவிட்டர் உருவாக்கி அதை இன்று வெளியிட்டுள்ளது.
போட்டிகள் நடைபெறும் இடங்கள்
ரியோடிடி ஜெனீரோ, பிரேசிலியா, சாவோ பாலோ, போர்டாலெஸா, பெலோ ஹாரிசான்டே, சால்வடார், போர்டோ அல்கெரே, ரெசிபி, குயாபா, மனாஸ், நடால், கரிடிபா ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறும்.
முதல் போட்டி
தொடக்க நாளான யூன் 12ம் திகதி ஐந்து முறை சாம்பியனான பிரேசிலும், குரோஷியாவும் சாவ் பாவ்லோ நகரில் மோதுகின்றன.
நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணி முதல் சவாலை நெதர்லாந்துடன் (யூன் 13ம் திகதி) தொடங்குகிறது. முன்னாள் சாம்பியன் ஜெர்மனி அணி யூன் 16ம் திகதி போர்ச்சுகல்லை சந்திக்கிறது.
உலகக்கிண்ண போட்டிகள்
காலிறுதிப் போட்டிகள் யூலை 4 மற்றும் 5 ஆகிய திகதிகளில் நடைபெறும். யூலை 8 மற்றும் 9 ஆகிய திகதிளில் இரண்டு அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும். 3வது இடத்துக்கான போட்டி யூலை 12ம் திகதி நடைபெறும்.
யூலை 13ம் திகதி இறுதிப் போட்டி கிண்ணத்தை பெறப் போகும் இறுதிப் போட்டி நடைபெறும்.
21 நாட்டுத் தலைவர்கள்
கால்பந்து தொடக்க விழாவில் 21 நாட்டு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். ரஷிய அதிபர் புதின், ஜேர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் உள்பட பல நாட்டு தலைவர்கள் உலகக்கிண்ணப் போட்டியின் தினங்களில் கலந்து கொண்டு போட்டியை ரசிக்கிறார்கள்.
பிரிவுகள் விவரம்
அணிகள் எந்தெந்த பிரிவில்(8 பிரிவு) இடம் பெறுவது, யார்-யாருடன் மோதுவது என்பதை நிர்ணயிக்கும் குலுக்கல் முறை(டிரா) பிரேசிலின் பாயாவில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக மறைந்த தென்ஆப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சியுடன் குலுக்கல் நடைபெற்றது. இதன் முடிவில் ஏ பிரிவில் போட்டியை நடத்தும் பிரேசில் இடம் பெற்றுள்ளது.
ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் விவரம் வருமாறு:-
ஏ பிரிவு: பிரேசில், குரோஷியா, மெக்சிகோ, கேமரூன் பி பிரிவு: ஸ்பெயின், நெதர்லாந்து, சிலி, ஆஸ்திரேலியா சி பிரிவு: கொலம்பியா, கிரீஸ், ஐவரி கோஸ்ட், ஜப்பான் டி பிரிவு: உருகுவே, கோஸ்டா ரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி இ பிரிவு: சுவிட்சர்லாந்து, ஈகுவடார், பிரான்ஸ், ஹோன்டுராஸ் எப் பிரிவு: அர்ஜென்டினா, போஸ்னியா-ஹெர்சகோவினா, ஈரான், நைஜீரியா ஜி பிரிவு: ஜெர்மனி, போர்ச்சுகல், கானா, அமெரிக்கா எச் பிரிவு: பெல்ஜியம், அல்ஜீயா, ரஷியா, கொரியா.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக